வெளியிடப்பட்ட நேரம்: 11:59 (09/11/2017)

கடைசி தொடர்பு:11:59 (09/11/2017)

பரிசுப் பெட்டகம், இலவச சிகிச்சை! - கர்ப்பிணிகளைக் காப்பதில் இந்தியாவுக்கே முன்மாதிரியாகும் தமிழ்நாடு!

பிரசவம் பெண்களுக்கு மறு பிறப்பு. சில தனியார் மருத்துவமனைகளுக்கோ நல்ல வருவாயை அள்ளித்தரும் ஒரு நிகழ்வு. இன்றைக்கு வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்கூட பிரசவத்துக்காக அடைக்கலமாகும் இடமாகப் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளே இருக்கின்றன. ஆனால், பிரசவத்தில் சிக்கல் நேரும்போது, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பாதிக்கப்பட்ட பெண்களை அனுப்பிவைக்கும் இடமாக இருப்பவை அரசுப் பொது மருத்துவமனைகளே! உண்மையில் கர்ப்பிணிப் பெண்களை கரிசனையோடுதான் பார்க்கிறது அரசு. ஒரு பெண் கருவுற்ற காலத்தில் ஆரம்பித்து, பிரசவம், குழந்தைக்கு 16 வயது ஆகும் காலத்தில் போடவேண்டிய தடுப்பூசி வரை நாள் குறித்து, பக்கா புள்ளிவிவரங்களுடன் தாய்க்கும்-சேய்க்குமாக ஓர் ஆவணத்தையே உருவாக்கி, பராமரித்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்துவைத்திருக்கிறது அரசு.  இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார் தமிழக அரசின் சுகாதரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்... 

``தமிழகத்தில் ஒரு பெண், தான் கருவுற்றதும், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து தன் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். அந்தப் பெண் தொடர்பான தகவல்களைப் பதிவுசெய்ய  சுகாதாரத் துறையில் தனியாக ஒரு தனி மென்பொருளே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் பெயர், ‘மகப்பேறு மற்றும் சிசு கண்காணிப்பு’  (Pregnancy Infant Cohort Monitoring Evaluation (PICME). கருவுற்ற பெண்ணின் அடையாளங்கள், ஆதார் எண், வங்கி கணக்கு போன்றவற்றை அந்த மென்பொருளில் பதிவுசெய்வார்கள். அதன்பிறகு அந்தப் பெண்ணின் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ளும் வேலை சுகாதாரத் துறைக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

அரசு மருத்துவமனை - கர்ப்பிணி

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வேண்டிய சிகிச்சைகள் அனைத்தையும் பெறலாம். கருவுற்றிருக்கும் காலத்தில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது மற்றும் உடல்நலப் பராமரிப்பு குறித்தத் தகவல்களை அந்தந்தப் பகுதி சுகாதார செவிலியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அரசு சார்பில் அளிக்கப்படும் மருத்துவ சேவைகள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம், பெறலாம். பிரசவ காலத்தில் தாய் வீடு செல்லும் கர்ப்பிணிப் பெண், அந்தப் பகுதியில் இருக்கும் சுகாதார செவிலியர்களிடம் பதிவுசெய்துகொண்டு, பிரசவ காலச் சேவைகளைத் தொடர்ந்து பெறலாம். 

கர்ப்பிணிகள் பதிவுசெய்துகொண்ட தினத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, சுகாதார நிலையத்துக்கு வந்து மகப்பேறு சிறப்பு மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவும் இங்கே இலவசமாக வழங்கப்படுகிறது.

கருவுற்றிருக்கும் ஏழைப் பெண்களுக்கு வரப்பிரசாதம் அரசு சார்பில் செயல்படும் `டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம். கர்ப்ப காலத்தில் சத்தான உணவுக்கான செலவுகளுக்காகவும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் வருமான இழப்பை ஈடு செய்யவும், ஊட்டச்சத்தைக் கொடுப்பதன் மூலம் குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதற்காகவும் இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. 6,000 ரூபாயில் ஆரம்பித்த நிதியுதவி,  1.6.2011 முதல் 12,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும். இப்போது 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்கீம்

பிரசவத்துக்கு முன்பு முதல் தவணையும், அரசு மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்களுக்கு இரண்டாவது தவணையும், குழந்தைக்கு அனைத்து தடுப்பூசிகளும் போட்டு முடிந்த பிறகு மூன்றாவது தவணையும் வழங்கப்படும். புலம்பெயர்ந்த இலங்கை அகதிகளும் இந்த நிதி உதவியைப் பெறலாம். ஒவ்வோர் ஆண்டும் இந்தத் திட்டத்தின் கீழ் சராசரியாக ஆறு லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 41.83 லட்சம் பெண்களுக்கு, 3,915.81 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது.

மாநிலம் முழுவதும் பொது சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் பல சிறப்பு சேவைகள் கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கும். அறுவைசிகிச்சை அரங்கம், மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, ஆய்வுக் கூடம், ரத்த சேமிப்பு வங்கி,  தாய்சேய் நலச்சேவைகள் 24/7 மணி நேரமும் வழங்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே தாய்-சேய் அடிப்படை பராமரிப்புக்கான அனைத்து வசதிகளும் உள்ளன. 

`ஜனனி சுரக்‌ஷாயோஜனா’ என்ற திட்டத்தின் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு ஊரகப் பகுதிகளில் 700 ரூபாயும், நகர்ப்புறங்களில் 600 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் இலவச மருந்து மாத்திரைகள், நோய்கண்டறிந்து அதற்கான சிகிச்சை, இலவச உணவு ஆகியவை வழங்கப்படுகின்றன. வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கும் அழைத்துச் செல்ல இலவச போக்குவரத்து இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.  கருவுற்ற பெண்கள், பிரசவத்துக்கு 108 ஆம்புலன்ஸையும் பயன்படுத்திக்கொள்ளலாம். கடந்த ஆறு ஆண்டுகளில் 13.7 லட்சம் பெண்கள் இந்தச் சேவையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் பெண்களுக்கு அவசர சிகிச்சையோ, அறுவைசிகிச்சையோ தேவைப்பட்டால் அதற்கும் வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவ நிலையங்களில் 89 ரத்த வங்கிகளும், 383 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்படுகின்றன.  உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் ஆகியவற்றுக்கு பரிசோதனை செய்யும் வசதியும், சிகிச்சையும் இலவசமாகவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கும்.

குழந்தை பிறந்ததும் மகளிரின் ஆரோக்கியம் காக்க 11 வகையான சித்த மருத்துவ மூலிகைகள் அடங்கிய `மகப்பேறு சிகிச்சை பெட்டகம்’ வழங்கப்படுகிறது. பிரசவத்துக்குப் பின்னர் தாய்க்கும் சேய்க்கும் மிக அவசியமானது தடுப்பூசி. ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் தாய்மார்களுக்கும் 11 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இது தவிர, மகப்பேறின்போது ரணஜன்னி ஏற்படாமல் தடுக்க அதற்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

ரத்தசோகை

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தசோகையைக் கட்டுப்படுத்த, இரும்புச் சத்து ஊசி பயன்பாட்டை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு. பிரசவத்தின்போது பிரசவிக்கும் பெண்களுக்கு தைரியம் ஊட்ட பிரசவ அறையில் ஓர் உறவினர் உடனிருக்கும் திட்டம் தமிழகத்தில் 2004-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சுற்றுலா ஏற்பாடு செய்தல், வளைகாப்பு விழா நடத்துதல், 16 பொருள்கள் அடங்கிய குழந்தை நலப் பரிசு பெட்டகம் வழங்குதல் என எத்தனையோ நல்ல விஷயங்களை அரசு மருத்துவமனைகள் முன்னெடுத்து நடத்துகின்றன. தாய்ப்பால் வங்கிகள், 352 பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்ட தனியறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் பிரசவத்துக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் பெண்களின் இறப்பு விகிதமும் குழந்தைகள் இறப்பு விகிதமும் கணிசமாகக் குறைந்துள்ளது. கர்ப்பிணிகளின் இறப்பு விகிதம் ஒரு லட்சம் குழுந்தைகளுக்கு 62-ஆகக் குறைந்திருக்கிறது. இதேபோல் குழந்தை இறப்பு விகிதம் 2016-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 1,000 குழந்தைகளுக்கு 17-ஆகக் குறைந்திருக்கிறது. குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக, 2012-13 மற்றும் 2014-15...  மூன்று ஆண்டு காலத்துக்கு மத்திய அரசிடமிருந்து 489.40 கோடி ரூபாயை ஊக்க நிதியாக பெற்றிருக்கிறது தமிழ்நாடு’’ என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தாய் சேய் நலம்

பல ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன் மாதிரி சிகிச்சை மையங்களாக மாறிவரும் காலம் இது. கருவுற்ற காலத்திலிருந்து கர்ப்பிணிகளின் நலம் காத்தல், குழந்தைகளின் வளரிளம் பருவம் வரை தடுப்பூசி போட்டு நோய் வராமல் தடுத்தல், இலவச உடல் பரிசோதனைகள்... என அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எத்தனையோ வசதிகளும் சிகிச்சைகளும் இலவசமாகவே கிடைக்கின்றன. தொட்டதற்கெல்லாம் டெஸ்ட், ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள், வலிநிவாரணிகள்... எனப் பரிந்துரைக்கும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து கருவுற்ற பெண்கள் தள்ளியிருப்பதே தாய், சேய் இருவரின் எதிர்காலத்துக்கும் நல்லது. அதற்குப் பதிலாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போய் வரலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்