Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இளம் பருவத்தில் இதயநோய்... கொழுப்பைக் கட்டுப்படுத்தினால், இதயத்தை பத்திரப்படுத்தலாம்! #SaveHeart

`ட்ரான்ஸ் ஃபேட் (Trans fat), சாச்சுரேட்டட் ஃபேட் (Saturated fat) இந்த இரண்டு கொழுப்புகளையும் கட்டுக்குள் வைத்திருப்பது குழந்தைகளையும் இளம் வயதினரையும் இதயநோய்க்கு ஆளாவதில் இருந்து காக்கும்’ என்று மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. `இரண்டு வயது முதல் 19 வயதுக்குள் நாம் சாப்பிடும் உணவின் மூலமாகத்தான் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுக்க முடியும். கெட்ட கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமே இளம் பருவத்தில் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும்’ என்று இந்த ஆய்வுகள் சொல்கின்றன. இதய நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஞானவேல், சிறு வயதில் இதய நோய் வருவதற்கான காரணங்களையும், அதைத் தடுக்கும் முறைகளையும் குறித்து விளக்குகிறார்.

இதயம்

``இதயநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் ஒரு காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்கள். இப்போது 20 வயதுக்குள் இருப்பவர்கள்கூட இதயநோய் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் தவறான உணவு முறையும் வாழ்க்கை முறையும்தான். பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் புட் அதிகம் சாப்பிடுவதால் ட்ரான்ஸ் ஃபேட், சேச்சுரேட்டட் ஃபேட் இரண்டும் உடலில் அதிக அளவில் சேரும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். இதுதான், இதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.இதயநோய் மருத்துவர் டாக்டர் ஞானவேல்

குழந்தைகளின் ரத்தக்குழாய் மிக மென்மையாக இருக்கும். நம் உணவில் இருந்து கிடைக்கும் கெட்ட கொழுப்பு, அந்த ரத்தக்குழாயில் படியத் தொடங்கும். தவறான உணவு முறையின் காரணமாக ரத்தக்குழாயில் படியும் கெட்ட கொழுப்பு, சிறு வயதிலேயே அதில் அடைப்பை ஏற்படுத்திவிடும். அதிகமாக ஹோட்டல்களில் சாப்பிடுவது, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் உடல் எடை கூடும். கிராமப்புறக் குழந்தைகள்கூட இப்போது பாக்கெட் ஃபுட் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி விற்கப்படும் பாக்கெட்டுகளில் எந்தக் கொழுப்பு, எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பொதுவாகவே, உள்ளூர் தயாரிப்பு பாக்கெட் உணவுகளில் இந்த கொழுப்பு அளவுகள் குறிப்பிடப்படாமல் இருக்கும். கெட்ட கொழுப்பு அதிகம் உள்ள இவற்றைக் குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதால், ரத்தக்குழாயில் கொழுப்பு படியத் தொடங்கும். எனவே, பாக்கெட் உணவுகளைத் தவிர்ப்பதுதான் நல்லது.

கெட்ட கொழுப்பு

ட்ரான்ஸ் ஃபேட், சாச்சுரேட்டட் ஃபேட் இந்த இரண்டு வகை கொழுப்புகளும் உடலில் அதிகம் சேர்வதால் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிப்படைந்து பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உணவு முறையை குழந்தைப் பருவத்தில் இருந்தே சரிசெய்வதன் மூலம் இளம் வயதில், இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.

தடுக்கும் வழிமுறைகள்...

* முடிந்தளவு வெளியில், ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ளலாம்.

* கெட்ட கொழுப்பு, உடல் எடையைக் கூட்டும் பொருள்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.

* உணவுக்கு செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், எள் எண்ணெயைப் பயன்படுத்தவும்.

* அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, இயற்கையான முறையில் வளரும் ஆடு, கோழி போன்றவற்றின் மாமிச உணவுகளை (அதாவது ஸ்டீராய்டு தீவனம் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்ட மாமிச வகைகள் தவிர்த்து) உட்கொள்ளலாம்.

அசைவம்

* முடிந்த வரை எண்ணெயில் டீப் ஃபிரை செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிட்டு ஆவியில் வேகவைத்த, சுட்ட உணவுகளைச் சாப்பிடலாம்.

* வீட்டிலேயே சிறிய அளவில் தோட்டம் அமைத்து, அதில் விளைவித்த காய்கறிகளைப் பயன்படுத்துவதுவதும் ஆரோக்கியமானது.

* உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளைக் குறைக்க உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அவசியம்.

* சிறு வயதில் போதைப் பழக்கம், புகைபிடித்தல், மதுப்பழக்கம், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவற்றை அறவே விட்டுவிடுவது நல்லது.

* குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அதிக தூரம் பயணிப்பதும், அப்போது ஏற்படும் டிராஃபிக், சுற்றுச்சூழல் மாசு ஆகியவைகூட மனஅழுத்தம் தரலாம். அதன் காரணமாக, இதயநோய் சிறு வயதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, இதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, குழந்தைகள் எளிதாகப் பள்ளி செல்ல மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவசியம்.

* உணவுக்கு இடையில் எண்ணெயில் பொரித்த மற்றும் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ள ஸ்நாக்ஸ் வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சுண்டல், பயறு போன்ற இயற்கை உணவுகளை உட்கொள்ளலாம்.

* படிப்பு சார்ந்த மனஅழுத்தங்களும் சிறு வயதில் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே, அவர்களுக்குப் படிப்பில் ஏற்படும் அழுத்தம், போட்டி, வெற்றி, தோல்வி ஆகியவற்றை சுலபமாகக் கையாள கற்றுத் தரவேண்டியது அவசியம்.

இப்படிப்பட்ட ஆரோக்கியமான மாற்றங்கள் இளம் பருவத்தில் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்’’ என்கிறார் மருத்துவர் ஞானவேல்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement