ஹெச்.ஐ.வி பாதித்தவர்களுக்குச் சிகிச்சை, ஆதரவு, அடைக்கலம்! - கோவையில் ஒரு நிஜ ‘மெர்சல்’ டாக்டர் #RealMersalDoctor

ரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல, மருத்துவத்துறையிலும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது `மெர்சல்.’ அரசு மருத்துவமனைகளின் அவலங்கள், தனியார் மருத்துவமனைகளின் வணிக நோக்கு... என மருத்துவம் சார்ந்த பல பிரச்னைகளை விமர்சித்திருக்கிறது இந்தத் திரைப்படம். இந்த விமர்சனங்கள் சரியா, தவறா என்ற விவாதங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டேயிருக்கின்றன. ஆனால், `மருத்துவத்தைச் சேவை மனப்பான்மையுடன், செய்யும் மாறன் போன்ற `அஞ்சு ரூபாய்’ டாக்டர்கள் இருக்கிறார்களா?’ என்று கேட்டால் மெர்சல் மாறனைவிடவும், சேவை மனப்பான்மை நிறைந்த டாக்டர்கள் இருக்கிறார்கள் என்பதே பதிலாகக் கிடைக்கிறது. ஐந்து ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை குறைந்த ஃபீஸ் வாங்கிக்கொண்டு, மருத்துவம் பார்ப்பவர்கள், பீஸே வாங்காமல் சிகிச்சையளித்து, நோயாளிகளின் போக்குவரத்துச் செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பும் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்தான் கோவையைச் சேர்ந்த டாக்டர் மகாதேவன். 

டாக்டர் மகாதேவன்

உயிர்க்கொல்லியான ஹெச்.ஐ.வி-க்குக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இலவசமாக சிகிச்சையளித்து வருகிறார் டாக்டர் மகாதேவன். இலவச சிகிச்சை மட்டுமல்ல, அவர்களுக்குத் தேவைப்படும் மருந்துகளை இலவசமாகத் தருவது, அவர்களுக்குப் பண உதவிசெய்வது, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளைப் படிக்கவைப்பது என்று ரியல் `மெர்சல்’ அரசனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

மகாதேவன் கடந்த ஆண்டு வரை தனது கிளினிக்கில், ஓர் உண்டியலை வைத்திருந்தார். அதை அவர் தனக்காக வைத்திருக்கவில்லை. எட்டிமடையில் இருக்கும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஹோமில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கான உண்டியல் அது. தன்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களில் விருப்பமுள்ளவர்கள் அதில் காசு போடலாம். அந்தப் பணம் முழுவதும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கே போய்ச் சேரும்.

கடந்த ஆண்டு இவரது கிளினிக்குக்கு வந்த ஒரு குழந்தை அந்த உண்டியலைத் தெரியாமல் உடைத்துவிட்டது. அதன் பிறகு வேறு உண்டியல் எதுவும் அங்கே வைக்கப்படவில்லை. அதற்காக இந்த உதவிகள் தடைபடவில்லை; இப்போது  உண்டியல் இல்லாமலேயே தொடர்கின்றன.

தனது இறப்பால், கோவையையே கண்ணீரில் கரையவைத்த, `20 ரூபாய் டாக்டர்’ பாலசுப்ரமணியத்தின் நண்பர்தான் மகாதேவன். அவரைச் சந்திக்க, கோவை, கிராஸ்கட் ரோட்டிலுள்ள அவரது கிளினிக்குக்குச் சென்றோம். கிளினிக்கில் நல்ல கூட்டம். அங்கு பணிபுரியும் பெண் நம்மைக் காத்திருக்கச் சொன்னார். அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு டாக்டர் மகாதேவனைச் சந்தித்தோம்.

வெகு இயல்பாகத் தன்னைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் மகாதேவன். “நான் கன்னியாகுமரிக்காரன். படிச்சது திருநெல்வேலி. ஹெச்.ஐ.வி-க்கு மருந்து கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி, உலகமே அதை நினைச்சு பயந்தது. ஹெச்.ஐ.வி வந்தா அவ்வளவுதான் என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் இருந்துச்சு. ஏன்... பல டாக்டர்களேகூட ஒரு புரிதல் இல்லாமதான் இருந்தாங்க. அதுதான், என்ன யோசிக்கவெச்சுது. பயிற்சி எடுத்தேன். திருநெல்வேலியில ஹெச்.ஐ.வி-யால பாதிக்கப்பட்ட முதல் நோயாளியைப் பார்த்தேன். ஆனா அவர் இறந்துட்டார்.

கொஞ்ச நாள் கழிச்சு கோவைக்கு வந்தேன். கோவை அரசு மருத்துவக் கல்லூரியில பேராசியர் பணி. சாயங்காலம் கிளினிக். ஆரம்பத்துல ஃபீஸ்னு கொஞ்சம் பணம் வாங்கிட்டுதான் இருந்தேன். ஒருநாள் ஹெச்.ஐ.வி-யால பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், ஓர் ஆணும் வந்தாங்க. அவங்க குடும்பம் அவங்களை ஒதுக்கிவெச்சுடுச்சு. அந்த விரக்தியில, கவனிக்க ஆளில்லாம அவங்க இறந்துட்டாங்க. அது என் மனசை ரொம்ப பாதிச்சுது.

