சீமான் தன் ஸ்ட்ரெஸ்ஸை இப்படித்தான் குறைக்கிறார் என்றால் நம்புவீர்களா? #LetsRelieveStress | Seeman speaks about his stress relief technique

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (07/12/2017)

கடைசி தொடர்பு:16:31 (07/12/2017)

சீமான் தன் ஸ்ட்ரெஸ்ஸை இப்படித்தான் குறைக்கிறார் என்றால் நம்புவீர்களா? #LetsRelieveStress

சீமான் தமிழக அரசியலின் தனித்துவம். மண், மொழி, மக்களுக்காக நாடி நரம்புகள் புடைக்க அவர் பேசும் பேச்சுகள், இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றுகள். அவர் தனக்கு ஏற்படும் மனஅழுத்தம், மன இறுக்கம், டென்ஷன் இவற்றையெல்லாம் எப்படிப் போக்கிக்கொள்கிறார் என்பது பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்...

சீமான்

“ ‘உலகமயமாக்கல்', 'தாராளமயமாக்கல்' இந்த இரண்டு வார்த்தைகளும் 90-களுக்கு முன்பு நமக்குத் தெரியாது. குறைவான வருமானத்தில் நிறைவான வாழ்க்கையை எல்லோரும் வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆனால், புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பிள்ளைகளான 'உலகமயமாக்கல்', 'தாராளமயமாக்கல்' ஆகிய இரண்டும்  வாழ்க்கையின் உச்சநிலையில் இருப்பவர்களிலிருந்து மத்தியதர மக்கள், படிப்பறிவு இல்லாத சாதாரண மனிதர்கள் வரை சகலரின் வாழ்க்கையையும் மாற்றிப் போட்டுவிட்டது. 

நம்மை அறியாமலேயே நாம் இந்த இக்கட்டான வாழ்க்கைச்சூழலில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறோம். இந்த நுகர்வுக் கலாசாரம் நமக்கான மானத்தை, வீரத்தை, தியாகத்தை, நமது பேரன்பை, பொதுநலத்தை அழித்துவிட்டு ஒவ்வொரு மனிதனையும் தான், தனது குடும்பமெனச் சிந்திக்கவைத்து, சுயநலமான வேட்டை விலங்காக மாற்றிவிடும். இதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதிலிருந்து முதலில் வெளிவர வேண்டும்.

சீமான்

‘ஸ்மார்ட் சிட்டி’ என சென்னையைச் சுற்றியே நகரங்களை அமைத்துக்கொண்டிருக்கிறோம். ஸ்மார்ட் வில்லேஜ்கள் இங்கு கிடையாது. அதைத்தானே முதலில் உருவாக்க வேண்டும்... அதைத்தானே அருகிலுள்ள ஸ்மார்ட் சிட்டிகளோடு இணைக்க வேண்டும்? 

ஆஸ்திரேலியாவை எடுத்துக்கொண்டால் சிட்னி, கான்பெரா, மெல்போர்ன், பிரிஸ்பேன், பெர்த், அடிலெய்டு, ஹோபார்ட், டார்வின் என எட்டுத் தலைநகரங்கள் அதற்கு இருக்கின்றன. அப்படித் தமிழ்நாட்டிலும் எல்லா நகரங்களையும் உருவாக்கி, அதை நம் கிராமங்களோடு இணைக்க வேண்டும். அதுதான் முறையான பரவலாக்கப்பட்ட வளர்ச்சியாக இருக்கும். அதனால்தான் குறைந்தபட்சம் முதலில் திருச்சியைத் தலைநகரமாக்க வேண்டும் எனப் போராடி வருகிறோம்.

சீமான்

சத்தமே இல்லாமல் 'சாகர் மாலா'ங்கிற திட்டத்துக்குக் கூச்சமே இல்லாம ஆளும் அரசு கையெழுத்துப் போட்டிருக்கிறது. இதன் விளைவு தமிழகத்துறைமுகங்கள் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்படும் நமது கனிம வளங்கள் எல்லாம் அம்பானியாலும் அதானியாலும் சூறையாடப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகும். இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் நம் மக்கள் இருக்கிறதைப் பார்க்கும்போது மன அழுத்தத்தைவிட மன வருத்தம்தான் அதிகமாகுது'' என்றவரிடம், ''இப்படிப்பட்ட இறுக்கமான நேரங்களை எப்படி எளிதாக்கிக்கொள்கிறீர்கள்'' எனக் கேட்டோம். 

“எனக்கு நெருக்கமாக இருக்கும் தம்பிகள் மருத்துவர் சிவகுமார், பாக்யராஜன், ராவணன் போன்றவர்களிடம் பகிர்ந்துகொள்வேன். எனக்கு மிக நெருக்கமாக உலகம் பூராவும் 900 தம்பிகள் இருக்கிறாங்க. என் உலகமே 'தம்பி'யால் உருவானதுதானே. அதற்கு மேலும் ரொம்ப டென்ஷனாக இருந்தா நேரா எனது அறைக்குப் போய் புத்தகங்களை வாசிக்க ஆரம்பிச்சிடுவேன். அதைவிடச் சிறந்த மருந்து எதுவும் இல்லை. அப்பா மணிவண்ணன்கிட்டே இருந்து வந்த பழக்கம் இது. அப்போதெல்லாம் வைகோ, காளிமுத்து இவர்களின் பேச்சையெல்லாம் விரும்பிக் கேட்பேன். அவர்களெல்லாம் அப்படிப் பேசுவதற்குக் காரணமே அவர்களது நீண்ட வாசிப்புதான்.

 

சீமான்


புத்தகங்களின் அருமையை, பேசாதத் தலைவர்களே இல்லை. 'கற்றவர்களிடம் கற்பதைவிட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்' என்று கூறுவார் காரல் மார்க்ஸ். 'போர்க்களத்தில் இருக்கும் ஆயுதத்தைவிட வலிமையானது புத்தகம்' என்கிறார் லெனின்.
'நம் முன்னோர்களிடம் பேச வேண்டுமா? நூலகத்துக்குச் செல்' என்கிறார் மா சே துங். புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்துவிட்டால் நேரம் காலமே பார்க்க மாட்டேன். சாப்பாட்டைக்கூட மறந்து போய்விடுவேன். இதற்காக நான் அடிக்கடி என் துணைவியாரின் கோபத்துக்கு ஆளாவதும் உண்டு.

புத்தகம் வாசிக்கத் தோன்றவில்லை என்றால், திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்துவிடுவேன். இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், தமிழ் என எந்த மொழிப்படமாக இருந்தாலும், எனக்குப் பிடித்திருந்தால் பார்ப்பேன். குறிப்பாக, பிற மொழிப்படங்களை விரும்பிப் பார்ப்பேன்'' என்றவரிடம் ''ஏன் தமிழ்ப்படங்களைவிட பிற மொழிப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீங்க?’’ எனக் கேட்டோம்.

 

சீமான்

“முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். சினிமாவுக்கு சினிமாதான் மொழி. சினிமாவைப் புரிந்துகொள்ள மொழி ஒரு தடையே கிடையாது'' என்றவரிடம், “உடல் ஆரோக்கியத்துக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்கிறீர்கள்?’’ எனக் கேட்டோம். 

“கராத்தே, சிலம்பம் இதெல்லாம் முன்பே நான் கற்றுக்கொண்டேன். உடற்பயிற்சிக்கூடத்துக்குப் போவேன். இப்போது வீட்டிலேயே ஜிம்  இருப்பதால், அங்கேயே பயிற்சியாளர் மனோகரனின் மகன் தாஸ் வந்து சொல்லித் தருவார். நேரம் இருப்பதைப் பொறுத்து உடற்பயிற்சி செய்வேன்’’ என்றவரிடம், “சாப்பாடு விஷயத்தில் நீங்கள் எப்படி?’’ என்றோம்.

“அய்யா நம்மாழ்வார் 'பசித்து உண், மசித்து உண், ரசித்து உண், ருசித்து உண், உணவைக் குடி... தண்ணீரைக் கடி, 16 செல்வங்கள்போல 16 சுவை நரம்புகள் உள்ளன. வயிற்றுக்குள் பற்கள் கிடையாது. அதனால் இங்கேயே நாம் உண்ணும் உணவைச் செரிமானத்துக்கு ஏற்ற வகையில் பொறுமையாக மென்று சாப்பிட வேண்டும்” என்பார் அதைத்தான் கடைப்பிடிக்கிறேன். இவை எல்லாவற்றையும்விட, என் செல்லப்பிராணிகள், நான் வளர்க்கும் பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் போதும்... எல்லாக் கவலைகளும் பறந்து போய்விடும்’’ என்கிறார் சீமான்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்