‘பதற்றம் என்பதும் ஒரு மனநோய்தான்’ ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் கவனம்! #AnxietyDisorder | Anxiety Disorder Leads to Depression

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (04/12/2017)

கடைசி தொடர்பு:11:12 (04/12/2017)

‘பதற்றம் என்பதும் ஒரு மனநோய்தான்’ ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் கவனம்! #AnxietyDisorder

'பதறாத காரியம் சிதறாது' என்றொரு பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். நாம் பதற்றத்துடன் செயல்பட்டால், அந்தக் காரியம் கைகூடாது என்பதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது இந்தப் பழமொழி. பதற்றம் என்பது அனைவரிடமும் சர்வசாதாரணமாக ஏற்படக்கூடிய ஒன்று. சூழ்நிலையோ, சந்தர்ப்பமோதான் அதற்குக் காரணம்... இதற்கெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்று மனதுக்குள் ஓர் எண்ணத்தைக் கட்டியமைத்து வைத்திருந்தால்... அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம்... பதற்றம் என்பதும் கவலைக்குரிய விஷயமே. இதை, `மனோரீதியான பிரச்னை’ என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். தேவையற்ற அதீத பதற்றமானது, ‘ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்’ (Anxiety Disorder) என்கிற மனக்கோளாறு நிலைக்கு நம்மை இழுத்துச் சென்றுவிடும். இதுவே மனஅழுத்தத்துக்கும் காரணமாக அமைகிறது. இது, இன்றைய வாழ்க்கைச் சூழலில் எளிதாக நம்மை பாதிக்கக்கூடியது.

பயம், பதற்றம்

நம்மைச் சூழ்ந்திருக்கும் வட்டாரங்களில் இவ்விதமான கோளாறுகளுடன் இருப்பவர்கள் இருக்கலாம்... ஏன் நாமேகூட பாதிக்கப்பட்டிருக்கலாம். இதுபோன்ற மனநோய்க் கோளாறுகளைக் கண்டறிவது பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் அசோகன் இங்கே விளக்குகிறார்...

“சாதாரணமாக நம்மில் பலருக்கும் இருட்டான இடங்களைப் பார்க்கும்போதும், தனியாக நடக்கும்போதும் ஏதோ ஒன்று நம்மைப் மனநல மருத்துவர் அசோகன்பின்தொடர்வது போன்றும், நம்முன் யாராவது நடந்து வருவதைக் கண்டால், நம்மிடம் தவறாக நடந்துகொள்ளத்தான் வருகிறார்கள் என்பதுபோலவும் உள்ளுக்குள் பதற்றம் ஏற்படும். இது தற்காலிகமான ஒன்று. ஆனால், ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் என்பது பதற்றமடைய அவசியமில்லாத இடத்தில், நமக்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டது போன்று நம்பி, அதை செயல்வழியாகக் காட்டுவது. கடந்தகாலத்தில் ஏதோ ஒரு சம்பவத்தால் ஆழமாக பாதிக்கப்பட்டு, அதேபோன்ற சம்பவமோ, சூழ்நிலையோ நிகழ்காலத்திலும் ஏற்படும்போது ஒருவிதமான பதற்றம், பயம் உருவாகிறது. இது உண்மையில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இது எளிதில் நம்மை மனஅழுத்தத்துக்குள் தள்ளிவிடும்’’ என்ற டாக்டரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“இந்த ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் யாரையெல்லாம் பாதிக்கும்?’’

“இது மனநிலையைச் சார்ந்தது. ஒரேநேரத்தில் பல பிரச்னைகளுக்குத் தள்ளப்படுவதால், அதனைப் பொறுமையாகச் சமாளிக்க முடியாமல், மனம் பதற்றத்துடனேயே இருக்கும். தேவையற்ற சிந்தனைகளும் பயங்களும் உருவாகும். மூளையைப் பயன்படுத்தவேண்டிய இடத்தில் உணர்ச்சிகளில் சிக்கிக்கொள்வதால் பதற்றமே மிஞ்சும். இது குழந்தைகளைக்கூட பாதிக்கும். அதிகமான பாதுகாப்போ, அன்போ காட்டப்படும் குழந்தைகள், தனித்துச் செயல்படவேண்டிய இடத்தில் பதற்றம் ஏற்பட்டு, அந்தச் செயலை சரிவர செய்ய முடியாமல் போகும். இதனால், இனி நம்மால் தனியாக எதையும் செய்ய முடியாது என்கிற எண்ணம் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். இதுவே, வாழ்க்கை முழுவதும் பிறரைச் சார்ந்தே வாழும் மனோபாவத்தை அவர்களிடம் உருவாக்கிவிடும். பெற்றோர் ஆதரவை இழந்த குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன.’’

“ ‘ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்’ காரணமாக ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?’’

