வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (16/11/2017)

கடைசி தொடர்பு:09:00 (16/11/2017)

“கால் இல்லைனா நடக்க முடியாதா..?! நான் மலையே ஏறுவேன்!” சாதனைக் கதை #MotivationStory

ஹக் ஹெர் தன்னம்பிக்கை கதை

சிலர் அப்படித்தான். ஒன்றை அடையவேண்டுமென்று ஆசைப்பட்டுவிட்டால், எதை இழந்தாலும் தளர மாட்டார்கள். உடலில் உயிர் என்ற ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் வரை தாங்கள் விரும்பியதை அடையப் போராடுவார்கள். ஒருவிதத்தில் `சாதனை புரிதல்’ என்பதுகூட போதைதான்… ஆரோக்கியமான போதை. அது, குடும்பம், உறவுகள், வாழ்க்கை, சமூகம் அனைத்தையும் புறங்கையால் ஒதுக்கிவிடும் அளவுக்கு ஒரு மனிதனைத் தயார்ப்படுத்திவிடும். உண்மையில், சாதனை புரிவதால்தான் அவர்களை மகத்தான மனிதர்களாக இந்த உலகம் பார்க்கிறது. வரலாறு, அவர்களுக்கென தனிப் பக்கத்தை ஒதுக்கி சீராட்டி, பாராட்டி, உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைத்து மகிழ்ந்து, கொண்டாடுகிறது. எதை எதையோ இழந்து… ஏன்… எல்லாவற்றையும் இழந்து சாதனைப் படிகளில் ஏறியவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் ஹக் ஹெர் (Hugh Herr). மலையேற்ற வீரரான ஹெர் பறிகொடுத்தது சாதாரணமான ஒன்றல்ல… அதற்குப் பிறகும் அவர் நிகழ்த்திய சாகசங்கள் யாராலும் நம்ப முடியாதவை; நம்மை மலைக்கவைப்பவை. யார் இந்த ஹெர்… பார்க்கலாமா?

முயற்சி

அமெரிக்கா, பென்சில்வேனியாவுக்கு அருகேயிருக்கும் லேன்கேஸ்டரில் (Lancaster) 1964-ம் ஆண்டு பிறந்தவர் ஹக் ஹெர். சின்ன வயதிலிருந்தே ஹெர்-ருக்கு சாகசத்தில் ஆர்வம். குறிப்பாக, மலையேறுவதில் கட்டுக்கடங்காத ஆர்வம். அம்மாவும் அப்பாவும் ஊக்கம் கொடுக்க, மலையேற்றம் பழகினார். வீட்டுச் சுவரில் ஏணியை வைத்து ஏறுவதுபோல, படிக்கட்டுகளில் ஏறி பல மாடிகளைக் கடப்பதுபோல கரடுமுரடான மலையில் சர்வ சாதாரணமாக மலைகளில் ஏறினார் ஹெர். அமெரிக்காவில் மலையேற்றக் குழுவினர் நிறையப் பேர் இருக்கிறார்கள். அந்தக் குழுக்கள் ஒன்றில் இணைந்து முறையாக மலையேற்றம் பழகினார். ஏழு வயதிலேயே கனடாவில் இருக்கும் `மவுன்ட் டெம்பிள்’- மலையின் (Mount Temple) 11,627 அடி உயரத்தில் ஏறி, `யார் இந்தப் பையன்’ என்று அமெரிக்காவையே திரும்பிப் பார்க்கவைத்தார். 17 வயதில், `அமெரிக்காவில் இருக்கும் மிகச் சிறந்த மலையேற்ற வீரர்களில் ஒருவர்’ என்ற புகழையும் பெற்றார்.

காலம் போட்டுவைத்திருக்கும் கணக்கு விசித்திரமானது. அது, யாரை என்ன செய்யக் காத்திருக்கிறது என்பதை மனிதர்கள் அறிய மாட்டார்கள். பல உயரமான மலைகளில் ஏறி, சாதனை செய்யத் துடிக்கிற ஓர் இளைஞர் ஹெர். அமெரிக்காவில் எங்கெல்லாம் மலைகள் இருக்கின்றனவோ, அத்தனையையும் ஒருகை பார்க்க வேண்டும், அத்தனை உயரங்களையும் ஏறிக் கடந்து, யாரும் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்ட வேண்டும் என்கிற லட்சியம் அவரிடம் ஊறியிருந்தது. அமெரிக்கா மட்டுமல்ல, ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா… என மலைகள் இருக்கும் கண்டங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும்… வெயில், பனி, மழை எந்தக் காலமாக இருந்தாலும் கவலையில்லை, விதவிதமான மலைகளில் ஏறி, பல உயரங்களைத் தொட வேண்டும் என்கிற வேட்கை ஹெர்-ருக்கு சிறு வயதிலேயே விதைபோல ஆழமாக மனதில் விழுந்திருந்தது. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவது அத்தனை சுலபமானதாக இல்லை.

மலை

அது, 1982-ம் ஆண்டு, ஜனவரி மாதம். ஹெர், தன் நண்பர் ஜெஃப் பேட்ஸெர் (Jeff Batzer) என்பவருடன் அடுத்த இலக்கை அடையும் பயணத்தைத் தொடங்கியிருந்தார். அமெரிக்காவின், நியூ ஹாம்ப்ஷையரில் (New Hampshire) இருக்கும் வாஷிங்டன் மலையில் ஏறுவது அவர் திட்டம். காலநிலை, தட்பவெப்பம் அத்தனையையும் கணக்குப்போட்டுத்தான் பயணத்தைத் தொடங்கினார்கள். ஆனால், எதிர்பாராமல் மாட்டிக்கொண்டார்கள். மலையேற்றம் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால், அவர்கள் திரும்பி வந்த பாதை, கடுமையானது. பனிப் பொழிவு, வழியெங்கும் ஐஸ் கட்டிகள். போதாக்குறைக்குப் பனிப்புயல். மேற்கொண்டு ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாதபடி, ஓரிடத்தில் (Great Gulf) வசமாக சிக்கிக்கொண்டார்கள். குளிரென்றால் ஆளைக் கொல்லும் குளிர். ஆடைகள், அதற்கு மேல் அணிந்திருந்த கோட், மேலே ஸ்வெட்டர், அதற்கும் மேலே ஜெர்கின்… இத்தனையையும் ஊடுருவி எலும்பைத் தாக்கும் குளிர். மைனஸ் 29 டிகிரி சென்டிகிரேடு தட்பவெப்பநிலை. உடலும் உள்ளமும் ஒடுங்கிப்போய் அப்படியே இருந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் இயற்கையின் கைதிகளானார்கள் இருவரும். ஒரு நாள் அல்ல… மூன்று நாள்கள் நகர முடியாமல் அங்கேயே, இருந்த நிலையில் அப்படியே கிடந்தார்கள்.

Hugh Herr

அவர்களைக் காப்பாற்றும் குழுவினர் வந்தபோது ஹெர்-ருக்கும் பேட்ஸெருக்கும் உயிர் போகவில்லை; ஆனால், இருவருமே குற்றுயிரும் குலையுயிரும் என்கிற நிலையில் இருந்தார்கள். விறைத்துப்போய், கிட்டத்தட்ட சடலங்கள்போல் இருந்தார்கள். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அந்தப் பனி விபத்தில் ஹெர்-ருக்கு ஏற்பட்டது பேரிழப்பு. `அவருடைய முழங்காலுக்குக் கீழ் இருக்கும் பகுதியை வெட்டியெடுக்க வேண்டும். இல்லயென்றால் பிழைக்க மாட்டார்’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.

ஒரு சாதாரண ஜலதோஷத்தைக்கூடத் தாங்க முடியாத மனிதர்களும் இருக்கிறார்கள்; மாரடைப்பே வந்தாலும் கலங்காத மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களில் ஹெர், இரண்டாவது ரகம். விதவிதமான மலைகளை ஏறிக் கடக்க வேண்டும் என்ற தன் லட்சியத்துக்கு எது அவசியமோ, அந்தக் கால்களையே இழந்திருந்தார் ஹெர். ஆனால், அவர் மனம் கலங்கவில்லை. அறுவைசிகிச்சை முடிந்து, புண்கள் ஆறியதும் ஆற, அமர யோசித்தார். `கால்கள் கிடக்கட்டும். மலையேற வேண்டும், அது முக்கியம். அதற்கு என்ன செய்வது?’ என்பதுதான் அவருடைய யோசனையாக இருந்தது. `மலை ஏறணுமா… சான்ஸே இல்லை. அதை மறந்துடு’ என்றார்கள் மருத்துவர்கள்.

மலைப்பயணம்

ஹெர் மலையேற்ற வீரர் மட்டும் கிடையாது. ஒரு இன்ஜினீயர்; உயிரி இயற்பியலாளர் (Biophysicist). நம்ப ஊர் ஐ.ஐ.டி மாதிரி அமெரிக்காவின் முக்கியமான கல்வி நிறுவனம் எம்.ஐ.டி (Massachusetts Institute of Technology). அதில் ஹெர், ஆய்வு மாணவர். அவர் முக்கியமாக ஈடுபட்டிருந்தது, மனித உறுப்புகளுக்கு நிகரான செயற்கை உறுப்பு ஆராய்ச்சியில். அது, கடைசியில் அவருக்கே தேவைப்படும், உதவும் என அவர் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. தன் முழங்கால்களுக்குக் கீழே ஆபரேஷன் செய்யப்பட்ட பகுதிகளைச் செயற்கை முறையில் தானே வடிவமைத்தார் ஹெர். பாறை விளிம்பில் நிற்பதற்கு விரல்கள் அவசியம். அதற்கேற்றபடி பாதப் பகுதிகளை வடிவமைத்தார். பனிப் பாறைகளில் ஏறுவதற்கு வசதியாக கால் பகுதியை உருவாக்கினார். அந்தச் செயற்கைக் கால்கள், தன் உருவத்தை விகாரமாகக் காட்டாதபடி மாற்றியமைத்துக்கொண்டார். மறுபடி செயற்கைக் கால்களின் உதவியுடன் மலையேற ஆரம்பித்தார் ஹெர். இப்போது விபத்துக்கு முன்னால்தான் ஏறிய உயரங்களைவிட அதிகமாக ஏறி சாதனைபுரிந்து, உலகையே வியக்கவைத்தார்.

கால்களை இழந்திருந்தாலும் அதை ஓர் இழப்பாகவே நினைக்கவில்லை ஹெர். அதனால்தான் அவருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்தது. பேட்ரிஸியா எல்லிஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரு மகள்கள். செயற்கை உறுப்புகளுக்கான வடிவமைப்பில் ஹெர்ரின் கண்டுபிடிப்பு மருத்துவ அறிவியலில் முக்கியமான ஒன்று. அது தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார் ஹெர். கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை, பல விருதுகள் பெற்றார். அவருடைய கண்டுபிடிப்புகள் `டைம்’ பத்திரிகையின் `டாப் 10 கண்டுபிடிப்புகள்’ பகுதியில் இடம்பெற்றன. ஹெர்-ன் வாழ்க்கைக் கதை புத்தகமாகவும், `டிஸ்கவரி’, `நேஷனல் ஜியாக்ரபி’ சேனல்களில் டாக்குமென்டரியாகவும் வெளிவந்திருக்கிறது.

எதை இழந்தாலும், கலக்கம் அடையாமல் இருந்தால் விரும்பியதை அடையலாம், சாதித்துக் காட்டலாம் என்பதற்கு வாழும் உதாரணம் ஹெர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்