வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (28/11/2017)

கடைசி தொடர்பு:18:49 (28/11/2017)

சென்னை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஒரு நாள்! பகுதி-1 #CelebrateGovtHospital

`சியாவிலேயே மிகப் பெரிய அரசுப் பொது மருத்துவமனை’... `சிறந்த சேவைக்காக தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றது’... `3,500 படுக்கைகள், 800 மருத்துவர்கள், 890 நர்ஸ்கள், 750 உதவியாளர்களோடு ஒரு நாளைக்கு 13,000 நோயாளிகள் பயன் பெறும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருப்பது’... சென்னை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜின் மேற்பார்வையில் செயல்படும் இந்த மருத்துவமனைக்கு மழை இல்லாத ஒரு நாளில் ஒரு விசிட் அடித்தோம்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத சென்னை மாநகரிலேயே மிகவும் பரபரப்பான இடம் சென்ட்ரல் ரயில் நிலயம். அதற்கு எதிரே அமைந்திருக்கிறது இந்த மருத்துவமனை. சாலையின் இருபுறமும் பேருந்திலிருந்து இறங்குபவர்களில் பாதிப் பேர் மருத்துவமனைக்கும், மீதிப் பேர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குமாக விரைந்துகொண்டிருந்தார்கள். 

உழைத்துக் களைத்த சோர்வான முகங்களோடு காலை ஏழு மணிக்கு முன்னதாகவே கையில் காயங்களோடும், காலில் கட்டுக்களோடும், நடக்க முடியாமல், நிற்க முடியாமல், உட்கார முடியாமல்...  ஏராளமான இன்னல்களோடு ஓ.பி சீட்டுக் கொடுக்கும் இடத்தில் குவிந்திருக்கிறது மக்கள் கூட்டம். 

ஓ.பி சீட்டுக் கொடுக்கும் இடத்தில் மக்களுக்கு உதவுவதற்காகக் காத்திருக்கிறார்கள் ஓய்வுபெற்ற மருத்துவமனை ஊழியர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் பொறுமையாக வழி சொல்லி அனுப்பிவைக்கிறார்கள் இவர்கள். 

சிகிச்சை பெறும் மக்கள்

இங்கிருக்கும் சிகிச்சைக் கட்டடங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிகிச்சைக்காகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை பிரமாண்டமான இரண்டு கட்டடங்கள். அவற்றில் `டவர்-1, பொது சிகிச்சைக்காகவும் (மருந்து, சிகிச்சைகள், பரிசோதனைகள்...), `டவர் - 2’ அறுவைச்சிகிச்சைக்காவும் செயல்படுகிறது. டவர் 1-ல் மருத்துவரைச் சந்திக்கும்போது, `அறுவைசிகிச்சை செய்தாக வேண்டும்’ என்று சொல்லிவிட்டால், அந்த நோயாளி `டவர் -2’-வுக்குச் சென்று உள்நோயாளியாகச் சேர்ந்துகொள்ளலாம்.

பொது மருத்துவம், சிறுநீரக நோய்கள் , இதய நோய்கள், மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் , காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய், நாளமில்லாச் சுரப்பிகள் சார்ந்த கோளாறுள், எலும்பு நோய்கள், ரத்தநாளங்கள், நரம்பு நோய்கள், இரைப்பை மற்றும் குடல் நோய்கள், முதியவர்களுக்கான சிகிச்சைகள்,  கல்லீரல், சர்க்கரைநோய்,  நெஞ்சக நோய்கள்... என அனைத்துப் பிரச்னைகளுக்கும் மருத்துவச் சிகிச்சைக்காகவும், அறுவைசிகிச்சைக்காகவும் தனித்தனிப் பிரிவுகள் இருக்கின்றன. மேலும், ரத்த  நோய்கள், பாலியல் தொடர்பான பிரச்னைகள், சரும நோய்கள், மனநலப் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கத் தனிப் பிரிவுகள் உள்ளன. 

அவசர நிலை உதவியாளர்கள்

கதிரியக்கச் சிகிச்சை, நுண்வழி அறுவைசிகிச்சை, மயக்கவியல் துறை... என  இங்கே இல்லாத பிரிவுகளே இல்லை என்று சொல்லுமளவுக்கு அத்தனை வசதிகளையும், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களையும் கொண்டிருக்கிறது ராஜீவ் காந்தி மருத்துவமனை.

இக்கட்டான நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வருபவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்க, `ஜீரோ டிலே வார்டு’ (Zero Delay ward) என்ற சிறப்புப் பிரிவும் இருக்கிறது. இக்கட்டான நிலையில் ஆம்புலன்ஸில் வருபவர்களை உடனடியாக அந்தந்த வார்டுகளுக்குத் தூக்கிச் செல்வதற்கு ஷிஃப்டுக்கு மூன்று பேர் வீதம் ஒன்பது அவசர சிகிச்சை உதவியாளர்கள் (Green brihade boys) இருக்கிறார்கள். மருத்துவமனையின் முக்கியமான சந்திப்புகளில் எல்லாம் 'மே ஐ ஹெல்ப் யூ'(May I help you) என்ற பதாகையுடன் மக்களுக்கு வழிகாட்ட, பதினெட்டு உதவியாளர்கள் (Orange brihade) இருக்கிறார்கள். 

உதவியாளர்கள்

தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே, மெடிக்கல் (Medical), சர்ஜிக்கல் (Surgical), ட்ராமா (Trauma) என மூன்று பிரிவுகள் உள்ளன. நெஞ்சடைப்பு, மூச்சுத்திணறல், வலிப்பு போன்ற பிரச்னை என்றால், ஐ.எம்.சி.யூவிலும் (IMCU), உடனடியாக அறுவைசிகிச்சை செய்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றால் ஐ.எஸ்.சி.யூவிலும் (ISCU), ஏதேனும் விபத்து ஏற்பட்டு காயங்களுடன் வருபவர்கள் ஐ.டி.சி.யூவிலும் (ITCU) அனுமதிக்கப்படுகிறார்கள். பாம்பு, பூச்சி போன்ற விஷக்கடியால் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களை நச்சுயியல் (Toxicology) பிரிவிலும் அனுமதிக்கிறார்கள். அனைத்துப் பிரிவுகளிலும் செயற்கைச் சுவாசக் கருவிகள் (Ventilators) போதுமான அளவில் உள்ளன.

பாம்பு கடித்து தூக்கி வரப்படுவர்களின் உறவினர்கள் சிலர் கையோடு கடித்த பாம்பையும் எடுத்து வருகிறார்கள். அந்தப் பாம்புகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இந்தப் பாம்புகளில் உள்ள நச்சுத்தன்மையைப் பற்றி முதுகலை பயிலும் மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். அதற்கேற்றவாறு சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். 

பராமரிக்கப்படும் பாம்பு

"கடல் பாம்பு (Sea snake)  என்று ஒருவகைப் பாம்பு இருக்கிறது. இது மிக மிக அபூர்வமான ஒன்று. விஷத்தைத் தண்ணீர் முழுக்கக் கக்கிவிடும். இது கடித்தால் பிழைப்பது மிகவும் கடினம். போன மாதம் ஒருவரைக் கடித்துவிட்டது. அவர் கொண்டு வந்த கடல் பாம்புதான் இது’’ என்று நமக்குக் காண்பித்தார் ஒரு நர்ஸ்.

அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் இங்கே சிகிச்சையளிக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில சிகிச்சைகளைப் பற்றிப் பார்ப்போம்.

முதலில் ரத்தநாள அறுவையியல் சிகிச்சை (Vasculer surgery) துறைக்குள் நுழைந்தோம். நம் உடல் முழுவதும் ஒவ்வோர் உறுப்புக்கும் நல்ல ரத்தத்தைக் கொண்டு சேர்க்கவும், கெட்ட ரத்தத்தை மீண்டும் இதயத்துக்குக் கொண்டு செல்வதற்கும் ரத்த நாளங்கள் மிக மிக அவசியமானவை. நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்டவர்கள் வெளிப்புற நோயாளிகளாக இங்கே வந்து சிகிச்சை பெறுகிறார்கள். நாம் சென்ற தினத்தில், கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்தப் பிரிவில் மட்டும் அறுபதுக்கும் மேற்பட்ட  படுக்கைகள் உள்ளன. 

ரத்தநாள அறுவைச் சிகிச்சைத் துறை

மருத்துவர் ஶ்ரீதர்"வருடத்துக்கு 2,000-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகள் இங்கே நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்துவிட்டு பலனில்லாமல் இங்கே வந்து சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம். போன வாரம்கூட சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 65 வயதான பீட்டர் ஃபிரான்சிஸ் என்பவர் இக்கட்டான சூழலில் இங்கே அழைத்துவரப்பட்டார். அவருக்கு வயிற்றில் இருக்கும் முக்கிய ரத்தநாளம் வெடித்து ரத்தம் கசிந்திருந்தது. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆறு லட்ச ரூபாய் செலவழித்தும், அவரைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்களால் கைவிரிக்கப்பட்டவர். நாங்கள் அறுவைசிகிச்சை செய்து, அவரைக் காப்பாற்றியிருக்கிறோம். இப்போது நன்றாக இருக்கிறார். இன்று டிஸ்சார்ஜ் ஆகப் போகிறார்’’ என்கிறார் இந்தத் துறையின் பேராசிரியரும், மூத்த மருத்துவருமான ஶ்ரீதர்.

பீட்டர் ஃபிரான்சிஸிடம் நம்மை அழைத்துச் சென்றார் மருத்துவர் ஶ்ரீதர் ``நீங்க இங்கே எப்படிப்பட்ட நிலையில் வந்தீங்க. உங்களுக்கு எவ்வளவு நேரத்துல ஆபரேஷன் முடிஞ்சுது?’’ என்று கேட்டோம். ``கரெட்டான டைம், கொஞ்சம் தாமதம் ஆகியிருந்தாலும் நான் காலியாகிருப்பேன்’’ என்கிறார் பீட்டர் ஃபிரான்சிஸ். 

அதிகமாகப் புகைபிடித்ததால் கால்கள் கறுத்துப் போன பலர் சிகிச்சை பெற்று வருவதைக் காண முடிந்தது. கடைசி கட்டத்தில் வந்ததால், கால்களை அகற்றிய நிலையில் பரிதாபமாகக் காட்சியளித்தார் முதியவர் ஒருவர்.

பீட்டர்   ஃபிரான்சிஸ்

"தெரிஞ்சுருந்தா முன்னாடியே இங்கே வந்திருப்பேன். ஏதோ வேக்காடுனு சும்மா இருந்துட்டேன். இங்கே வந்ததுக்கு அப்புறம்தான் விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன்" என்கிறார் கரகரத்த குரலில்.

அடுத்ததாக ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை (Plastic surgery)  துறைக்குச் சென்றோம். திருநங்கை ஒருவருக்கு ஆலோசனைகளை  வழங்கிவிட்டு நம்மிடம் பேசத் தொடங்கினார் மருத்துவர் ஜெயமோகன்.

சிகிச்சை

"தென்னிந்தியாவிலேயே, முதன்முதலில் 1963-ம் ஆண்டு இங்குதான் பிளாஸ்டிக் சர்ஜரிக்கென்று தனித்துறை தொடங்கப்பட்டது.மருத்துவர் ஜெயமோகன் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கும் மேலாக இந்தத் துறை செயல்பட்டுவருகிறது. 

அனைத்து வகையாக பிளாஸ்டிக் சர்ஜரியும் இங்கே செய்யப்படுகின்றன. குறிப்பாக, முகத்தில் ஏற்படக்கூடிய எலும்பு முறிவு (Face fracture), மைக்ரோ வாஸ்குலர் சர்ஜரி, உதட்டுப் பிளவு, அன்னப்பிளவு, காது வளர்ச்சி இல்லாதவர்களுக்கு வேறோர் இடத்திலிருந்து எலும்பை எடுத்து, காதை உருவாக்குதல்,  இவை மட்டுமில்லாமல், திருநங்கைகளுக்கான உறுப்பு மாற்று சிகிச்சையும் இங்கே இலவசமாகச் செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 50-ல் இருந்து 60 நோயாளிகள் புறநோயாளிகளாகவும், 50-ல் இருந்து 60 பேர் அறுவைசிகிச்சைக்காக உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்" என்கிறார் மருத்துவர் ஜெயமோகன்.

(இதன் தொடர்ச்சி நாளை இடம்பெறும்)

 


டிரெண்டிங் @ விகடன்