அப்பறம் ஒருநாள் ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்ட இன்னொரு பெண் என்கிட்ட வந்தாங்க.மிடில் க்ளாஸ் ஃபேமிலி. அந்தப் பெண்ணோட மகள் படிக்க நான் உதவி செஞ்சேன். அதனால அந்தப் பெண்ணால மருத்துவ சிகிச்சையைத் தொடர முடிஞ்சுது. அப்புறம் அந்தப் பெண்ணோட மகளுக்கு வேலைக் கிடைச்சுது. ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இந்தச் சம்பவத்துப் பிறகுதான் ஹெச்.ஐ.வி-யால பாதிக்கப்பட்டவங்களுக்கு ஏதாவது பண்ணணும்னு யோசனை வந்தது.

டாக்டர் மகாதேவன் மருத்துவமனை

கவர்மென்ட்ல வேலை. நல்ல சம்பளம். எனக்குப் பெருசா ஆசை எதுவும் இல்லை. அதனால, மத்தவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவியைச் செய்யறதுல எனக்குப் பிரச்னை இல்லை. என் தாத்தா ஆயூர்வேத மருத்துவர். அவர் வரும் நோயாளிகளுக்குச் சாப்பாடு போட்டு, காசு இல்லாட்டி, காசு கொடுத்து அனுப்புவார். அந்த நல்லப் பழக்கம் எனக்கும் வந்துடுச்சு.

ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டு வர்றவங்கள்ல பலரை ஹோம்ல சேர்த்துவிட்டிருக்கேன். அவங்களை அடிக்கடிப் போய் சந்திப்பேன். நான் சேர்த்துவிட்டவங்கள்ல ஒரு பெண் நர்ஸா இருக்காங்க. ஒரு பையன் இன்ஜினீயர், இன்னொரு பெண் டீச்சருக்குப் படிச்சுட்டு இருக்காங்க. அவங்க எல்லாரும் என்னை அப்பானுதான் கூப்பிடுவாங்க. ஹெச்.ஐ.வி-யால பாதிக்கப்பட்டவங்களுக்காகவே, இங்கே இருக்குற நிர்மலா காலேஜோட சேர்ந்து, ஒரு நிகழ்ச்சி நடத்துவோம்.

அதுல அவங்க ஆடலாம். பாடலாம். சந்தோஷமா என்ன வேணாலும் பண்ணலாம். அவங்களுக்கு தீபாவளிக்கு டிரெஸ் வாங்கிக் கொடுப்போம். ஸ்வீட்ஸ் கொடுப்போம். கிளினிக்ல ஹெச்.ஐ.வி-யால பாதிக்கப்பட்டு வர்றவங்ககிட்ட மட்டும் காசு வாங்காம இருந்தா, அவங்க ஒரு மாதிரி நினைப்பாங்கனு இப்ப, மற்ற தோல் பிரச்னைக்காக வர்றவங்ககிட்டயும் காசு வாங்கறது இல்லை. அவங்களா விருப்பப்பட்டு கொடுத்தா வாங்கிப்போம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ரிட்டையர்டு ஆனேன். பி.எஃப் பணம் வந்துச்சு. அதைவெச்சுத்தான் வீடு, கார் வாங்கினேன். இப்போ பி.எஸ்.ஜி ஹாஸ்பிடல்ல வேலை செய்யறேன்.’’ என்கிறார் மகாதேவன்.

டாக்டர் மகாதேவன் பெற்ற விருதுகள்

அவரிடம் `மெர்சல்’ படம் பற்றி மெள்ளப் பேச்சுக் கொடுத்தோம்…

“நான் அந்தப் படத்தைப் பார்க்கலை. இப்ப மனுசனே `Money'சன் ஆகிட்டான். அதனால பணம் எல்லாருக்குமே அத்தியாவசியம். இந்தியாவுல இப்போ நல்ல மருத்துவம் கிடைக்குது. அதனாலதான், வெளிநாட்டுல இருந்துகூட சிகிச்சைக்கு இங்கே வர்றாங்க. எல்லாத் துறைலயும் நல்லவங்களும் கெட்டவங்களும் கலந்து இருக்கத்தான் செய்வாங்க. அப்படித்தான் இங்கேயும்.

இந்தியா போன்ற நாட்டுல அரசு மருத்துவமனைகளால மட்டுமே மருத்துவம் பார்த்துட முடியாது. அது கம்யூனிஸ்ட் நாடுகள்ல வேணும்னா சாத்தியமா இருக்கலாம். இங்கே இருக்கும் அரசியல் சூழல்ல அது சாத்தியம் இல்ல’’ என்கிறார் மகாதேவன்.

`மெர்சல்’ படத்தில் விஜய், “எங்களுக்கு நீங்களும் சாமிதான்” என்று எஸ்.ஜே.சூரியாவைப் (டாக்டர்) பார்த்துச் சொல்லுவார். அப்படிப் பார்த்தால் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பலருக்கு மகாதேவனும் சாமிதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!