Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

800 படுக்கைகள்... தினமும் 1000 குழந்தைகளுக்கு சிகிச்சை... எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒருநாள்! #VikatanExclusive

“சென்னையில் வேற எந்த ஆஸ்பத்திரி பத்தி வேணும்னா ஏதாவது குறை சொல்லலாம். ஆனா, பேபி ஆஸ்பத்திரியப் பத்தி மட்டும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. அருமையா வைத்தியம் பார்ப்பாங்க..." எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் 60 வயது பாட்டியிடம், "ட்ரீட்மென்ட் எல்லாம் எப்படி?" என்று விசாரித்தபோது, இப்படித்தான் பதில் வந்தது. 

குழந்தைகள் நல மருத்துவமனை எலும்பூர்  

மழையும் டெங்குவும் வெளுத்துவாங்கிக்கொண்டிருக்கும் சூழலில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒருநாளைப் பதிவுசெய்ய முனைந்தோம்.    

வெளியில் மழை வெளுத்துக்கொண்டிருக்க, உள்ளே, எல்லா பக்கமும் குழந்தைகளின் மழலை அழுகுரல்கள்.  துணிக்குள் குழந்தைகளை பொதித்துக்கொண்டு, ஆட்டோவிலும் பேருந்திலும் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறார்கள் தாய்மார்கள். எல்லோரின் முகங்களிலும் கவலை ரேகைகள், பதைபதைப்பு. 

ஓ.பி. சீட்டு பதிவு செய்யும் இடம்

முகப்பில் ஓ.பி சீட்டு பதிவுசெய்யும் பணி தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. 

“தினமும் 1000 குழந்தைகள் சிகிச்சைக்காக வர்றாங்க. ஒவ்வொரு ஓ.பி சீட்லயும்  ஒரு பின் நம்பர் இருக்கும். அந்த நம்பர்ல ஒரு ஃபைலை பராமரிப்போம். அதில், குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றிய அனைத்துத் தகவல்களும் இருக்கும். ஒரு நாளைக்கு, சுமார் 1000 குழந்தைகள் வருகிறார்கள்..." என்கிறார் ஓ.பி சீட்டு பதிவுசெய்பவர். 

முகப்பில் அமர்ந்திருக்கும் மருத்துவர்கள், சாதாரண காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கிறார்கள். வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கலாம் என்று கருதினால், அந்தத் துறை மருத்துவர்களிடம் அனுப்பிவைக்கிறார்கள். 

தோல், சிறுநீரகம், நரம்பியல், நுரையீரல், கல்லீரல் மற்றும் இரைப்பை, இதயம், ரத்தம் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும்  சிகிச்சையளிக்கத் தனித்தனியாக சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கான நியோ நேட்டாலஜிஸ்ட் துறை மருத்துவர்களும் இருக்கிறார்கள். காலை ஏழு மணி முதல் மதியம்  ஒரு மணி வரை சுமார்  100  மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள்.

பொது சிகிச்சை

அறுவை சிகிச்சைக்கென்று தனிப்பிரிவு உள்ளது. பிறந்த குழந்தை முதல், 12 வயது வரையிலானவர்களுக்கு கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய், ரத்தநாள நோய்கள் உட்பட அனைத்துப் பிரச்னைகளுக்கும்  இங்கே அறுவைசிகிச்சைகள் செய்யப்படுகின்றன.  

52 ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகள் நலம் தொடர்பான சிறப்புப் படிப்பான Master Of Chirurgical (M.Ch) படிப்பு இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில்தான் தொடங்கப்பட்டது. அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, அறுவைசிகிச்சைப் பிரிவில் 4 அறைகள், 180 படுக்கைகள் உள்ளன. 4 மருத்துவப் பேராசிரியர்களின் கண்காணிப்பில் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

மருத்துவமனை

நான்கு அறுவைசிகிச்சை அறைகளிலும் அழகழகான பொம்மைகள் வரைந்து, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள். கரடி, குரங்கு  பொம்மைகளும் நிறைந்திருக்கின்றன. குழந்தைகள், தங்களுக்குள்ள பிரச்னைகள் பற்றிய புரிதலின்றி அப்பொம்மைகளுடன் குதூகலித்துக்கொண்டிருக்கின்றன.

