வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (03/11/2017)

கடைசி தொடர்பு:15:26 (03/11/2017)

மழைக்காலத்தைச் சமாளிக்க இந்த 3 விஷயங்கள்ல கவனமா இருங்க! #RainTips

ழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் `ரொமான்டிக் சீசனாக’ப் பார்த்த சூழ்நிலை மாறிவிட்டது. ‘மழை அல்லது குளிர்காலத்தில் எந்தெந்த நோய்களுக்கு இரையாகப் போகிறோமா’ என்று அச்சப்படும் காலம்தான் இது. குறிப்பாக சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இரைப்பு (ஆஸ்துமா) நோயால் அவதிப்படுபவர்களுக்கும் நிறைய பயத்தை உண்டாக்கும் காலம். நோய்களைக் கண்டு அச்சப்படாமல், இயற்கையோடு இயைந்து மழையின் உயிர்ப்பை உணர, குளிர்ச்சியின் சிலுசிலுப்பை அனுபவிக்க அனைவரும் செய்ய வேண்டியவை என்னென்ன?

மழைக்காலம்

உணவு, உடை, இருப்பிடம்

உணவு, உடை, இருப்பிடம்… இவை மூன்றும் வாழ்வதற்கு அவசியம். வாழ்வதற்கு மட்டுமல்ல... நோயின்றி வாழ்வதற்கு மிக மிக அவசியம். நம் அடிப்படைத் தேவைகளான ’உணவு, உடை, இருப்பிடத்தை’ காலநிலைக்கு ஏற்ப முறைப்படுத்திக்கொண்டால், இப்போது தொடங்கியிருக்கும் மழைக்காலத்தை நோயின்றி மகிழ்ச்சியாகக் கடக்கலாம். வடகிழக்குப் பருவமழை காலத்தை இயற்கையோடு சேர்ந்து கொண்டாடலாம். சரி... உணவு, உடை, இருப்பிடம்... எப்படித் தகவமைப்பது?

உணவு 

பருவநிலைக்கு ஏற்ப உணவுகளை உட்கொள்வது என்பது, நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் தடுக்க, நெடுங்காலமாகப் பயன்பாட்டில் உள்ள முக்கியமான உத்தி. ஆனால், அந்த உத்தியைப் பயன்படுத்த நாம் தயாராக இல்லை. பெரும்பாலும், பழைமைவாதம் என்று புறந்தள்ளிவிடுகிறோம். ஆனால், பழைமையில் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் புத்திசாலித்தனம். 

உணவியல்

உணவை அப்போதைக்கப்போது தயார்செய்து சூடாகச் சாப்பிட வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் குளிர்சாதனப் பெட்டியில் இரவு முழுவதும் உறங்கிய உணவுகளை, மறுநாள் பயன்படுத்தக் கூடாது. கீரைகளையும் தயிரையும் இரவு வேளைகளில் உபயோகிக்கக் கூடாது. நீர்க்காய்களான புடலை, பீர்க்கு, பூசணி போன்றவற்றுக்குச் சில மாதங்களுக்குத் தற்காலிக ஓய்வு கொடுக்கலாம். உணவுப் பொருள்களில் மிளகுத்தூளைத் தூவிச் சாப்பிடுவது நல்லது. மிளகை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். அசைவப் பிரியர்கள், நாட்டுக்கோழி ரசம், ஆட்டுக்கால் சூப், நண்டு ரசம் போன்றவற்றை ரசித்துச் சுவைக்கலாம். ஐஸ்க்ரீம், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தண்ணீர் ஆகியவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது முக்கியம். 

தூதுவளை

தூதுவளை

மழை மற்றும் குளிர்காலத்தில் வெப்ப வீரியம்மிக்க உணவுகளை நமது உடலுக்குத் தருவது சாலச் சிறந்தது. சூடான உணவுகளை மனம் தேடும்போது, டீ, காபிக்கு பதிலாக தூதுவளை சூப் தயார்செய்து அருந்தலாம். இப்போதைய சூழ்நிலையில் மாலை வேளையில் குடிப்பதற்கான அற்புதமான பானம் தூதுவளை சூப். குளிருக்கு இதமான பானமாக மட்டுமன்றி, சளி, இருமல் போன்ற கப நோய்களுக்கும் முக்கியமான எதிரி தூதுவளை. அவ்வப்போது நம் தினசரி உணவுகளுக்குத் துணையாக தூதுவளை சட்னி/துவையலைப் பயன்படுத்தலாம். 

கப நோய்களுக்கு...

கொள்ளு ரசத்தை அதிக அளவில் பயன்படுத்தலாம். ’குலத்தங் கபத்தினைக் கூற்றெனத் துரத்தும்’ என்ற தேரையர் காப்பிய நூலின் வரி, கொள் கப நோய்களைத் துரத்தும் என்பதை விளக்குகிறது. கண்டங்கத்திரி, ஆடுதொடா, துளசி போன்ற மூலிகைகளின் ஆதரவும் இந்தக் காலத்தில் நமக்கு மிகவும் அவசியம். குடிக்கும் நீரில் துளசி இலைகளையும், கற்பூரவல்லி இலைகளையும் போட்டுக் காய்ச்சிக் குடிக்கலாம். இயற்கை மருந்துகளை உட்கொள்ளும் விஷயத்தில் கேரளத்தை முன்னோடியாகக் குறிப்பிடலாம். தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து, சில மூலிகைக் கலவைகளைக் கலந்து குடிக்கும் வழக்கம் அவர்கள் பாரம்பர்யத்தில் ஊறிய ஒன்று. 

