வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (18/11/2017)

கடைசி தொடர்பு:11:44 (18/11/2017)

புற்றுநோய் எதிர்க்கும், அல்சைமர் தடுக்கும், இதயத்துக்கு இதம் தரும் மஷ்ரூம்! #HealthyFood

‘காளான், ஆன்டிஆக்ஸிடென்ட்களை அள்ளித் தருகிறது’ என்பது அண்மையில் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் விஷத்தன்மை அதிகம் ஏறாமல் பாதுகாக்கும் தன்மைகொண்டவை ஆன்டிஆக்ஸிடென்ட்கள். மழைக் காலத்துக்குப் பின்னர் நிலங்களில் காளான் தேடியலைந்த காலம் ஒன்று இருந்தது; இப்போது `பட்டன் மஷ்ரூம்’ (Button Mushroom) வளர்ப்பு, குடிசைத்தொழிலாக மாறிய பின்னர், எங்கும் எப்போதும் தாராளமாகக் கிடைக்கும் ஓர் உணவுப் பொருளாகிவிட்டது காளான். ஒரு சைவ விருந்தைக்கூட ரிச்சானதாக மாற்றிவிடும் தன்மை இதன் ஸ்பெஷல். நம் உணவுப் பட்டியலில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும் இதைப் பற்றி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின், ஃபுட்சயின்ஸ் துறையினர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வு முடிவில், ஒரு தகவலைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்... `மற்ற எந்த உணவைவிடவும் காளானில் அதிகளவு எர்கோதையோனின் (Ergothioneine), குளூட்டோதியோன் (Glutathione) போன்ற அமினோ அமிலங்கள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் இருக்கின்றன. இவை பல்வேறு நோய்கள் உடலைத் தாக்காமல் பாதுகாக்கின்றன’ என்கிறார்கள்.

மஷ்ரூம்

காளானில் உள்ள சத்துகள், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார் விளக்குகிறார்... `ஆன்டிஆக்ஸிடென்ட் உணவுகள், உடலில் இருக்கும் நச்சுத் தன்மையைக் குறைக்கும். இந்தச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். நரம்புத் தொடர்பான நோய்கள், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை வராமல் தடுக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.டாக்டர் அபிராமி வடிவேல்குமார்

பட்டன் காளானில் வைட்டமின் பி, சி சத்துகளும், செலினியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜின்க் சத்துகளும் நிறைந்துள்ளன. உடலில் நோய்த்தடுப்பு, நோய் எதிர்ப்புச் சக்தி என இருவிதமாகவும் காளான் உணவுகள் நம் உடலில் செயல்பட்டு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியவை.

காளான் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்...

* புற்று நோய் எதிர்ப்பு: காளானில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் சத்து, உடலில் உள்ள நச்சுப் பொருள்களின் அளவைக் குறைப்பதால், புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்பு குறையும்.

* நோய் எதிர்ப்பு சக்தி: காளானில் உள்ள சில மருத்துவக் குணங்கள் கிருமி நாசினியாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

* இதயத்துக்கு இதம்: உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதால் இது, இதயத்துக்கு இதமானது. கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் இதயநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

* மூளை மற்றும் நரம்புகளின் இயக்கத்தைத் தூண்டும். இதில் உள்ள வைட்டமின் பி சத்துகள், நரம்பு மற்றும் மூளை இயக்கத்தைத் தூண்டுகின்றன.

அல்சைமர்

* மறதியைத் தடுக்கும்: `அல்சைமர்’ எனப்படும் முதுமைக் காலத்தில் ஏற்படும் மறதி நோய் வராமல் தடுக்கும்.

* ரத்த அழுத்தத்துக்கான வாய்ப்புகளைக் குறைக்கும். ரத்த அழுத்தம் ஏற்படும்போது, உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். இந்தப் பற்றாக்குறையைச் சமன் செய்ய காளானிலிருந்து கிடைக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துகள் உதவுகின்றன.

* காளானில் இருக்கும் தாமிரச்சத்து ரத்தநாளங்களில் ஏற்படும் பாதிப்புகளைச் சீர் செய்யும். மூட்டுவாதம், கர்ப்பப்பை நோய்கள் குணமாகவும் உதவும். மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.

காளான்

இப்படி எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும் காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு மஷ்ரூம் கிரேவி, பெப்பர் சில்லி மஷ்ரூம், மஷ்ரூம் டாப்பிங், ஸ்டஃபிங், மஷ்ரூம் எக் ஆம்லெட்... என விதவிதமாகக் காளானை சமைத்து ருசிக்கலாம்’’ என்கிறார் அபிராமி வடிவேல் குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்