Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`இடஒதுக்கீட்டுக்கு எதிரானது அரசு மருத்துவர்கள் நியமனம்!’- கொந்தளிக்கும் மருத்துவர்கள், மாணவர்கள்

"கிராமங்களில், மலைப் பகுதிகளில் பல வருடங்கள் கஷ்டப்பட்டு வேலைசெய்த எங்களைப் புறக்கணித்துவிட்டு, டெம்ப்ரவரி அசிஸ்டென்ட் சர்ஜன்களாகப் பணியமர்த்தப்பட்டவர்களை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகப் பணியமர்த்துவது எங்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம். இதற்குப் பின்னால் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்தப் பணி நியமனங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்." - கொதிக்கிறார்கள், தமிழ்நாடு முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பினர்.

மருத்துவர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புப் படித்துவரும் மாணவர்கள், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், `தமிழ்நாடு அரசு உடனடியாக இதற்கு பதிலளிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் உதவி சர்ஜன்கள், முதுநிலை படிக்க விரும்பினால் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, நுழைவுத் தேர்வு எழுதி முதுநிலை பட்டம் படிக்கலாம். அரசு வேலையில் இல்லாதவர்கள், இளநிலை படித்த உடனே நுழைவுத் தேர்வு எழுதி முதுநிலை பட்டம் படித்துக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், உதவி சர்ஜன்களாக வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் வேலைசெய்யும் பகுதிகளைப் பொறுத்து மதிப்பெண் வழங்கப்படும். உதாரணமாக மலைப்பகுதிகள், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் பணிபுரிந்தால் மூன்று மதிப்பெண்ணும், நகரத்தை ஒட்டிய பகுதிகள் என்றால் இரண்டு மதிப்பெண்ணும் வழங்கப்படும். இந்த மதிப்பெண் முதுநிலை நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் சேர்த்துக்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் முதுநிலை படிப்புப் படிக்க இடம் கிடைக்கும்.

முதுநிலை பட்டம் பெற்றவுடன் அவர்கள் நகர்ப் பகுதிகள், மாநகரங்களில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுவார்கள். அப்படித் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய இடங்களைத்தான் நேர்காணல் மூலமாக, முறைகேடாக நிரப்பிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர் முதுகலை மருத்துவப் படிப்புப் படிக்கும் மாணவர்கள்.

இது தொடர்பாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பினரிடம் பேசினோம்.

``2018 -ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு எங்களின் முதுநிலை பட்டப் படிப்பு முடிகிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் எங்களுக்குப் பணி நியமனத்துக்கான கவுன்சலிங் நடக்கும். அப்போது நகர்ப்பகுதிகளில், மாநகரங்களில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றைத் தேர்வுசெய்து பணிக்குச் சேர்வோம். பல வருடங்கள் கிராமங்களில் கஷ்டப்பட்டு வேலை செய்ததற்குப் பலனாக அது இருக்கும். ஆனால், இந்த வருடம், டெங்குக் காய்ச்சலைத் தடுப்பதற்காக தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி மருத்துவ சர்ஜன்களை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமித்துவிட்டார்கள். இதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன.

நவம்பர் 17-ம் தேதி நடைபெற்ற பணிமாற்ற கவுன்சலிங்கின்போது, பல்வேறு காலியிடங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்ததாக நவம்பர் 18-ம் தேதி நடந்த நேர்காணலில் (Walk-in) அந்த இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதாவது, மொத்தம் உள்ள 550 காலியிடங்களில் 455 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன.

கோரிக்கைகள் அடங்கிய பதாகை

அது மட்டுமில்லை... இடஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படவில்லை. இதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன.

டெங்குக் காய்ச்சலைத் தடுக்க வேண்டும் என்றால், அந்தப் பணிக்கு எம்.டி முடித்த பொது மருத்துவர்களைத்தான் நியமித்திருக்க வேண்டும். ஆனால், ஆர்த்தோ, சர்ஜரி, அனாட்டமி, பிசியாலஜி, ரேடியாலஜி படித்தவர்களெல்லாம் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டெங்குவின் பாதிப்பு அதிகமாக இருந்தபோது விட்டுவிட்டு, இப்போது மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவதன் நோக்கம் என்ன? அதுவும், நேரடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமிப்பதில்தான் சந்தேகம் எழுகிறது.

டெங்குக் காய்ச்சலின் பாதிப்புகள் அதிகமாக இருந்தபோது பல்வேறு களப்பணிகள் செய்த எங்களைவிட, இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எந்தவிதத்தில் தகுதியானவர்கள் என்பது தெரியவில்லை.

எங்களுக்கு வருடந்தோறும் பிப்ரவரி மாதத்தில் கவுன்சலிங் நடக்கும். அதாவது, நாங்கள் இறுதி ஆண்டு படிக்கும்போதே அதில் கலந்துகொள்வோம். ஆனால், இந்த ஆண்டு அதற்கு முன்னதாகவே நேர்காணல் நடத்தி, எங்களுக்குக் கிடைக்கவேண்டிய இடங்களைப் பறித்துவிட்டார்கள். எனவே, முறைகேடாக, சட்டத்துக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தப் பணி நியமனத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்" என்கிறார்கள் முதுநிலை பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பினர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் பேசினோம்.

``நேரடியாக யாரும் உதவிப் பேராசிரியர் ஆக முடியாது. பல வருடங்கள் பார்த்த வேலை அனுபவத்தால், பதவி உயர்வால்தான் ஆக முடியும். பத்திரிகைகளில் போலியாகத் தகவல்கள் பரப்பப்படுகின்றன.

நேர்காணல் (Walk-in) நடத்தித் தேர்வுசெய்வது என்பது கடந்த நான்கு வருடங்களாகப் பின்பற்றப்படும் நடைமுறை.

நீதிபதிகள் மருத்துவமனை காலிப் பணியிடங்களைத்தான் நிரப்பச் சொன்னார்கள். `டெங்குக் காய்ச்சல் சிகிச்சைக்காக மட்டும் நிரப்பச் சொன்னார்கள்’ என்பது தவறான கருத்து.

தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் (Speciality courses) இடங்கள் பல காலியாக உள்ளன. அதற்காகவே நேர்காணல் நடத்தப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் அனைவருமே மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணி நியமிக்கப்படவில்லை. நிரப்பப்பட்ட 455 இடங்களில், 150 பேர்தான் மருத்துவக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் தாலுகா மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே டி.எம்.எஸ்-ல் உள்ளவர்களுக்கும், அதாவது ஏற்கெனவே வேலை செய்துகொண்டே முதுநிலை முடித்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்படி 38 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரே ஓர் இடம்தான் டிரான்ஸ்ஃபர் கவுன்சலிங் அன்று காட்டப்படவில்லை. அது திட்டமிட்டு மறைக்கப்படவில்லை. அது புதிதாக உருவாக்கப்பட்ட துறை (Specialized course) என்பதால்தான் அப்படி நடந்திருக்கிறது. ஆனால், இனி வரும் காலங்களில் இது தவிர்க்கப்படும்.

இதுவரை யாரும் போக விரும்பாத மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகளுக்குக்கூட இப்போது மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது போராடிக்கொண்டிருப்பவர்கள் படித்து முடிக்க இன்னும் ஆறு மாதங்கள் ஆகும். அடுத்த வருடம் நடக்கும் கவுன்சலிங்கில் அவர்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம். ஆனால், அவர்கள் இந்த வருடமே சேர வேண்டும் என்று போராடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் வேலை செய்துகோண்டே தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் முதுநிலை படித்துக்கொள்ளலாம் என்ற முறை இருக்கிறது. இவ்வளவு சலுகைகள் இருந்தும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.மருத்துவர் ரவீந்திரநாத்

இதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் வழக்கம் இல்லை" என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இது தொடர்பாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்.

"முதலில், முறைகேடாக நடைபெற்ற இந்தப் பணி நியமனத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். இதனால் முதுநிலை மருத்துவம் பயின்றுவரும் அரசு மருத்துவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் பணியாற்றும் டி.பி.எச் (Directorate of Public Health) மற்றும் டி.எம்.எஸ் (Directorate of Medical & Rural Health Services) பிரிவிலிருந்து டி.எம்.இ (Directorate of Medical Education) பிரிவுக்கு வர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மீண்டும், அழைப்புவிடுத்து மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (Medical Services Recruitment Board) மூலமாக எழுத்துத் தேர்வு வைத்துத்தான் தேர்வுசெய்ய வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வுசெய்ய வேண்டும். அதிலும், முதுநிலை படித்துக்கொண்டே வேலைசெய்யும் மருத்துவர்களுக்கு முதலில் கவுன்சலிங் நடத்திவிட வேண்டும். மீதி உள்ள இடங்களுக்குப் பிறகுதான் கவுன்சலிங் நடத்தவேண்டும்.

கண்ணைக் கட்டிப் போராட்டம்

ஏகப்பட்ட காலிப் பணியிடங்களையும், பணி மாற்றத்தால் மீதமிருக்கும் இடங்களையும் மறைத்துவிட்டு இந்தப் பணி நியமனம் நடந்துள்ளது. இதற்குப் பின்னால் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்தலுக்கு நிதி சேர்க்கும் ஒரு செயலாகவும், இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் இந்த நியமனத்தைப் பார்க்க முடிகிறது" என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement