Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழைக்காலத்தில் ஒருவருக்கு மின் விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை, கூடாதவை! #ElectricalShockSafety

சென்னைக் கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரில் இரண்டு நாள்களுக்கு முன்பாக மின்சாரம் கசிந்து, மழைநீரில் நின்றுகொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ என்னும் இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் அநியாயமாகப் பறிபோனது. மழைநேரங்களில் திடீரென மின்சாரக் கசிவு ஏற்படுவது தமிழ்நாட்டில் இயல்பான ஒன்றாகிவிட்டது . ஆனால், "அந்த இணைப்புப் பெட்டியில் மின்சாரக் கசிவு இருப்பதாகப் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தோம். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அநியாயமாக இரண்டு பச்சிளம் குழந்தைகளின் உயிர் பறிபோய்விட்டது" என்று கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

விபத்து

மழைநேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்துகள் மட்டுமல்ல... இதுபோன்ற மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு அரசால், என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன... மக்களிடம் எந்த மாதிரியான விழிப்புஉணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... திடீரென ஒருவருக்கு ஷாக் அடித்து, விபத்து ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவி அளிக்க வேண்டும்... அந்த சந்தர்ப்பத்தில் என்னவெல்லாம் செய்யக் கூடாது?... விரிவாகப் பார்ப்போம்.

மழை நேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி மேகநாதன் விவரிக்கிறார் "சாலையில், அறுந்து கிடந்த மின்கம்பிகளைக் கண்டால் உடனடியாகப் பக்கத்திலிருக்கும் மின்சார அலுவலகத்தில் போய் புகார்தரச் சொல்லியிருக்கிறோம். புறநகர்ப் பகுதிகளில், தலைக்கு மேல் செல்லும் மின்சார வயர்களில் உரசிச் செல்லும்படியான கொடிகளில் ஈரத்துணிகளைக் காயப்போடக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறோம்.

மின்கம்பம்

கேபிள் பாக்ஸ், பில்லர் பாக்ஸ்களைப் பெரும்பாலும் உயரமாகக் கட்டியிருக்கிறோம். ஆனாலும், தண்ணீர் தேங்கியிருக்கும் நேரங்களில் பில்லர் பாக்ஸ்களின் அருகே யாரும் செல்லக் கூடாது. அதேபோல் தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு பில்லர் பாக்ஸின் உயரத்துக்கு வந்துவிட்டால், உடனடியாக அருகில் இருக்கும் மின்சார அலுவலத்தில் தெரிவிக்க வேண்டும். உடனே மின்சார வாரிய ஊழியர்கள் வந்து பில்லர் பாக்ஸின் உயரத்தை மேலும் உயர்த்திக் கட்டிவிடுவார்கள்.

பழைய வீடுகளில், மழையின்போது சுவரில் ஈரம் பரவியிருக்கும். அப்படி ஈரம் பரவியிருக்கும் சுவர்களின் அருகில் இருக்கும் ஸ்விட்ச் பாக்ஸைத் தொடக் கூடாது. ஈரம் காய்ந்த பின்னரே அதைத் தொடவோ பயன்படுத்தவோ வேண்டும். ஈரக்கையுடன் ஸ்விட்ச் சை ஆன் -ஆஃப் செய்யக் கூடாது. அதேபோல் மாடியிலிருந்து உடைகளோ வேறு ஏதேனும் பொருள்களோ பறந்து கையால் எடுக்க முடியாத இடங்களில் விழுந்துவிட்டால், அதை இரும்புக் கம்பிகளைக் கொண்டு எடுக்கக் கூடாது.

ஆறு தலைமைப் பொறியாளர்களின் தலைமையில் குழுக்கள் அமைத்து, பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். மின்சாரம் தொடர்பான எந்தப் புகாராக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மின்சார அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம். 1912 என்கிற புகார் எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம் " என்கிறார் மேகநாதன்.

உயர்த்திக் கட்டுதல்

மின்சார விபத்துகள் ஏற்பட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பது பற்றி தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநர் குழந்தைசாமி விளக்குகிறார்... "யாருக்காவது ஷாக் அடித்துவிட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக `சி.பி.ஆர்' (Cardiopulmonary resuscitation) என்று சொல்லப்படும் இதயம் மற்றும் சுவாச இயக்க மீட்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். அதாவது விபத்துக்குள்ளானவரை சமதளத்தில் படுக்கவைத்து, ஒரு கைக்குட்டையை அவர் வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊதி, உள்ளும் புறமுமாக இழுக்க வேண்டும். அதே நேரத்தில், மார்பின் இடது பக்கம் நன்றாகக் கையை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்..

இதைப் பற்றித் தெரியாதவர்கள், 108 அல்லது 104 ஆகிய இரண்டு எண்களுக்கு அழைத்தால். அவர்கள் முதலுதவிக்கான வழிமுறைகளைச் சொல்வார்கள். அதைச் சரியாகப் பின்பற்றினாலே போதும்... பாதிப்பு குறைந்துவிடும்.

மின்சாரத்தால் அதிகமாக பாதிப்புக்குள்ளான நபராக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது. 108 ஆம்புலன்ஸை வரச்சொல்லி, அதில் கூட்டிச் செல்லலாம். 108 ஆம்புலன்ஸில் உதறல்நீக்கி (Defibrillator) கருவி மற்றும் முதலுதவிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன" என்கிறார் குழந்தைசாமி.

ஆம்புலன்ஸ்

ஷாக் அடித்த உடனே என்னெவெல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றி பொது மருத்துவர் முத்தையா விவரிக்கிறார்..."மின்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மயக்கநிலையில் இருந்தால் அவர்களுக்கு வாய்வழியே எந்த ஆகாரமும் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால், அது நேரடியாக நுரையீரலுக்குச் சென்றுவிடும். சாதாரணமாக இருக்கும்போது, நுரையீரலுக்குத் தண்ணீர் சென்றால் புரையேறி இருமல், தும்மல் மூலமாக நீர் வெளியேறிவிடும்.மருத்துவர் முத்தையா

ஆனால், மயக்கநிலையில் இருப்பவர்களுக்குப் புரைக்கேறாது. அதனால் தண்ணீர் வெளியேறாமல் நுறையீரலுக்குச் சென்றுவிடும். தண்ணீர் அதிகமாகச் சென்றால் நிமோனியா ஏற்படுவதற்குக்கூட வாய்ப்புள்ளது. ஆனால், அரை மயக்கமாக (Semi conscious) உமிழ்நீரை உள்ளிறக்கக்கூடிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு மோரில் உப்புப் போட்டுக் குடிக்கக் கொடுக்கலாம். பின்னர் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

சிலருக்குப் பாதிப்பு வெளியில் தெரியாது. அதனால் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. உள்ளுக்குள் பாதிப்பு இருக்கும். எனவே, மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

அதேபோல், நமக்கு அருகில் யாரையாவது மின்சாரம் தாக்கிக்கொண்டிருந்தால் அவர்களை நாம் கைகளால் தொடக் கூடாது. முதலில் மெயின் ஆஃப் செய்துவிட வேண்டும். பின்னர், ஷூ, செருப்பு அணிந்து மரத்தால் ஆன கட்டையால் அவர்களின் கையைத் தட்டிவிடலாம்.

கொடுங்கையூர்

வீட்டில் என்றால் மெயின் ஸ்விட்ச் எங்கே இருக்கிறது என்று தெரியும். சாலைகளில் எங்கே இருக்கிறது என்பது தெரிய வாய்ப்பில்லை. எனவே, ஏதாவது மரத்தால் ஆன பொருள்களைக்கொண்டு மீட்கலாம். அதேபோல். தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும்போது ஒருவர் மின்சாரத்தாக்குதலுக்கு உள்ளானால், அவசரப்பட்டு தண்ணீரில் இறங்கி அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது. தண்ணீர் முழுவதும் மின்சாரம் இருக்கும். எனவே, தூரத்தில் இருந்தபடிதான் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும்" என எச்சரிக்கிறார் மருத்துவர் முத்தையா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement