Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`புற்றுநோயாளிகளை `நோயாளிகள்’ என அழைக்காதீர்கள்!’ - ஒரு வேண்டுகோள் #CancerFighter #GiveShortFilm

'புற்றுநோய்' என்றாலே மரணம் என்ற நிலைதான் ஒரு காலத்தில் இருந்தது. இன்றைக்கு மருத்துவத் துறையில் ஏற்பட்டிருக்கும் அபார வளர்ச்சி, மருத்துவத் தொழில்நுட்பம் புற்றுநோய்க்குக்கூட பயப்படத் தேவையில்லை என்கிற தைரியத்தையும் தெம்பையும் நமக்குத் தந்திருக்கிறது. புற்றுநோயும் குணப்படுத்தக்கூடிய நோய்தான் என்றாகிவிட்டது. ஆனாலும், புற்றுநோய் வந்துவிட்டால், `இனி நம் வாழ்க்கையே அவ்வளவுதான்’ என்று வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறார்கள் சிலர். குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டால், அந்தக் குடும்பமே களையிழந்து, எல்லாவற்றையும் பறிகொடுத்த நிலைக்கு ஆளாகிவிடுவதைப் பார்க்கிறோம். 

புற்றுநோய் தவிர்ப்போம்

"புற்றுநோய் பற்றியும் அதற்கான சிகிச்சைகள் குறித்தும் போதிய விழிப்புஉணர்வு இல்லாததே இந்த மனநிலைக்குக் காரணம். புற்றுநோய் ஏற்பட்டால், அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, அதை எதிர்த்து, போராடி வெல்ல வேண்டும் என்ற மன உறுதியை நமக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். 

அடையாறு புற்றுநோய் மையத்தில் வெளியிடப்பட்ட குறும்படம்

இந்தக் கருத்தை வலியுறுத்தும்விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது ஒரு குறும்படம். `கிவ்’ - ஏ மியூசிக்கல் டேல்"  (Give - A musical tale) என்பது படத்தின் பெயர். படத்தில் வசனங்கள் இல்லை... பின்னணி இசை, நடிகர்களின் உடல் அசைவுகளால் மட்டுமே படத்தின் கதை சொல்லப்படுகிறது. இந்தக் குறும்படத்தை சென்னை, அடையாறு புற்றுநோய் மையத்தில் அதன் தலைவர் டாக்டர் சாந்தா வெளியிட்டார். 
மிக எளிமையான கதை. முதல் காட்சியே கழுகுப்பார்வையில் தொடங்குகிறது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை நகரம். கேமரா கீழிறக்கப்பட ஒரு சாலை... அதனருகே பிரமாண்டமான ஓர் அடுக்குமாடி குடியிருப்பு. அதனுள்ளே ஒரு அப்பார்ட்மென்ட். சுவர் முழுக்க ஃபிரேம் போட்டு மாட்டிவைத்திருக்கும் புகைப்படங்கள். அந்தப் படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் நடுத்தர வயதுள்ள ஒருவன். ஒவ்வொரு புகைப்படத்தைப் பார்க்கும்போதும் அது தொடர்பான காட்சி விரிகிறது. அவன் திருமணம், மனைவியுடனான மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தை பிறப்பது,  மனைவி இறப்பது... என நகர்கின்றன காட்சிகள்.  அவனின் ஒரே மகள்... புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறாள். சக்கர நாற்காலியோடு சுருங்கிப்போய்விடுகிறது அவள் வாழ்க்கை. 

அந்தச் சிறுமி வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு எதிரேயிருக்கிறது இன்னொரு அப்பார்ட்மென்ட். அங்கிருக்கும் ஒரு ஃபிளாட்டுக்கு வருகிறான் ஓர்  இளைஞன். தன் ஃபிளாட்டில், பால்கனியில் நின்றபடி நகரை, சாலையோரமாகக் குழந்தைகள் விளையாடுவதை, மேகங்கள் நகர்வதையெல்லாம் ரசிக்கிறான். அவன் ஃபிளாட்டுக்கு நேர் எதிரே மற்றொரு  பால்கனியில் வீல் சேரில் அமர்ந்தபடி எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் சிறுமியைப் பார்க்கிறான். அந்தச் சிறுமியின் முகத்தில் சோகம் அப்பிக்கிடக்கிறது. 

அன்றிலிருந்து அவள் கவனத்தைக் கவர, அவளைச் சந்தோஷப்படுத்த, சிரிக்கவைக்க என்னென்னவோ செய்து பார்க்கிறான் அந்த இளைஞன். சிறுமியின் இறுக்கமான முகம்தான் அவனுக்குப் பதிலாகக் கிடைக்கிறது.  கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டுக்கொண்டு, அவள் வீட்டுக்குள் போய் ஏதோ ஒரு பரிசைக் கொடுக்கப் பார்க்கிறான். சிறுமி, அவளைப் பார்க்கப் பிரியப்படாமல், கதவை அறைந்து சாத்துகிறாள். பிறகு எப்படி அவளை தன் பக்கம் ஈர்க்கிறான் என்பதை டச்சிங்காகச் சொல்லி முடிகிறது குறும்படம். புற்றுநோய் பாதித்தவர்களை எப்படி அணுகவேண்டும் என்பதை வெகு அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் செல்லா.

