‘இந்தியாவில் ஆண்டுக்கு 68 லட்சம் கருக்கலைப்புகள்!’ - கலங்கடிக்கும் புள்ளிவிவரம் #AlertUnsafeAbortion

டலில் வலியையும் உள்ளத்தில் பெரும் வேதனையையும் ஏற்படுத்துவது கருக்கலைப்பு. வயிற்றில் வளரும் சிசுவைக் கலைக்கும் தருணத்தில் ஒரு தாய்க்கு ஏற்படுத்தும் கலக்கத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. ஆனாலும் சிலருக்குத் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சமூகக் காரணங்களால் கருக்கலைப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. கருக்கலைப்பில் இருக்கும் ஆபத்துகளைப் புரிந்துகொள்வதும், அது குறித்த விழிப்புஉணர்வும் இன்றைய அவசியத் தேவை. உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) மற்றும் லான்செட் இணைந்து கருக்கலைப்பு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தின. 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், கருக்கலைப்பு செய்த பெண்களில் 45.1 சதவிகிதம் பேர் பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்ததால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. இதில் பெரும்பாலானோர் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்கள் என்கிறது அந்த ஆய்வு.

கருக்கலைப்பு

“வளர்ந்துவரும் நாடுகளில், கருக்கலைப்பு குறித்தான விழிப்புஉணர்வின் தேவை அதிகம்” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த பெலா கனாத்ரா. இந்த அறிவுரை இந்தியாவுக்கும் பொருந்தும். ‘குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே கருவுற்றுவிட்டேன்', 'இப்போது குழந்தைபெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை', 'பெண் /ஆண் குழந்தையாக இருப்பதால் எங்களுக்கு வேண்டாம் (பாலின அடிப்படை)’... இவற்றோடு திருமணத்துக்கு முன்னரே கருவுற்றிருத்தல், சிசுவுக்குப் பாதிப்பு ஏற்படும் போன்ற அச்சம் போன்றவையே பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பிரதான காரணங்கள் எனச் சொல்லப்படுகின்றன. இவற்றில் சில சட்டத்துக்கு உட்பட்டும், மற்றவை சட்டத்துக்குப் புறம்பாகவும் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் லான்செட்-ன் ஆய்வு முடிவுகள், கருக்கலைப்பு தொடர்பான விழிப்புஉணர்வின் அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன. இது குறித்து மகளிர் மகப்பேறு மருத்துவர் கல்பனா விளக்கமாகக் கூறுகிறார்.

“சில பெற்றோர்கள் தாங்கள் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது என்கிற முன் முடிவோடும் திட்டத்தோடும் இருக்கிறார்கள். அந்தக் காலத்துக்கு முன்னதாகக் கருவுற்றால், ‘இப்போது குழந்தை வேண்டாமே’ என்று கருதுகின்றனர். நல்ல அனுபவம்மிக்க மூத்த மருத்துவர்கள், சில சுய நெறிமுறைகளுக்கு உட்பட்டு இப்படிப்பட்டவர்களுக்குக் கருக்கலைப்பு செய்வதைத் தவிர்த்துவிடுவார்கள். அந்த நேரத்தில், எப்படியாவது கருக்கலைப்பு செய்துகொண்டுவிட வேண்டும் என்று அனுபவமில்லாதவர்களை இவர்கள் அணுகுவது நடக்கும். அந்த மருத்துவர்கள் கருக்கலைப்புக்காகக் கொடுக்கும் மாத்திரை, மருந்துகளால் தாயின் உடல்நலத்தில் பாதிப்பு (Less safe) ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சரியான டோசேஜ் அளவு தெரியாமல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால், அது பல உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

மாத்திரைகளின் மூலம் கலைக்க முடியாதபட்சத்தில், டி அண்ட் சி (Dilation and Curettage - D&C) முறையைப் பின்பற்றுவது வழக்கம். இதில், கவனக்குறைவால் அசம்பாவிதங்கள் ஏற்படும்போது, உடல்நலம் பாதிக்கக்கூடும். இதனை, Unsafe with low medical risk என்றும் கூறுவார்கள். பயப்படும் அளவுக்கான பாதிப்புகள் ஏற்படாது என்றாலும், கவனமாக இருக்கவேண்டியது அவசியம். கருக்கலைப்புக்கு `டி அண்ட் சி’ முறையைப் பின்பற்றுபவர்கள், எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

சட்டத்துக்குப் புறம்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்பவர்கள், `கருவைக் கலைத்துவிட்டால் போதும்’ என்கிற எண்ணத்தில், எந்தப் பாதுகாப்புப் பற்றியும் யோசிக்காமல், சிகிச்சை மேற்கொள்வார்கள். இது போன்ற கருக்கலைப்புகளில் பெரும்பாலும் உயிர்ச்சேதம் ஏற்படும் அளவுக்கான பாதுகாப்பற்ற சிகிச்சைமுறையே செய்யப்படுகிறது. முறையான அனுமதி பெறாதவர்கள் மற்றும் சில போலி மருத்துவர்களால் செய்யப்படும் இது போன்ற கருக்கலைப்புகளில், கர்ப்பப்பையில் உள்ள கருவின் திசுக்களை முழுமையாக அழிக்காமல், பாதியிலேயே விடுவதற்கான வாய்ப்பு அதிகம்.

ரத்தப்போக்கு மற்றும் கர்ப்பப்பைத் தொற்று போன்ற பிரச்னைகளை இது ஏற்படுத்தும். இதனால், உயிர்ச்சேதம்கூட ஏற்படலாம். பாதுகாப்பின்றி செய்துகொள்ளும் இதுபோன்ற கருக்கலைப்புகள், இந்தியாவைப் பொறுத்தவரை சட்டத்துக்குப் புறம்பானவை. ஆக, முறையான காரணத்தோடு தகுதியான மருத்துவர்களிடம் சென்று, முழுமையான ஸ்கேன்களுக்குப் பிறகு, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

ஊசிமூலம் கருக்கலைத்தல்

பாதிப்பு எப்போது ஏற்படும்?

கருக்கலைப்பு செய்வதென்று முடிவெடுக்கும் பெண்கள், கருவுற்ற முதல் ஐந்து மாதங்களுக்குள் செய்துவிடவேண்டும். ஐந்து மாதங்களைத் தாண்டினால், கர்ப்பப்பையில் தொற்று பாதிப்புகள் ஏற்படலாம். இது, தாய்-சேய் இருவரின் உடல்நலனையும் பாதிக்கும்.

கரு கலையாத பட்சத்தில், டி அண்ட் சி (Dilation&Curettage - D&C) சிகிச்சை செய்யப்படும். இதில், கர்ப்பப்பை திறக்கப்பட்டு, சிசு அகற்றப்படும். தேர்ந்த மருத்துவர்கள் மட்டுமே செய்யவேண்டிய இந்தச் சிகிச்சையை, சமீபகாலமாகத் தகுதியில்லாத சிலர் சட்டத்துக்குப் புறம்பாக செய்துவருகிறார்கள். இங்கேதான் கருக்கலைப்பு ஆபத்தானதாக மாறுகிறது. கர்ப்பப்பையில் கியூரெட்டேஜ் செய்யும்போது, அதிக அழுத்தம் தந்துவிட்டாலோ, அதிகம் உரசிவிட்டாலோ தொற்று பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது, வாழ்நாள் முழுக்க கர்ப்பப்பை சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் மரணம்கூட ஏற்படலாம். சரியான வழிமுறைகளும் அறிவுரையும் இல்லாமல், போதிய மருத்துவ அறிவின்றி இதைச் செய்யக் கூடாது.

எந்த ஆலோசனையும் இல்லாமல் கருக்கலைப்புக்கான மாத்திரைகளைச் சுயமாக உட்கொள்பவர்களும், மருத்துவம் தெரியாதவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை உட்கொள்பவர்களும், மருத்துவர்களிடம் சரியான டோசேஜ் அளவைக் கேட்காமல் பின்பற்றுபவர்களும், மருந்தின் அளவு மாற்றத்தின் (Heavy/ Low dosage) காரணமாகத் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு சிசு முழுமையாகக் கலையாமல் இருத்தல், ரத்தப்போக்கு, கர்ப்பப்பை சுவர்களில் பாதிப்பு போன்றவை ஏற்படும். இது, உடல் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

வளர்ந்து வரும் பல நாடுகளும் ‘பாதுகாப்பற்ற கருக்கலைப்பு' பிரச்னைகளைச் சந்தித்துவருகின்றன. இந்தப் பிரச்னை தாய்-சேய் தொடர்பானது மட்டுமல்ல; நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கும் ஒன்று. அதோடு, அடுத்துவரும் தலைமுறையையும்கூட இது பாதிக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, கருக்கலைப்பு சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்ல. கருக்கலைப்பு குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றோருக்கு மட்டுமே இருப்பதால், கருவைக் கலைப்பதற்கு முன்னர் ஏன், எதற்கு, எங்கே போன்ற கேள்விகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனையைத் தேர்வு செய்வதில் தொடங்கி, உணவுமுறை, வாழ்வியல் மாற்றம், மாத்திரைகள் எனச் சிறு சிறு விஷயங்களிலும் கவனம் வேண்டும். சரியான காரணமின்றி, சிசுக்களை அழிப்பது தவறு, பாவமும்கூட. வளரும் நாடுகளுக்கான முக்கியமான ஒரு தகுதி, சட்டத்தின் ஓட்டைகளுக்குள் செல்ல முயற்சி செய்யாமல் இருப்பதுதான்..! கருக்கலைப்பு, சட்டப்படி சரி என்றாலும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு, அதிக அக்கறையோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு மேற்கொள்வதே நல்லது’’ என்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!