வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (24/11/2017)

கடைசி தொடர்பு:12:19 (24/11/2017)

சித்தா, ஹோமியோபதி டாக்டர்கள் அலோபதி மருத்துவம் பார்க்கலாமா? - என்ன சொல்கிறது சட்டம்?

‘போலி மருத்துவர்கள் கைது’ - அண்மைக்காலமாக அதிகம் அடிபடும் செய்தி. கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் பல போலி மருத்துவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கைத் தொடர்ந்துவருகிறது. இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்கள் `போலி மருத்துவர்கள்’ என்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பத்தாம், பன்னிரண்டாம் வகுப்புப் படித்துவிட்டு வைத்தியம் பார்த்தவர்கள் ஏராளமானோர்.  
அவர்களோடு சித்தா, ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்தார்கள் என்று அடையாளம் காட்டப்பட்டு  சிலரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். 

மருத்துவர்கள்

அப்படிக் கைதுசெய்யப்பட்டவர்களின் ஒருவர்தான் இடைக்காட்டூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் பாண்டீஸ்வரி.
தனக்கு நேர்ந்த துயரத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்... “பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, மருத்துவம் செய்யும் போலிகளையும், ஐந்தரை வருடம் மருத்துவம் பயின்று சிகிச்சையளித்துவரும் எங்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார்கள். போலிகளுக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. கொடுக்கவேண்டியவர்களுக்கு பணத்தைக் கொடுத்து மீண்டும் மருத்துவம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால், படித்திருந்தும் அவமானப்படும் எங்களின் நிலைதான் மிகவும் பரிதாபம்” என்று கலங்கிபோன குரலில் பேசுகிறார் பாண்டீஸ்வரி. 

“இடைக்காட்டூரில், என் வீட்டில்தான் என்னுடைய கிளினிக்கும் இருக்கிறது. அன்று நான் வீட்டு வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தேன். விறுவிறுவென்று வீட்டுக்குள் வந்தவர்கள் நான் போலி மருத்துவர் என்று சொல்லி வண்டியில் ஏறச் சொன்னார்கள். ‘நான் ஹோமியோபதி படித்திருக்கிறேன். போலி மருத்துவர் இல்லை’ என்று அவர்களிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனால், அவர்கள் நான் சொன்னதைக் கேட்கவே இல்லை. 

பாண்டீஸ்வரி

என்னைக் கைதுசெய்த அன்று,  எங்கள் ஊரில் உண்மையான போலி மருத்துவர்கள் இருவரைக் கைதுசெய்திருந்தார்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில்தான் என்னையும் கைதுசெய்திருக்கிறார்கள். என்னிடம், எந்த விசாரணையும் செய்யவில்லை. எனக்கு குழந்தை பிறந்திருப்பதால், கடந்த இரண்டு மாதங்களாக வைத்தியமே பார்க்கவில்லை. அப்படி இருக்கையில் என்னை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து, வழக்குப் பதிந்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தார்கள் . சிறையில் மூன்று நாள்கள் கைக்குழந்தையுடன் மிகவும் அவதிப்பட்டேன். முதல் தகவல் அறிக்கையில் நான் அலோபதி மருந்து கொடுத்ததாகப் பொய்யாக எழுதியிருக்கிறார்கள். அந்த மருந்தெல்லாம் என்னிடம் இல்லவே இல்லை. அவர்களாகவே சித்திரித்துவிட்டார்கள்.

மூன்று நாள்கள் கழித்து பெயிலில் வெளிவந்த நான்,  சிவகங்கை  மாவட்ட ஆட்சித்தலைவர் லதாவிடம் இதுதொடர்பாகப் புகார் செய்தேன். அவர் விசாரணை செய்தார். என்மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படும். என்மீது நடவடிக்கை எடுத்த சிவகங்கை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் விஜயன்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தந்தார். 

ஆனால், இன்னும் அந்த வழக்கு ரத்துசெய்யப்படவில்லை. ‘அங்கே போங்க, இங்கே போங்க...’ என்று அலைகழிக்கிறார்கள். அதுகூடப் பரவாயில்லை, போலி மருத்துவர்களுடன் போகிறபோக்கில் என்னையும் கைதுசெய்ததால், மக்கள் என்னிடம் சிகிச்சைக்கு வரவே தயங்குகிறார்கள். நோயாளிகளின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். இந்த நடவடிக்கை மூலமாக என் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.

இன்னும் என் ஊருக்கு அருகே உள்ள பல ஊர்களில் போலி மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இப்போதும் வைத்தியம் பார்த்து வருகிறார்கள். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னைக் கைதுசெய்து  அவமானப்படுத்திவிட்டார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு என்மீது போடப்பட்ட வழக்கை முடித்து வைக்க வேண்டும்" என்கிறார் பாண்டீஸ்வரி. 

சில நாள்களுக்கு முன்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், “படிக்காமல் மருத்துவம் பார்க்கும் பாரம்பர்ய மருத்துவர்களும் போலி மருத்துவர்கள்தான்” என்று கூறியிருந்தார். இதற்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில், இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “அந்தந்த மருத்துவர்கள் அவர்கள் படித்ததற்கு மட்டுமே மருத்துவம் செய்ய வேண்டும். அதற்காகத்தான் தனித்தனியாக மருத்துவப் படிப்புகள் இருக்கின்றன. பிற மருத்துவ முறைகள் தெரிந்திருந்தாலும்கூட வைத்தியம் பார்க்கக் கூடாது. சித்தா, ஹோமியோபதி  மருத்துவத்தை  ஒழிக்கவேண்டும் என்கிற எண்ணம் தமிழகச் சுகாதாரத்துறைக்கு சிறிதளவும் இல்லை. போலி மருத்துவர்களைக் கைதுசெய்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். 

பாரம்பர்ய மருத்துவர்கள் என்கிற பெயரில் இன்று பல போலிகள் உருவாகிவிட்டனர். எனவே, முறையாக படித்துப் பட்டம்  பெற்றவர்கள் மட்டும் மருத்துவம் பார்ப்பது நல்லது" என்கிறார்கள்.

சித்தா, ஹோமியோபதி மருத்துவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்பாக, தமிழ்நாடு ஆயுஷ் மருத்துவ சங்கத்தின் தலைவர் செந்தமிழ்ச் செல்வனிடம் பேசினோம். “கடந்த இரண்டு மாதமாக 15-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இப்படி சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முறையாக, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா (ஆயுஷ்) போன்ற மருத்துவப் செந்தமிழ்செல்வன்படிப்புகளைப்  பயின்று, முறையாக மெடிக்கல் கவுன்சிலில் பதிவுசெய்தவர்கள் ஆங்கில மருத்துவமும் செய்யலாம். இதற்கு சட்டப்படி முழு உரிமையும் தகுதியும் இருக்கிறது. ஆங்கில மருத்துவம் படிப்பவர்களுக்கும் சித்தா, ஹோமியோபதி படிப்பவர்களுக்கும் ஒரே மாதிரிதான் வகுப்புகள், பயிற்சிகள் நடைபெறும். 

மத்திய அரசின் சட்டங்களான, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டம் - 1970, பிரிவு - 17 , மத்திய ஹோமியோபதி கவுன்சில் சட்டம் - 1973 பிரிவு - 15  மற்றும்  மாநில அரசின் சட்டங்களான தமிழ்நாடு ஒருங்கிணைந்த மருத்துவச் சட்டம் - 1956, தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவச் சட்டம் - 1971, தமிழ்நாடு சித்த மருத்துவச் சட்டம் -1997 ஆகிய ஐந்து சட்டங்களிலும் `சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா, ஆயுர்வேதா போன்ற படிப்புகளை முறையாக ஐந்து வருடம் படித்தவர்கள் ஆங்கில மருத்துவமும் செய்யலாம்’ என்று இருக்கிறது.

பாரம்பர்ய மருத்துவத்துக்கு தற்போது ஆதரவு பெருகியுள்ளது. குறிப்பாக, டெங்குக் காய்ச்சல் பரவியபோது நிலவேம்புக் கஷாயம் பெருமளவில் உதவியது. இதனால் பன்னாட்டுக் கம்பெனிகளின் மருந்து வணிகம் பாதிக்கப்படுகிறது. அதனால்தான், சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பர்ய மருத்துவங்களை அழிக்கத் துடிக்கின்றனர்" என்கிறார் செந்தமிழ்ச் செல்வன்.

தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர், மருத்துவர் வேலாயுதத்திடம் பேசினோம். “கிராமங்களில் மஞ்சள்காமாலைக்கு, பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்க்கும் பாரம்பர்ய மருத்துவர்களை யாரும் கைதுசெய்வதில்லை. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சித்த மருத்துவ அலுவலர்களுக்கு அவர்களைப் பற்றித் தெரியும். ஆனால், பாரம்பர்ய மருத்துவர்கள் என்று பொய் சொல்லி தற்போது பலர் கிளம்பியுள்ளனர். அவர்களைக் கைதுசெய்வது தவறில்லை. வேலாயுதம்

1970-ம் ஆண்டுக்குப் பிறகு பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மருத்துவம் செய்ய வேண்டும் என்று மத்திய  அரசு 1970-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது. ஆனால், ‘பட்டம் வாங்காமலேயேகூட சிறப்பாக வைத்தியம் செய்யும் பாரம்பர்ய மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்கிறோம்’ என்று சொல்லி 1997-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பாக, ‘மத்திய அரசின் சட்டத்திலிருந்து பாரம்பர்ய மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்பதற்காக  ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அப்போதைய அரசு  அந்தச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகளைப் பெறவில்லை. அதனால் அந்தச் சட்டம் வலுவிழந்தது. அதனால் ‘இந்தச் சட்டம் செல்லாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் 2009-ம் ஆண்டு  தீர்ப்பளித்தது.

அதுபோல, ‘சித்தா படித்து பட்டம் வாங்கிய மருத்துவர்கள். அவசரத்துக்குப் பொது சிகிச்சை அளிக்கலாம்’ என்று சட்டத்தில் இருக்கிறது. அவசரத்துக்குப் பார்க்கலாம்... தவறில்லை. ஆனால், படித்துப் பட்டம் பெற்ற சில சித்தா, ஹோமியோபதி மருத்துவர்கள் முழு நேரமாக அலோபதி மருத்துவம் பார்க்கிறார்கள். யாரிடமாவது பயிற்சி பெற்று சர்ஜரி வரைக்கும் செல்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. அது கண்டிப்பாகத் தடுக்கப்பட வேண்டும். அப்படிச் செய்பவர்களைக் கைது செய்ய வேண்டும். போலிகள் களையப்பட வேண்டும்.

சித்த மருத்துவத்தில் மட்டுமல்ல... நவீன மருத்துவத்திலும் பல போலிகள் உள்ளனர். போலிகள் எந்த மருத்துவத்தில் இருந்தாலும், அது மக்களுக்கு ஆபத்துதான். ஆனால், சித்த மருத்துவர்களை மட்டும் உள்நோக்கத்துடன் கைதுசெய்வது கண்டனத்துக்குரியது. 
தமிழ்நாட்டில், எட்டு கோடி மக்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் இவர்களால் முழுமையான மருத்துவ வசதிகளைக் கொடுக்க முடிவதில்லை. மருத்துவமனைகளே இல்லாத கிராமங்கள் பல இருக்கின்றன. அங்கே வாழும் மக்கள் என்ன செய்வார்கள். அரசின் மீதும் தவறு இருக்கிறது.

தமிழ்நாட்டில் பட்டம் பெற்ற 4,000 சித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், 1,000-த்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன. எந்த நியமனமும் இல்லை. நவீன மருத்துவ லாபியில் சித்த மருத்துவத்துக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை. சித்த மருத்துவத்தை பலப்படுத்துவதற்குப் பதிலாக அதில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். 

சித்த மருத்துவத்தில் அரசு பாராமுகமாக இருக்கிறது. செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு சீர்திருத்தம் செய்கிறோம் என்பது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சியே’’ என்கிறார்  வேலாயுதம்.

சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். “மருத்துவத் துறையில் உள்ள போலிகள் நிச்சயமாகக் களையப்பட வேண்டும். படிக்காமல் மருத்துவம் செய்வது என்பது சில நேரங்களில் ஆபத்தில் முடிவடைந்துவிடும். ஆனால், அடிப்படை வசதிகள் கிடைக்காத இடங்களில் மக்கள் வேறு வழியில்லாமல் அவர்களிடம் செல்கின்றனர். மருத்துவர் கு.சிவராமன்

பாரம்பர்ய மருத்துவர்கள் என்று தற்போது பல போலிகளும் உலவுகின்றனர். அனைத்து நோய்களையும் முழுமையாகக் குணப்படுத்திவிடுவோம் என்று விளம்பரம் செய்து மக்களை ஈர்க்கிறார்கள். மேஜிக் ரெமிடி ஆக்ட்-ன் படி சில நோய்களை குணப்படுத்திவிடுவோம் என்று சொல்வது சட்டப்படி குற்றமாகும். பெரிய அளவில் விளம்பரம் செய்து தொலைக்காட்சிகளில் எல்லாம் வந்து சிகிச்சையளிக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் கைதுசெய்யப்படுவது இல்லை. 

இக்கட்டான நேரத்தில் பட்டம் பெற்ற சித்த மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று சட்டத்தில் இடமிருக்கிறது. அப்படி மருத்துவம் செய்தவர்களை எட்டாம், பத்தாம் வகுப்பு படித்து அலோபதி மருத்துவர்களிடம் உதவியாளர்களாக இருந்து, தற்போது முழு நேரமாக மருத்துவம் பார்ப்பவர்களுடன் சமமாக ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது தவறான போக்காகும்.

அந்தந்த மருத்துவர்கள், அந்தந்த மருத்துவ முறைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சில பிரச்னைகளுக்கு சித்தாவில் தீர்வு இல்லை. எனவே, ஒரு ஒருங்கிணைந்த மருத்துவ முறைதான் நமக்குத்  தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும். அதைவிட்டுவிட்டு மாற்று மருத்துவம் என்றாலே ஒதுக்கக் கூடாது. தேவையில்லாத ஆதாரமில்லாத குற்றச்சாட்டுளை சுமத்தக் கூடாது. அதேபோல் சித்த மருத்துவர்கள் எங்காவது தவறான சிகிச்சையளித்தால், தமிழ்நாடு சித்த மருத்துவக் கவுன்சில் இயக்குநரிடம்தான் முறையிட வேண்டும். அதைவிட்டுவிட்டு கைதுசெய்து சிறையில் அடைக்கக் கூடாது.

பாரம்பர்ய மருத்துவ முறைகளை அழிப்பதற்குப் பின்னால் உலகளாவிய மருந்து வணிகமும் உள்ளது. அதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் சிவராமன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்