அறுவைசிகிச்சை அறைக்குள் இருக்கும் தருணத்தில், ஒரு அரசு மருத்துவமனைக்குள் இருக்கிறோம் என்ற எண்ணம் துளிகூட ஏற்படவில்லை. அந்த அளவுக்கு மிகச்சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. நாளொன்று 30 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். 15 முதல் 20 அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெறுகின்றன. 

ஒரு நாள் முதல் 28 நாள்கள் வரையிலான குழந்தைகளுக்கு உணவுக் குழாயில் ஏற்படும் கோளாறு, நுரையீரல், உதரவிதானம், இரைப்பை மற்றும் குடல், சிறுநீரகம், உதட்டுப்பிளவு, அன்னப்பிளவு, தலையில் நீர் கோத்தல், ஒட்டிப் பிறந்த குழந்தைகளில் உறுப்புகளைப் பிரித்தல், பிறப்புறுப்பில் ஏற்படும் கோளாறுகள் என அனைத்து விதமான பிரச்னைகளுக்கும் இங்கே அறுவைசிகிச்சைகள் செய்யப்படுகின்றன. 

ஒருங்கிணைந்த வளாகம்

“ஆபரேஷன் தியேட்டரும் குழந்தைகளைத் தங்கவைத்திருக்கும் இடமும்  தூரமாக இருந்தால், பயணம்செய்யும் இடைப்பட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அதைத் தடுப்பதற்காகவே, ஆபரேஷன் தியேட்டருக்கு அருகிலேயே குழந்தைகளைத் தங்கவைப்பதற்கான ஒருங்கிணைந்த வளாகம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது...” என்கிறார் அறுவைசிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் முத்துக்குமரன்.

முழுமையாகக் குளிரூட்டப்பட்ட இந்த அறுவைசிகிச்சைக் கூடத்தில், படுக்கை மட்டும் வெதுவெதுப்புத் தன்மை (Warm bed) கொண்டதாக இருக்கிறது. குழந்தைகளை கிருமிகள் தாக்காத வண்ணம், 'பாலி யூரித்தின்' என்ற ரசாயனத்தில் செய்யப்பட்ட விரிப்புகள் அறை முழுவதும் விரிக்கப்பட்டுள்ளன. அறுவைசிகிச்சை முடிந்த குழந்தைகளை இந்த வெதுவெதுப்பான படுக்கைகள்கொண்ட அறையில் வைத்து சிகிச்சைதருகிறார்கள்.

நவீன கருவி

சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலிருந்தும் அறுவைசிகிச்சைக்காக குழந்தைகளை இங்கே அனுப்பி வைக்கிறார்கள். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தனிப்பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் படும் அவஸ்தைகள் மனதைக் கனக்கச்செய்கின்றன. செவிலியர்கள், அவர்களைக் கனிவோடு கவனித்துக்கொள்கின்றனர். 'கேன்கிட்ஸ் கிட்ஸ்கேர்' என்னும் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரும் புற்றுநோய் பாதித்த குழந்தைகளைக் கவனித்துவருகிறார். 

எலும்பு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பகுதிக்குச் சென்றோம். 

பாதம் கீழ் நோக்கி வளைந்துபோயிருப்பது, தொட்டிக்கால், எலும்பில் ஏற்படக்கூடிய தொற்றுநோய், எலும்புப் புற்றுநோய்,  விபத்துகளால் ஏற்படக்கூடிய எழும்பு முறிவு, கூன் விழுதல், எலும்புகளில் உண்டாகும் காசநோய் ஆகிய  நோய்களுக்கு இங்கே சிகிச்சையளிக்கிறார்கள்.

இயங்காத ஒரு லிப்ட் 

இந்த மருத்துவமனையின் துயரமாக இருப்பது, தீவிர சிகிச்சைப் பிரிவு. எவ்வளவு கல்மனம் படைத்தவரும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் இந்த இடத்தில் நிற்க முடியாது. உள்ளே, குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்க, வெளியே பதற்றத்தோடும் கண்ணீரோடும் கதறும் அம்மாக்களைப் பார்க்க, நம்மையும் மீறி கண்கள் பனிக்கின்றன. மருத்துவர்களும் செவிலியர்களும் அவர்களுக்கு நம்பிக்கைதந்து ஆசுவாசப்படுத்துகிறார்கள். 

இந்த மருத்துவமனையில் தடுப்பூசி ஆராய்ச்சிக்கென்று தனிப் பிரிவு இயங்குகிறது. மருத்துவர்களும் மருத்துவம் படிக்கும் மாணவர்களும்  தடுப்பூசிகள் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். 

ஊட்டச்சத்துக் குறைபாடு, டிஸ்லக்‌ஷியா போன்ற குறைபாடுகளுக்குச் சிகிச்சையளிக்கவும் இங்கே தனித்தனித் துறைகள் செயல்படுகின்றன.

தாய்ப்பால் வங்கி

இந்த மருத்துவமனையின் சிறப்பு, தாய்ப்பால் வங்கி. தாய்மார்கள் இங்கு வந்து தாய்ப்பாலை தானமாகத் தரலாம். அதைத் தகுந்த முறையில் சேமித்து, பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள்.

வழக்கமாக, அரசு மருத்துவமனைகளின் அடையாளமாக இருக்கும் அசுத்தமும் முடை நாற்றமும் இங்கே இல்லை என்பது பெரும் ஆறுதல். அதேநேரம், மருத்துவமனைக்கு வருபவர்கள் அமர்ந்து உணவு உண்ண ஓர் இடம் இல்லை என்பது சோகம். ஆங்காங்கே உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். சிந்தும் உணவுப் பொருள்களால் கால் வைக்க சங்கடமாக இருக்கிறது.  

தங்கும் இடம்

குழந்தைகளுடன் வருபவர்கள் தங்குவதற்காக, சென்னை மாநகராட்சி  இரண்டு கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கியுள்ளது. ஒரு கட்டடம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இன்னொரு கட்டடத்துக்கான பணி தொடங்கப்படவேயில்லை. 

மருத்துவமனையின் முன்னேயும் பின்னேயும் குளம்போல தேங்கிநிற்கிறது மழை நீர். தண்ணீர் வெளியேற எந்த வசதியும் செய்யப்படவில்லை. இது, மருத்துவமனையின் சூழலைப் பெரிதும் பாதிக்கிறது. 

தேங்கி நிற்கும் மழைநீர்

குழந்தைகளுக்கான நாப்கின்கள் வெளியே டீக்கடைகளில் விற்கப்படுகின்றன. இவ்வளவு வசதிகள்கொண்ட மருத்துவமனையில் அதை இலவசமாக வழங்கலாம். 

வெளியில் விற்கப்படும் நாப்கின்கள்

200 படுக்கைகளோடு  ஆரம்பிக்கப்பட்ட  மருத்துவமனை இது. தற்போது 800 படுக்கைகளோடும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளோடும் வளர்ந்திருக்கிறது.  ஜப்பான் அரசின் உதவியோடு இங்கே உயரமான பல கட்டடங்கள்  கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்களின் அன்பாலும், அக்கறையாலும், சேவையாலும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது இந்த மருத்துவமனை.

ஜப்பான் நிதி உதவி

தெற்காசியாவிலேயே, குழந்தைகளுக்கான  சிறந்த மருத்துவமனை என்ற பெயரும் இதற்கு உண்டு. சென்னை மட்டுமன்றி மதுரை, திருச்சி, ஆந்திராவில் இருந்தெல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு மக்கள் இங்கே குவிகிறார்கள். நோய்களைச் சுமந்துகொண்டு, தன்னை நாடிவரும் குழந்தைகளைத் தாய்போல அரவணைத்து, குணப்படுத்தி அனுப்புகிறது இந்த 'பேபி மருத்துவமனை'! சில குறைகளையும் சரிசெய்துவிட்டால், நிறைவாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close