வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (28/11/2017)

கடைசி தொடர்பு:11:29 (28/11/2017)

மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood

லகத்தில் வாழும் பூச்சியினங்களில் 2000 வகையான பூச்சிகள் உண்ணத் தகுந்தவை என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "என்னது பூச்சிகளை  உண்பதா ?" என்று முகம் சுழிக்க வேண்டாம். பெருகிவரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் சூழலியல் சீர்கேடுகள் இரண்டையும் சமன் செய்ய பூச்சிகளும் புழுக்களுமே நம் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் அரண்களாக மாறப் போகின்றன என்கின்றன சில ஆய்வுகள். 

மண்புழு

இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கிளினிக்கல் நியூட்ரிசியன் மற்றும் டயட்டிக் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் நாஸ்னி. பேராசிரியர் நாஸ்னி

"நாம் உண்ணும் உணவில் இருந்துதான் நாம் இயங்குவதற்கான சக்தி கிடைக்கிறது. இதில், புரதச் சத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு. புரதங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று மாமிச உணவுகளில் இருந்துக் கிடைக்கும் புரதம். இன்னொன்று, சைவ உணவில் இருந்து கிடைக்கும் புரதம். உதாரணமாக அரைக்கிலோ பருப்பில் இருக்கும் புரதம் இரண்டு முட்டைகளில் கிடைத்து விடும். 

'நேஷனல் ஜியோகிராபி' சேனலில் காடுகளில் பயணிக்கும்போது பூச்சிகள், புழுக்களை மனிதர்கள் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். உயிர் வாழ்வதற்கான சக்தியை பூச்சிகள் மனிதர்களுக்குத் தருகிறது. பெரிய அளவில் தானிய  விளைச்சல் இல்லாத ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இயற்கையில் இருந்து கிடைக்கும் புழுப் பூச்சிகள் ஒரு வகை உணவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கூட மழைக்காலத்தில் ஈசலைப் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.  அதில் மிகச்சிறந்த புரதம் கிடைக்கிறது.

ஈசல் உணவு

இதுமாதிரியான சிறு பூச்சிகளில் அமினோ ஆசிட், வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. இதய நோய் வராமல் தடுக்க N 3, N 6, பேட்டி ஆசிட்  போன்ற சத்துக்களும் இவற்றில் இருந்து கிடைக்கின்றன.  மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பூச்சிகள் மாற்று உணவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பூச்சிகள் இயற்கையில் உருவாகிப் பல்கிப் பெருகும் என்பதால் பெரிய செலவுகள் இல்லாமல் இவற்றை உற்பத்தி செய்ய முடியும்.

கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பூச்சிகள் அவர்களின் பாரம்பர்ய உணவின் ஒரு பகுதியாக உள்ளது. ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் மண்புழுக்களை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இதற்கென பண்ணை வைத்து மண்புழுக்களை உற்பத்தி செய்கிறார்கள். 

பூச்சி உணவுகள்

ஆனால்  இந்தியா இன்னும் அதற்குத் தயாராகவில்லை. மக்கள்தொகை அதிகரிப்பும் அவர்களுக்கான உணவுத்தேவையும் சுற்றுச்சூழல் மேல் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. தண்ணீர் போன்ற இயற்கை வளங்களின் பற்றாக்குறையும் சவாலாக மாறி வருகிறது. 2050-ம் ஆண்டில் உணவுத் தேவை இரட்டிப்பாக வாய்ப்புள்ளது. 

பூச்சி, புழுக்களை நேரடியாக உணவில் சேர்த்துக்கொள்வதில் சங்கடம் இருக்கலாம். ஆனால் அவற்றைப் பதப்படுத்தியோ வேறு விதங்களிலோ கண்ணுக்குத் தெரியாத விதத்தில் வெளிநாடுகளில் பயன்படுத்துகிறார்கள்.

வெளிநாட்டு பூச்சி உணவுகள்

வளரும் நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு இன்றளவும் தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக, ஏராளமான  குழந்தைகள் இறக்கின்றனர். இதற்குப் பூச்சி உணவுகள் மாற்றாக அமையும். உலகளவில், இரண்டு பில்லியன் மக்கள் 1900 வகையான பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றனர். 

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பூச்சியினங்களை தவிர்க்க முடியாது. எதிர்காலம் அதை நோக்கித்தான் செல்லும். நாமும் நம்மையறியாமல் அதற்கு தயாராகிவிடுவோம்" என்கிறார் நாஸ்னி.

இன்னும் சிலப்பல ஆண்டுகளில் நம் தெருக்களிலும் மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65 எல்லாம் கிடைக்கலாம். சீக்கிரமே தயாராவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்