மனம் மற்றும் உடல் இரண்டுக்கும் பாதிப்புகள் உள்ளன. எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பாக, தெளிவாகச் சிந்திக்க முடியாமல் மனதளவில் சஞ்சலப்பட நேரிடும். இது, அவர்களுடைய செயல்திறனில் தொய்வை ஏற்படுத்தும். மந்தமான நிலையிலேயே இருப்பார்கள். உடல்ரீதியாகப் பார்த்தால்... வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிறுநீர், மலம் கழித்துவிடுவோமோ என்கிற பயம் எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும். சாதாரணமாக நடக்கும்போது கீழே விழுந்துவிடுவோமோ என்கிற பயம் ஏற்படும். இதனால் அவர்கள் மிக வித்தியாசமாக நடந்துகொள்வார்கள். இவர்களுக்கு உடல் உறவின்போது விந்து விரைவாக வெளியேறும். தற்காலிகமாக ரத்தஅழுத்தம் அதிகரிக்கும். அதிகமாக மதுபானங்களை அருந்துவார்கள். தைராய்டு இருப்பவர்களுக்கும் இந்த ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் பாதிப்பு இருக்கும்.’’

மனநோய் இன்ஃப்போகிராப்


“இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் ஆண்களா, பெண்களா?’’

“இதில் ஆண், பெண் எல்லோருமேதான் பாதிக்கப்படுகிறார்கள். சந்தர்ப்பங்களும், வாழ்க்கைச் சூழல்களுமே மனரீதியான பிரச்னைகளுக்குக் காரணிகளாக இருக்கின்றன. மாதவிடாய் காலத்தில் வலிநிவாரணி மாத்திரைகளைத் தாறுமாறாக உட்கொள்ளும் பெண்களுக்கும், பல்வேறு காரணங்களுக்காக ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கும் இதுபோன்ற பதற்றநிலை ஏற்படலாம். ஒரு பிரச்னை ஏற்படும்போது, அதனால் மனநிலை பாதிக்கப்படுவதும், இவ்வளவுதானா என்று சிரித்தபடியே அந்தப் பிரச்னையைக் கடந்து செல்வதும் அவர் வாழ்ந்து, வளர்ந்த சூழ்நிலையைப் பொறுத்தது.’’

“ ‘மனஅழுத்தம், ஆங்சைட்டி டிஸ்ஆர்டர் இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?’’

“சிறிய வித்தியாசம் மட்டுமே இருக்கிறது. பதற்றநிலையில் பயமும் இணைந்துகொள்வதை `ஃபோபியா’ எனலாம். இதுவே ஒருவருக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும். ‘ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்’ ஆரம்பத்திலேயே கவனிக்கப்படவில்லை என்றால், அது மனஅழுத்தத்துக்கு வழிவகுக்கும். உச்சகட்ட பயத்தை ‘பானிக் ஃபோபியா’ (Panic Phobia), அதாவது மனபீதி எனலாம். இத்தகைய பாதிப்பிலிருக்கும் ஒருவரின் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் இருக்கும். உடன் இருப்பவரையும் பயமுறுத்தக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.’’ 

மனஅழுத்தம்

“பொதுவாக எந்தவிதமான மனபாதிப்புகளும் வராமல் தடுக்க எப்படி எச்சரிக்கையுடன் இருப்பது?’’

“தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்றின் வரியைத்தான் இங்கே சொல்ல வேண்டும். ‘கனிந்த மனம் வீழ்வதில்லை’ என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய அந்த வரிக்கு ஏற்ப, நம் மனதை நாம் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும், அமைதியாகவும், பதறாமலும் உணர்ச்சிகளை முன்னிலைப்படுத்தாமல் பக்குவமாக தங்களின் மூளையைப் பயன்படுத்தி சிந்திக்க வேண்டும். இதன் மூலமாக பிரச்னைகளுக்கான தீர்வைப் பெறுவதோடு, மனஅழுத்ததையும் தவிர்க்கலாம். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வது; உறவுகளுக்கு இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது; முடிந்தவரை தனிமையைத் தவிர்ப்பது என்று பழக்கிக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறும் வகையில் 8 மணி நேர உறக்கம், வஞ்சம், வெறுப்பற்ற குணம் என்று மனதை அமைதியாக வைத்துக்கொள்வதாலேயே இதைத் தவிர்க்க முடியும்.’’

“எந்த மாதிரியான சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது?’’

“ஆங்சைட்டி டிஸ்ஆர்டரால் பாதிக்கப்படும்போது, முதலில் அது எந்த நிலையில் இருக்கிறது என்று கண்டறிய வேண்டும். தொடக்க நிலையில் இருந்தால் யோகா, உடல்பயிற்சி போன்ற மனதைத் தெளிவுபடுத்தும் வழிமுறைகளைக் கையாளலாம். இதுவே தீவிர நிலையில் இருந்தால், ஹிப்னாட்டிஸம் போன்ற முறைகளைக் கையாளலாம். தேவைப்பட்டால், மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளவேண்டி வரும். எல்லாவற்றுக்கும் மேலாக... மனதைச் சரியான வழியில் கட்டுப்படுத்தி, பிரச்னைகளைத் தவிர்ப்பதே எப்போதும் சிறந்த ஒரே வழி.’’


டிரெண்டிங் @ விகடன்