இனி, 130/80 இருந்தாலே உயர் ரத்த அழுத்தம்... பீதி கிளப்பும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்!

முன்பெல்லாம் 50 வயது கடந்தவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வரும். ரத்த அழுத்தம் என்கிற வார்த்தையே கிலியை ஏற்படுத்தும். இன்று அதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. 30 வயதுக்காரரெல்லாம் பி.பி. என்று 'பெருமை'யாகச் சொல்லிக்கொள்கிறார்.  

உயர் ரத்த அழுத்தம்

உடல் சீராக இயங்க ரத்த ஓட்டம் அவசியம். ரத்த ஓட்டத்தை நிர்வகிக்கும் பம்பிங் ஸ்டேஷனாக இதயம் செயல்படுகிறது. இதயம் சுருங்கி விரியும்போது, ரத்த நாளங்களில் உள்ள அழுத்தமானது, வழக்கமான அளவை விட குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கும் நிலையே ரத்த அழுத்தம் (Blood pressure). பொதுவாக இதயம் சுருங்கும்போது 120 மி.மி மெர்க்குரி அளவும், விரியும்போது 80 மி.மி. மெர்க்குரி அளவும் இருந்தால் நார்மல். ஆனால் இது ஆளாளுக்கு வேறுபடும் என்பதால் பொதுவில் 140 மி.மி மெர்க்குரி அளவுக்கு மேலும் விரியும்போது 80 மி.மி. மெர்க்குரி அளவுக்கு மேலும் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தம் என்று வரையறை செய்யப்பட்டது. 

டென்சன்

இந்த நிலையில், 'அமெரிக்கன் ஹார்ட் ஆசோசியேசன்' நிறுவனம் (American Heart Association) ஓர் ஆய்வை நடத்தியது. 140/90 என்ற வரையறுக்கப்பட்ட அளவுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தத்தால் ஏற்படக்கூடிய இதய பாதிப்புகளும் பக்கவாதமும்இதய நோய் நிபுணர் சொக்கலிங்கம் அதிகரித்து வருவது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. அதன் காரணமாக, உயர் ரத்த அழுத்தத்துக்கான வரையறையை 130/80 என்று மாற்றியமைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது அந்த அமைப்பு. இந்த அறிவிப்பு அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 130/80 என்ற அளவே உயர் ரத்த அழுத்தத்துக்கான அளவாக வரையறை செய்யப்பட்டதால் சுமார் 32 சதவிகித அமெரிக்கர்கள் ரத்த அழுத்த நோயாளிகளாக மாறும் நிலை? 

இது மருந்து கம்பெனிகளுக்குச் சாதகமான செயல் என்று ஒரு தரப்பு சொல்கிறது. இன்னொரு தரப்பு இது ஆக்கபூர்வமான அறிவிப்பு என்கிறது. 

இந்த ஆய்வு முடிவை எப்படி எடுத்துக்கொள்வது. இதன் பின்னணி என்ன? 

இதய நோய்  சிகிச்சை  நிபுணர் சொக்கலிங்கத்திடம் கேட்டோம். 

"அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசனின் அறிவிப்பு இரண்டு விதமான விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.  

ரத்த அழுத்த அளவு

உலக சுகாதார நிறுவனம் 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று வரையறை செய்துள்ளது. இந்த அளவைத்தான் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் 130/80 என்று மாற்றியமைக்க பரிந்துரைத்திருக்கிறது. அமெரிக்காவில் இதய நோய்கள் குறித்து ஆய்வுகள் செய்து ஆலோசனை வழங்கும் ஒரு முன்னணி அமைப்பாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேன் நிறுவனம் விளங்குகிறது. தற்போது இந்த நிறுவனம் வழங்கியுள்ள அறிவுரையானது, பிற நாடுகளையும் ஆய்வு செய்ய தூண்டியிருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டிருப்பது வெறும் அறிவுரைதான். பல்வேறு நாடுகளின் மருத்துவ ஆய்வு அமைப்புகளும் ஆய்வு செய்து முடிவுகளை அறிவித்தபிறகே  உலக அளவில் இறுதி முடிவெடுக்கப்படும்.  

தற்போது அமெரிக்கன் ஹார்ட் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கை உண்மையாகும்பட்சத்தில் 140/90 மி.மீ. என்ற அடிப்படையில் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை எடுத்துக்கொண்டவர்கள்  இனி, 130/80 என்றளவிலேயே மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

ரத்த அழுத்தமானி

ரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது, படுத்திருக்கும்போது எடுக்கப்படும் ரத்த அழுத்த அளவுகளில் வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு ரத்த அழுத்தம் அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும்

இது தற்காலிக மாற்றமே. உடல் ஓய்வு கொள்ளும்போது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்குத் தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இது இயல்பு நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒரு முறை மட்டும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து விட்டு, உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது. இயல்பான நிலையில் ரத்த அழுத்தம் எடுப்பதுவே சிறந்தது என்கிறார் அவர். 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!