இருமல் உண்டாகும்போது, இரண்டு மிளகைப் பொடி செய்து, தேனில் குழைத்து உட்கொள்ளலாம். குழந்தைகளுக்குக் கற்பூரவல்லிச் சாற்றை எடுத்து சுண்டவைத்து, சுரசமாகக் கொடுத்துவருவது சிறந்தது. பாலில் மிளகுத்தூளும் மஞ்சள்தூளும் கலந்து பருகுவதும் கப நோய்களை எதிர்க்க உதவும். சுக்கு காபி, தொண்டை கரகரப்பில் தொடங்கி, கெட்டிப்பட்ட கோழை வரை குணமாக்கும் தன்மைகொண்டது. மழைக்காலத்தில் ஏற்படும் கப நோய்களைக் குணமாக்க தாளிசாதி சூரணம், திப்பிலி ரசாயனம், திரிகடுகு சூரணம், தூதுவளை நெய் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையோடு உட்கொள்ள வேண்டும். வெளிப் பிரயோகமாக நீர்க்கோவை மாத்திரைப் பற்று தலைபாரத்தை இறக்கிவைக்கும் பலமான ஆயுதம். வாரத்தில் இரண்டு நாள்களுக்குத் தவறாமல் ஆவி (வேது) பிடித்தால் தலைபாரம், தலைவலி போன்றவை பறந்து போகும்.

உடை

காலவரைமுறையின்றி பருவநிலைக்குத் தகாத உடைகளை அணிவதே பெரும்பாலானோரின் வழக்கமாக இருந்துவருகிறது. வெயில் சுட்டெரிக்கும் கோடைகாலத்தில், மேனி உருகும் அளவுக்கு ஜீன்ஸ் வகை ஆடைகள் அணிந்திருப்பவர்களைச் சாதாரணமாகப் பார்க்க முடியும். மேலைநாட்டுப் பருவநிலைக்குத் தகுந்த ஜீன்ஸ் ஆடைகளை அணிய விரும்பினால், அதற்கு உகந்த காலம் இப்போது மட்டுமே. இதை வாரக்கணக்கில் அணிபவர்களுக்குத் தோல் நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். குளிர் அதிகமாக இருக்கும் நாள்களில் மட்டும் ஜீன்ஸ் உடைகளுக்கு அடைக்கலம் கொடுக்கலாம். மிகவும் இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளை நீண்ட நேரம் அணிய வேண்டாம்.
மழையின் தீவிரம் அதிகரிக்கும்போது, கொசுக்களின் ஆதிக்கமும் பெருக வாய்ப்புண்டு. உடலை முழுவதுமாக மறைக்கும் அளவுக்கு முழுக்கைச் சட்டைகளை அணிந்துகொண்டால், கொசுக்களிடமிருந்து மட்டுமல்ல, அளவுக்கதிகமான குளிரிலிருந்தும் நமக்குப் பாதுகாப்பு கிடைக்கும். குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் உடைகளைக் கொண்டே குளிர்கால நோய்களை வராமல் தடுக்க முடியும். இரவுகள் நீண்டும் குளிர்மையாகவும் இருக்கும் இந்தக் காலத்தில் கம்பளி உடைகளை முக்கியமாகப் பயன்படுத்தலாம். காதுகளில் குளிர்க் காற்று நுழையாதபடிக்கு ஸ்கார்ஃப் பயன்படுத்துவது அவசியம். பயணங்களை மேற்கொள்ளும்போது, குளிர்க்காற்று காதுகளுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. 

மழைக்காலம்

இருப்பிடம்

நம் இருப்பிடத்தைச் சுற்றி மழைநீரைத் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது இந்த மழைக்காலத்தில் மிக முக்கியம். மழையில்லாத நேரம் மற்றும் பகல் வேளைகளில் வீட்டின் சாளரங்களைத் திறந்துவைத்து, சூரிய ஒளி வீட்டுக்குள் நுழையும்படி வழிவகை செய்துகொள்ள வேண்டும். குளிப்பதற்கு வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். குளிர்ச்சியான வெறும் தரையில் படுத்து உறங்குவது தவறு. பாய் அல்லது மெத்தையில் உறங்க வேண்டும். குளிர்ச்சியான தரையில் அதிக நேரம் புழங்கும்போது, வாத நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உறங்கும்போது, போர்வையை முகம் முழுக்க மூடிக்கொண்டு உறங்குவதைத் தவிர்த்துவிடலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் சூரியனின் இளவொளியில் சிறிது நேரம் வெயிலில் காய்வதால் உடல் புத்துணர்ச்சி அடையும். 

உணவு, உடை, இருப்பிட ஆதாரங்களைத் தேவைக்கேற்ப அமைத்துக்கொண்டால், அனைத்துப் பருவநிலைகளையும் அனுபவித்து வாழலாம். மழைக்காலம், தவளைகளின் ஒலிகள், அழகான சூழ்நிலை, ஆங்காங்கே உருவெடுக்கும் மண்வாசனை என அனைத்தையும் ரசிக்கலாம்... பருவகாலம் சார்ந்த வாழ்வியலை முறையாகக் கடைப்பிடித்தால்!
 


டிரெண்டிங் @ விகடன்