துளசி, ஓமவல்லி, கொள்ளு... மழைக்கால நோய்களுக்கு மருந்தாகும் ரசங்கள்! #HealthyFoods

சம்... நமக்கு ஓர் இணை உணவு. வழக்கமாக நம்மில் பலருக்குத் தெரிந்தது புளி ரசமும் மிளகு ரசமும் மட்டுமே. ஆனால், மழைக்காலங்களில் ஏற்படும் சளி, ஜலதோஷம், தலைவலி, மூக்கடைப்பு, வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது ரசம். துளசி, தூதுவளை, ஓமவல்லி, கண்டதிப்பிலி, வெற்றிலை, கொள்ளு போன்ற ரசங்கள் உடல்நலனுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடியவை’’ என்கிற இயற்கை மருத்துவர் ஜீவா சேகர், எந்த ரசத்தில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கின்றன என்பது குறித்து விவரிக்கிறார் இங்கே...

ரசம்

மிளகு ரசம்

தமிழர்களின் அன்றாடச் சமையலில் நிச்சயம் மிளகுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. மிளகு, செரிமானக் கோளாறுகளைப் போக்க உதவும். ஜலதோஷம், தும்மல், சளித்தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும். உடல்வலியைத் தீர்க்கும். உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் அல்லது மலச்சிக்கலால் வயிற்றுவலி ஏற்பட்டால் அவற்றை மிளகு குறைக்கும். மிளகில் ரசம் வைத்துச் சாப்பிடுவது எளிது. அதோடு இந்த மழைக்காலத்துக்கு இதம் தரும். சரி... மிளகு ரசத்தை எப்படிச் செய்வது?

தேவையானவை: மிளகு - அரை டீஸ்பூன், வெள்ளைப்பூண்டு - 3 பல், சீரகம் - ஒரு டீஸ்பூன், தனியா - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தக்காளி - சிறியது, புளி - நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியாவை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளவும். பூண்டை நசுக்கி வைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாகக் கிள்ளிக்கொள்ளவும். புளியைத் தண்ணீர்விட்டு நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பெருங்காயத்தூள், அரைத்த மிளகுக் கலவையைச் சேர்த்து வதக்கி, கரைத்துவைத்திருக்கும் புளித்தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்க்கவும். ரசம் நுரைத்து வரும்போது கொத்தமல்லித்தழை போட்டு இறக்கினால் மிளகு ரசம் தயார்.

தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்

தூதுவளை இருமல், மூக்கில் நீர் வடிதல், சளி, இளைப்பு, ஆஸ்துமா போன்றவற்றைச் சரிசெய்யும். பெருவயிறு, மந்தம் போன்றவற்றைப் போக்கி நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். இதை துவையல், ரசம், சூப்... எனச் செய்து சாப்பிடலாம். 

தேவையானவை: தூதுவளை இலை - இரண்டு கைப்பிடி, ரசப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, புளி -எலுமிச்சை அளவு, துவரம் பருப்பு - இரண்டு டீஸ்பூன், மிளகு - சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,  தக்காளி - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தூதுவளைக் கீரையைச் சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். ஊறவைத்து நன்றாகக் கரைத்த புளித்தண்ணீருடன் உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி சேர்த்து வாணலியில் ஊற்றிக் கொதிக்கவிடவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். இவற்றுடன் வடிகட்டி வைத்த தூதுவளைச் சாறு, மிளகு, சீரகப் பொடி சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். நுரைத்து வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு வேறொரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளித்துக் கொட்டினால் மழைக்காலத்தில் இதமளிக்கும் தூதுவளை ரசம் தயார்.

ஓமவல்லி ரசம்


ஓமவல்லி ரசம்

கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி... இது இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. இதைப் பொதுவாகவே வெறுமனே மென்று, தின்று வெந்நீர் குடிப்பது அல்லது சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது வழக்கம். இன்னும் சிலர் மாலை நேரங்களில் கடலைமாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடுவார்கள். ஆனால், ஓமவல்லியில் ரசம் செய்து சாப்பிட்டால் மழைக்கால நோய்களுக்கு நிவாரணம் தரும்.

தேவையானவை: ஓமவல்லி இலைகள் - ஒரு கைப்பிடி, புளி - எலுமிச்சை அளவு, பூண்டுப் பற்கள் - மூன்று, தக்காளி - இரண்டு, பச்சை மிளகாய் - இரண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், தனியா, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இந்த ரசத்தை வழக்கமான மற்ற ரசம்போலவே செய்யலாம். ஆனால் பச்சை மிளகாயுடன் ஓமவல்லி, பூண்டு சேர்த்து அரைத்து ஊற்றி இறக்கினால் தொண்டைக்கு இதம் தரும் ஓமவல்லி ரசம்.

துளசி ரசம்

துளசி... இது சளி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடலில் உள்ள நச்சுத்தன்மை உள்ளிட்டவற்றை சரிசெய்யும். துளசியை வெறுமனே மென்று சாப்பிடுவது, சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது என இருந்தாலும் இந்த மழைக்கு ரசமாக்கிச் சாப்பிடுவது பலன் தரும்.

தேவையானவை: துளசி இலைகள் - ஒரு கப், மிளகு - இரண்டு டீஸ்பூன், சீரகம், துவரம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை: முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். துளசியைத் தனியாக அரைத்துக்கொள்ளவும். நன்றாக ஊறவைத்த புளியைக் கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு அரைத்த மிளகு, சீரகம் உள்ளிட்ட கலவையைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியைச் சேர்த்து நுரை வந்ததும் இறக்கவும். எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சேர்த்தால் கமகமக்கும் துளசி ரசம் தயார்.

கொள்ளு ரசம்

கொள்ளுப் பயறு... ஜலதோஷம், இருமல், உடல்வலி மற்றும் சோர்வை நீக்கும். கொள்ளுத் துவையல் சாப்பிடச் சுவையாக இருக்கும். அதில் ரசம் செய்து அருந்துவது மழைக்காலத்துக்கு ஏற்றது. `நீரேற்றமோடு குளிர் சுரம் போம்' என்று கொள்ளின் பயனை அகத்தியர் பாடல் எடுத்துரைக்கிறது, ஆனால் `கொள்ளு ரசம் குடிச்சா ஜலதோஷமெல்லாம் ஜகா வாங்கிடும்' என்று புதிய பழமொழி ஒன்று சொல்லப்படுகிறது. கொள்ளு ரசம் நெஞ்செரிச்சல், வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம் போன்றவற்றுக்கும் நல்ல மருந்து.

தேவையானவை: கொள்ளு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3, தனியா - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - எட்டு, பூண்டுப்பல் - மூன்று, கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொள்ளுப் பயறை குக்கரில் வைத்து மூன்று கப் தண்ணீர்விட்டு, நான்கு விசில் வரும்வரை வேகவைக்கவும். பிறகு வெந்த கொள்ளுப் பயறுடன் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். தேவையானால் வேகவைத்த தண்ணீருடன் அரைத்த பொருள்களைச் சேர்த்து மஞ்சள்தூள் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, கொதி வந்த கலவையுடன் சேர்த்தால் கொள்ளு ரசம் தயார். 

இதேபோல் பூண்டு, வெற்றிலை, கண்டதிப்பிலி போன்றவற்றிலும் ரசம் செய்து சாப்பிடலாம். இவை மழைக்காலத்துக்கு ஏற்ற இதம் தரும் பானங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!