Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இட்லிக்கு ஏன் சட்னி, சாம்பார்? - காலை உணவின் ஆரோக்கிய ரகசியம் #GoodFood

த்தனை முறை சொன்னாலும் இது மாறப்போவதில்லை. இது, பரபரப்பான, இயந்திரமயமான வாழ்க்கைச் சூழல்தான். ஆண்களும் பெண்களும் அலுவலகத்துக்குச் செல்லவேண்டிய அவசரம்; குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டிய பரிதவிப்பு; கணவரையும் பிள்ளைகளையும் அனுப்பவேண்டிய கட்டாயத்தில் இல்லத்தரசிகளின் துடிதுடிப்பு எல்லாம் இருக்கும்தான். ஆனால், இவையெல்லாம் சேர்ந்துதான் காலை உணவைத் தவிர்ப்பது அல்லது அரைகுறையாகச் சாப்பிடுவதற்கான முக்கியக் காரணிகள் ஆகிவிடுகின்றன. காலை உணவைத் தவிர்ப்பதால், பல்வேறு நோய்கள் நம் உடலைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிடும். இதனால் உண்டாகும் பாதகங்கள் என்னென்ன... காலை உணவு ஏன் அவசியம்... காலை டிபனுக்குத் தேவையான இயற்கை உணவுப் பதார்த்தங்கள் எப்படி இருக்க வேண்டும்... இது குறித்து சித்த மருத்துவம் சொல்கிறது... அத்தனை அறிவியல் உண்மைகளையும் பார்ப்போம்! 

இட்லி சாம்பார்

காலை உணவுக்கு ஏற்றவை..

காலை உணவுக்குச் சில உணவுப் பொருள்களை அதிகம் பயன்படுத்தலாம் என்று சித்த மருத்துவம் தெரிவிக்கிறது. 

”காலைக் கறிகாருங் காரா மணியுளுந்து

தூலக் கடலை துவரை யெள்ளு – கோல மொச்சை

தட்டைச் சிறுபயறு தாழ்வில் கடுகுகறி

இட்ட சுக்கு காயமிவை” 

என்கிறது `பதார்த்த குண சிந்தாமணி’ பாடல். அதாவது, காராமணி, உளுந்து, கடலை, துவரை, எள், மிளகு, மொச்சை, தட்டைப் பயறு, சிறு பயறு, கடுகு, சுக்கு, பெருங்காயம்... என காலையில் அதிகம் சாப்பிடவேண்டிய உணவுப் பொருள்களைப் பட்டியலிடுகிறது. 

உணவியல் நுணுக்கங்கள்...

மேலே குறிப்பிடப்பட்டுள்ள துவரை, உளுந்து, தட்டைப் பயறு, சிறுபயறு, கடலை, மொச்சை, எள்... அனைத்துமே அடிப்படையில் இனிப்புச் சுவை கொண்டவை. இனிப்புச்சுவையுள்ள பதார்த்தங்கள், உடனடியாக உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியவை. இவை அனைத்திலுமே புரதச்சத்து நிறைந்துள்ளதால், ஒரு நாள் முழுமைக்கும் தேவைப்படும் போஷாக்கைக் கொடுக்கவல்லவை. அரிசியோடு சேர்ந்த உளுந்து இட்லிக்காகவும், பயறு வகைகள் சாம்பாருக்காகவும், கடலை வகைகள் சட்னி, துவையலுக்காகவும் பயன்பட்டு காலை உணவாக நம் மரபோடு பயணிப்பதில் ஆழமான அறிவியல் இருக்கிறது. 

பயறு, பருப்பு உணவுகளை காலையில் அதிகம் சேர்த்துக்கொள்பவர்களின் உடல் எடை சீராக இருப்பதாக ‘ஹார்வர்டு’ பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது. `காலை உணவில் புரதச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும்போது, பசி உணர்வு முறைப்படுத்தப்பட்டு, தேவையற்ற இடை உணவுகள் மீது ஆசை ஏற்படுவதில்லை’ என்கிறது மிகச் சமீபத்தில் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வு. ஆய்வு எதையும் செய்யாமலேயே, காலை உணவில் பயறு வகைகளைச் சேர்க்கச் சொன்னது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் என்பது சிறப்பு. காலை உணவு கட்டமைப்பை வடிமைத்த முன்னோர்களுக்கு, மேற்குறிப்பிட்ட பொருள்களில் ஒளிந்திருக்கும் புரதங்கள் பற்றித் தெரியாது. ஆனால் சுவை, வீரியம், பஞ்சபூத அடிப்படையில் அவை உடலுக்கு எந்த வகையில் ஊட்டத்தைக் கொடுக்கும் என்ற மருத்துவத் தத்துவம் பற்றி விரிவாகத் தெரியும். காலையில் நாம் சாப்பிடும் பிரதான உணவுகளுடன், மேற்சொன்ன புரதச் சுரங்கங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

காலை உணவு

நாள் முழுவதும் ஆற்றல் தரும்!

உடல் வன்மையைக் கொடுக்கும் உளுத்தங் கஞ்சியையும், பகல் வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சித் தன்மை உடைய பயத்தங் கஞ்சியையும் காலை உணவாக உட்கொண்டு கிராமங்களில் இன்றும் பலர் வலிமையுடன் வாழ்ந்துவருகிறார்கள். பருப்பு வகை உணவுகளைச் சாப்பிடும்போது உண்டாகும் வாயுத்தொல்லையை நீக்கத்தான், சமையலில் பெருங்காயம் சேர்த்து சமைக்கும் நுணுக்கம் உருவானது. சுக்கைத் தோல் சீவி உணவுகளில் சேர்ப்பதால் அல்லது சுக்குப் பானம் அருந்துவதால், உணவைச் செரிக்கும் திறன் அதிகரித்து நலம் உண்டாகும். நான்கு வரிப்பாடலில் காலை உணவுக்கான அனைத்துப் பொருள்களையும் பட்டியலிட்ட முன்னோர்களின் உணவியல் அறிவு வியக்கத்தக்கது. 

உடலுக்கு ஆதாரம்!

‘காலை வேளையில் ராஜாவைப்போல சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடை, மூன்று வேளைகளில் காலையில்தான் நாம் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. காலை உணவே அன்றைய தினத்துக்கான செயல்பாடுகளுக்கு ஆதாரமாக அமைகிறது. காலை உணவால், மூளைக்குத் தேவையான முழு ஆற்றல் கிடைக்கும். இதைத் தொடர்ந்து தவிர்த்தால், ஞாபகமறதிப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 

நோய்கள்

காலை உணவினைத் தவிர்ப்பதால் உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு, சர்க்கரைநோய், வயிற்றுப் புண் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். சீராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன்சுலின் ஊக்கியின் செயல்பாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டு, சர்க்கரைநோய் ஏற்பட்டு, இறுதியில் செயற்கை இன்சுலின் ஊக்கிகளிடம் ஆதரவு தேடும் நிலையும் ஏற்படும். `சர்குலேஷன்’ இதழ், 40–80 வயதினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் தவறாமல் காலை உணவை உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பது தெரியவந்திருக்கிறது. 

உடல் பருமன்

உடல் எடை குறையுமா?

‘காலை உணவைத் தவிர்த்துவிட்டால் விரைவில் உடல் எடையைக் குறைத்துவிடலாம் என்ற தவறான நம்பிக்கையில் பலர் காலையில் சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள். அதன் காரணமாக, சிறிது நேரத்தில் நொறுக்குத்தீனிகளைத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள்’ என்கிறது ஒரு கருத்துக் கணிப்பு. நம்மைச் சுற்றி ஆக்சிஜன் அதிகமாக இருக்கிறதோ, இல்லையோ... கேடு விளைவிக்கும் நொறுக்குத்தீனிகள் அதிகமாக இருக்கின்றன. அவற்றில் இருக்கும் கலோரி அளவுகளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. காலை உணவைத் தவிர்த்துவிட்டு, மதியம் மற்றும் இரவு உணவின் அளவுகளை அதிகரிப்பதால், உடல் எடை மேலும் பெருகி உடற்பருமன் நோய் உண்டாக வாய்ப்பிருக்கிறதே தவிர, உடல் எடை குறையாது. 

பள்ளி மாணவர்கள் கவனிக்க!

காலையில் சரியாகச் சாப்பிடாத பள்ளிக் குழந்தைகளின் கல்விச் செயல்பாடுகள் பெருமளவு குறைவதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அறிவுக்கூர்மை, சிந்திக்கும் திறன், கற்கும் ஆற்றல் போன்ற செயல்பாடுகளை காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகளிடம் அவ்வளவாக எதிர்பார்க்க முடியாது. ஆரோக்கியமான காலை உணவைப் பிள்ளைகளுக்கு வழங்கினாலே ஞாபகசக்தியை அதிகரிக்கும் டானிக்குகளையும் மாத்திரைகளையும் தேட வேண்டியிருக்காது.   

`அப்பெடைட்’ (Appetite) என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரை என்ன சொல்கிறது தெரியுமா? காலை உணவைத் தவிர்த்த பெரும்பாலான இளம் பெண்களிடம் மாதவிடாய் சார்ந்த ஏதாவதொரு குறைபாடு இருந்ததாக வெளிப்படுத்துகிறது. பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு முன்னர், உடல் சோர்வு, தலைபாரம், எரிச்சல், நடுக்கம் போன்ற அறிகுறிகளும் உண்டாகும். 

ராகி இட்லி

தீவிரமான விரதம் வேண்டாமே!

என்றாவது ஒரு வேளை விரதம் இருக்கலாம் தவறில்லை. செரிமானப் பகுதிகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலுக்குப் புத்துணர்ச்சிக் கொடுப்பதற்காகவே விரதங்கள் கடவுள் பெயரால் ஏற்படுத்தப்பட்டன. அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, வாரத்துக்கு நான்கு நாள்கள், ஐந்து நாள்கள் காலை உணவைச் சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடித்தால், பாதிப்பு உங்களுக்குத்தான். குறிப்பாக, சர்க்கரைநோயாளிகள், எந்தக் காரணத்தைக் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. ’நமக்கு மரபுப் பின்னணியும் இல்லை, இனிப்புகளையும் அவ்வளவாகச் சாப்பிடுவதில்லை. பின் எப்படி சர்க்கரைநோய் ஏற்பட்டது?’ என்று யோசிப்பவர்கள், காலை உணவைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். விடை கிடைத்துவிடும். 

வாழ்க்கைமுறை மாற்றத்தாலும், அவசரகதியான வாழ்க்கை முறையாலும் பல தவறுகளைச் செய்துகொண்டிருக்கிறோம். அதில் காலை உணவைத் தவிர்ப்பதென்பது நம்மை அறியாமல் செய்யும் முக்கியமானதொரு தவறு. திருத்திக்கொள்வோம்! காலை உணவைச் சாப்பிட்டு நாள் முழுக்க உற்சாகமாகச் செயல்படுவோம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement