டெங்கு பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்! சுகாதாரத்துறை சொல்லும் காரணம் என்ன? #Dengue

டுப்பூசியோ, உரிய சிகிச்சை முறையோ கண்டறியப்படாத ஒரு நோயாக இருக்கிறது டெங்கு. இந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுக்க டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 635 பேர். அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 226 பேர். இந்த ஆண்டு கொசுக்கள் மற்றும் சிறு பூச்சிகளால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த மத்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதான் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறது.

டெங்கு

அதிலும், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 22,197 பேர் டெங்குக் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். 52 பேர் பலியாகியிருக்கிறார்கள். 2014-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 804 பேரும், 2015-ம் ஆண்டில் 4 ஆயிரத்து 535 பேரும் தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்கள். 

டெங்கு பாதிப்பில், அண்டை மாநிலமான கேரளா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அங்கே 19 ஆயிரத்து 695 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கர்நாடாக மாநிலமும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தத் தகவல் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில், வட மாநிலங்களைவிட அதிகம் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் எனக் கருதப்படும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் டெங்கு பாதிப்பில் முன்னிலையில் இருக்கின்றன. 

டெங்கு

டெங்கு பாதிப்பு அதிகமாக என்ன காரணம், அரசின் நடவடிக்கைகள் பலன் தரவில்லையா?’’ என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டோம்... 

“டெங்கு பாதிப்பில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்பதால், இதை அரசின் மெத்தனப்போக்கு என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு நோயின் தாக்கத்தை கணக்கிடும்போது, அந்தப் புவியியல் பரப்பு, மக்கள்தொகை, மக்களின் விழிப்புஉணர்வு மூன்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில், கோவா போன்ற சிறிய மாநிலத்தை, தமிழ்நாடு போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய மாநிலத்துடன் ஒப்பிட முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை முறையான நடவடிக்கைகள் மூலம் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது’’ என்றவர் என்னென்ன நடவடிக்கைகள் மூலம் டெங்கு பரவுவதை தடுக்கலாம் என்பதையும் விளக்கினார்.

“அரசின் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அவர்களும் இதில் அக்கறை எடுத்துக்கொண்டால் மட்டுமே இதை எதிர்கொள்ள எளிதாக இருக்கும். குறிப்பாக,  பொதுமக்களிடம் உள்ள கவனக்குறைவு, அலட்சியம், விழிப்புஉணர்வின்மை போன்றவையே டெங்கு பரவுவதற்கும், அதனால் ஏற்படக்கூடிய உயிரழப்புக்கும் முக்கியக் காரணங்களாகின்றன. உதாரணமாக,  'மழைக்காலத்தில் மட்டுமே டெங்கு வரும்; மற்ற காலங்களில் டெங்குவை ஏற்படுத்தும் கொசு உருவாகாது' என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. மழைக்காலங்களில் கொசுக்கள் பெருகுவது அதிகமாக இருப்பதால், அப்படி நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், அது உண்மையல்ல. 
மேலும், முன்பைவிட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய்ச் சிரட்டைகள் போன்ற தேவையில்லை எனக் கருதும் பொருள்களை வீட்டுக்கு வெளியே தூக்கி எறிந்துவிடுகிறோம். மழை பெய்யும்போது, அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அது கொசு உற்பத்திக்குக் காரணமாகிவிடுகிறது. 

டயர்

முக்கியமாக, பல இடங்களில் டயர்களை அப்புறப்படுத்தச் சொல்லி அரசால் பல முறை வலியுறுத்தப்படுகிறது. மற்ற பொருள்களில் நீர் தேங்கினால் அது சில நாள்களில் ஆவியாக வாய்ப்பிருக்கிறது. ஆனால், டயர்களின் அமைப்பு, அதில் தேங்கிய தண்ணீர் எளிதில் ஆவியாக விடாது. பல நாள்கள் அப்படியே இருக்கும். கொசுக்கள் உருவாக வழிவகுத்துவிடும். அதனால்தான் அப்படி எங்காவது டயர்களைக் கண்டால், பொதுமக்களே 104 என்ற எண்ணுக்குப் புகார் தெரிவிக்கலாம் என்று வலியுறுத்திவருகிறோம். 

மேலும், காய்ச்சல் வந்தவர்கள், 'நமக்கெல்லாம், டெங்குக் காய்ச்சல் வராது' என்று சுய சிகிச்சை செய்துகொள்வதும், உடனடியாக, மருத்துவமனைக்குச் செல்லாமல், மெடிக்கல் ஷாப்களில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதும்கூட டெங்கு பாதிப்புக்குக் காரணமாகின்றன. இதுபோன்ற அலட்சியம் மீண்டும் டெங்குவின் பாதிப்பை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதுதான் நல்லது’’ என்கிறார் குழந்தைசாமி.

“கொசுக்களால் பரவும் நோய்களை என்னென்ன நடவடிக்கை மூலம் குறைக்கலாம்?’’ என்று  பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் முதன்மைப் பூச்சியியல் வல்லுநர் எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதரிடம் கேட்டோம்... 

“மிகக் குறைந்த வெப்பநிலையிலும் மிக அதிகமான வெப்பநிலையிலும் கொசுக்களால் உயிர் வாழ முடியாது. இதன் காரணமாகத்தான், மிதவெப்ப நாடுகளில் கொசுக்கள் அதிகமாக வாழ்கின்றன. இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளிலும், சில வளரும் நாடுகளிலும் கொசுக்களின் ஆதிக்கம் அதிகம்.

கொசு

கொசுக்களைக் கட்டுப்படுத்த அவற்றின் வாழ்விடங்களை அழிக்கவேண்டியது முதன்மையானது. டெங்கு என்னும் வைரஸ் காய்ச்சல், பூச்சியல் வல்லுநர் எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதர்'ஏடிஸ் எஜிப்தி' வகை கொசுக்களால் பரவுகிறது. இவை, ரோட்டில், தெருக்களில் கிடக்கும் தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில், டயர் போன்றவற்றில் பல நாள்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்குவதால், உற்பத்தியாகின்றன. அதேபோல வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், திறந்தநிலை மேல்நிலைத் தொட்டிகளின் மூலமும் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. 

அதேபோல, குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் வசிப்பவர்களுக்குச் சில வாரங்களுக்கு ஒருமுறைகூட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தச் சூழலால், பொதுமக்கள் நீரைச் சேமித்துவைத்து பயன்படுத்தவேண்டியிருக்கிறது. கொசு உருவாக ஒரு வாரத்திலிருந்து 10 நாள்கள் போதும் என்பதால், முறையாக மூடிவைக்காமல் பயன்படுத்தும் குடிநீரில்கூட எளிதாகக் கொசுக்கள் உருவாகிவிடுகின்றன. அவற்றின் உற்பத்தியைக் குறைப்பதற்கு வீடுகளிலும், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும் தண்ணீரைத் தேங்கவிடக் கூடாது. ஜன்னல்களில் கொசுவலை, படுக்கையில் கொசுவலை ஆகியவற்றைப் பயன்படுத்தவேண்டியது அவசியம். சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டுகொண்டு, அங்கே கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக்கொண்டாலே போதும்... கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தடுத்துவிடலாம்" என்கிறார் எம்.எஸ்.முகைதீன் அப்துல்காதர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!