படம் ஓடுகிற 17 நிமிடங்களும் நாம் அப்படியே அதில் ஒன்றிவிடுகிறோம். புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான சிறுமியின் ஏக்கம் நிறைந்த பார்வை, படம் முடிந்த பிறகும் நம்மைத் துளைத்தெடுத்துக்கொண்டே இருக்கிறது. அவள் அப்பாவின் சோகம் கப்பிய முகத்துடனான நடிப்பு இயல்பு; உதவும் குணம் கொண்ட இளைஞனின் துறுதுறுப்பு அழகு.  

நோய் குறித்த பயத்தை ஏற்படுத்தாமல், அறிவுரை சொல்லும் வகையில் இல்லாமல் இருப்பதுதான் இந்தக் குறும்படத்தின் சிறப்பு. புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு மிக முக்கியமான தேவை... பாதிக்கபட்டவருக்கு மன தைரியத்தையும் தன்னம்பிக்கையும், ஆதரவையும் பிறர் அளிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தக் குறும்படம். 

டாக்டர் சாந்தா

இந்தப் படம் திரையிடப்பட்டபோது, அங்கு வந்திருந்த குழந்தைகள் சத்தமே இல்லாமல் அமைதியாக முழுப்படத்தையும் பார்த்தார்கள். படம் முடிந்தும் கை தட்டல் அடங்க வெகு நேரம் ஆனது. டாக்டர் சாந்தா இந்தப் படத்தை மிகவும் பாராட்டினார். 

இந்தக் குறும்படத்தை எடுத்த குழுவினரிடம் பேசினோம்...

``நண்பர்களாகச்  சேர்ந்து 'லிப்ஃட் அதர்ஸ்' (Lift others)  என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினோம். எங்கள் குழுவின் முதல் தயாரிப்பாக,  புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும் வகையில் இந்தக் கதையை உருவாக்கினோம். 
பொதுவாகப் புற்றுநோயாளிகளைச் சந்திக்கும்போதெல்லாம் எதையோ இழந்தவர்கள்போல இருப்பார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதுதான் இந்தப் படத்தை எடுக்க அடிநாதம்.  

 

 

 'புகைபிடிக்காதீங்க', 'மதுப் பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு' என அன்றாடம்  எவ்வளவோ விழிப்புஉணர்வு பிரசாரங்களைக் கேட்கிறோம். ஆனாலும், சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதேபோல, `நிமிடத்துக்கு இத்தனை பேர் இறக்கிறார்கள்...’ போன்ற நோய்களின் தீவிரத்தையும், ஆபத்துகளையும் குறித்த பயமுறுத்தல்களைத்தான் பெரும்பாலும் பார்க்க முடிகிறது. எனவேதான், வழக்கமான அறிவுரை கூறும் பாணியை, நோயாளிகளைப் பயமுறுத்துவதைத் தவிர்த்தோம். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜியைத் தர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தக் குறும்படத்தை உருவாக்கினோம்.

புற்றுநோயாளிகளுக்கான  விழிப்புஉணர்வு குறும்படம்

எங்கள் நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்டு `ஈக்விட்டாஸ்’ (Equitas) என்னும் வங்கி குறும்படத் தயாரிப்புக்கு நிதி கொடுக்க முன்வந்தது. புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிறுமியாக நடித்திருப்பவர் ஸ்மிருதி. இவர், `காஷ்மோரா’ படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். நவம்பர் 17-ந்தேதி யூடியூபில் பதிவிட்டோம். சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. நிறைப் பேர் போன் செய்து, பாராட்டினார்கள்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின், நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ஹரீஷ் கல்யாண், ஆர்.ஜே.பாலாஜி டேனியல் பாலாஜி, ஏ.எல்.விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் போன்ற பிரபலங்கள், அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் குறும்படத்தைப் பாராட்டி, பதிவிட்டிருக்கிறார்கள். இதனாலேயே எங்கள் படம் பல ஆயிரக்கணக்கானவர்களைச் சென்று சேர்ந்திருக்கிறது.

படம் எடுப்பதற்காக, புற்றுநோய் பாதித்தப் பலரை நேரில் சந்தித்தோம். அவர்களிடம் பேசியபோது, ஒன்று தெரிந்தது. தங்களை ஒரு நோயாளியாக மற்றவர்கள் பார்ப்பதை அவர்கள் விரும்பவில்லை. எல்லோரையும்போல சராசரி மனிதர்களாகப் பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள். உடலில் ஊனமுள்ளவர்களை 'மாற்றுத்திறனாளிகள்' என்கிறோம். மனவளர்ச்சி குறைந்தவர்களை 'சிறப்புக் குழந்தைகள்' என்கிறோம். அதேபோல, புற்றுநோயாளிகளை, `நோயாளிகள்’ என்று சொல்வதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, `புற்றுநோய் போராளிகள்’ (Cancer Fighter) என்று அழைக்கலாம் என்பதே எங்களுடைய ஆசையும் வேண்டுகோளும். இந்தப் பெயரைத்தான் எங்கள் குறும்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறோம்" என்கிறார்கள் அவர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement