முழு உடல் பரிசோதனை... யாருக்கு, எப்போது, ஏன் செய்ய வேண்டும்? #HealthAlert | Importance of Master health check up

வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (31/10/2017)

கடைசி தொடர்பு:11:47 (31/10/2017)

முழு உடல் பரிசோதனை... யாருக்கு, எப்போது, ஏன் செய்ய வேண்டும்? #HealthAlert

லேசாகத் தலைவலிக்கிறது’ என்று சொன்னால்கூட, 'ஃபுல் பாடி செக்கப் பண்ணிக்கோடா' என்று அட்வைஸ் செய்கிறார்கள் நண்பர்கள். அந்த அளவுக்குப் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை எல்லோரின் மூளையிலும் பதிவாகிவிட்ட வார்த்தையாகிவிட்டது 'ஃபுல் பாடி செக்கப்’ என்கிற முழு உடல் பரிசோதனை.

பரிசோதனை

எங்கு பார்த்தாலும் ஹெல்த் செக்கப் விளம்பரங்கள். வீதிகளில் நடந்து செல்லும்போது, "சார் உங்க வெயிட் செக் பண்ணிக்கோங்க" என்று அழைத்து, உங்களைப் பற்றிய விவரங்களை எல்லாம் வாங்கிக்கொண்டு, "கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கு", "வெயிட் அதிகமா இருக்கு" என்றெல்லாம் சொல்லி பீதியைக் கிளப்பி, "ஃபுல் பாடி செக்கப் பண்ணிக்கோங்க... 15 சதவிகிதத் தள்ளுபடியோடு" என்று ஆசை காட்டுவதும் நடக்கிறது.

"உண்மையில்,  'மாஸ்டர் ஹெல்த் செக்கப்' என்பது ஆரோக்கியமாக இருப்பவர்களையும் நோய் பயம் காட்டி, மருத்துவமனை வாடிக்கையாளராக மாற்றக்கூடிய கார்ப்பரேட் தந்திரம்" என்றும் சிலர் சொல்கிறார்கள். இதைத்தான் சமீபத்தில் வெளிவந்த 'மெர்சல்' டாக்டர் விஜய் சக்கரவர்த்திபடத்திலும் பேசினார்கள்.

இன்னொரு பக்கம், முழு உடல் பரிசோதனை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், கட்டணங்கள் மட்டும் வெவ்வேறுவிதமாக இருக்கின்றன. அதுமட்டுமல்ல... ஒரு மருத்துவமனையில் எடுத்த பரிசோதனை மற்ற மருத்துவமனையின் சோதனையோடு பொருந்திப்போவதும் இல்லை.

உண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்..? பொதுநல மருத்துவர் விஜய சக்கரவர்த்தியிடம் கேட்டோம்...

“நோய்களை முன்னரே கண்டறிவதன் மூலம் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ளலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனை (Master Health Check-up) அதற்குப் பெரிதும் உதவும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக, உடல்நலனில் அக்கறை செலுத்த பலருக்கும் நேரமிருப்பதில்லை. `நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனநிலையே இன்றைய தலைமுறையினரிடம் மேலோங்கி நிற்கிறது. இதனால், நோய் அறிகுறிகள் வெளிப்படும் வரை பலரும் கண்டுகொள்வதில்லை. நோய் முற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல லட்ச ரூபாய்களை இழந்தும் பலன் கிடைக்காமல் போய்விடவும்  அது காரணமாகிறது. இருந்தாலும், எல்லோரும் இந்த பரிசோதனை செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை.

முழு உடல் பரிசோதனை

என்னென்ன பரிசோதனைகள்?

கண், பல், காது, மூக்கு, தொண்டைப் பரிசோதனைகள், மார்பக எக்ஸ்-ரே, இ.சி.ஜி ரத்த வகை, ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பு,  யூரியா, கிரியேட்டினின் போன்ற அளவுகள், வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, தைராய்டு சுரப்புப் பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பரிசோதனை போன்ற அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனைகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் வசூலிக்கப்படும் கட்டணத்தைப் பொறுத்து மாறுபாடு இருக்கும்.

பரிசோதனைகள்

யாரெல்லாம் செய்துகொள்ள வேண்டும்?

பொதுவாக, 35 வயதுக்குமேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடலுழைப்பு  இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுபவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இதைச் செய்துகொள்ள வேண்டும்.

பரிசோதனைகள்

நன்மைகள் என்னென்ன?

பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், பெண்களுக்கு கர்ப்பப்பை போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கும் நோய்களை இதன்மூலம் கண்டறிய முடியும்.

சர்க்கரைநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், இதன்மூலம் எச்சரிக்கையாக இருந்து, சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இது மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் நோயைக் குணப்படுத்துவதை எளிமையாகும்" என்கிறார் விஜய சக்கரவர்த்தி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்