காலை உணவு, தூக்கம், சர்க்கரை... மூளையைப் பாதிக்கும் 10 அன்றாடச் செயல்கள்!

ம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் தலைமைச்செயலகம் மூளை. அறிவாற்றல், சிந்தனைத் திறன், கற்றல், ஞாபகம், உணர்ச்சிகள் என உயிர்ப்புள்ள அனைத்து விஷயங்களுக்கும் அடிப்படை மூளைதான். ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஹார்மோன், உடல் வெப்பநிலை போன்றவற்றின் சமநிலையைப் பராமரிப்பதிலும் மூளை முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையை, நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள் கூட எளிதில் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

மூளை

மூளையைப் பாதிக்கும் அப்படியான சில செயல்பாடுகளைப்  பார்க்கலாம்...

காலை உணவைத் தவிர்ப்பது !

காலை உணவு உடலுக்குத் தேவையான ஆற்றலுடன் அன்றைய நாளுக்கான புத்துணர்வையும் தரக்கூடியது. காலையில் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும். அதனால் மூளை செல்கள் பாதிக்கப்படும். கவனச்சிதறல் ஏற்படும். செயல்பாடுகளைப் பாதிக்கும். 

மூளையை பாதிக்கும்  புகைப் பழக்கம்

புகை!

தொடர்ச்சியாகப் புகை பிடிப்பவர்களுக்கு மூளை சுருங்கிவிடும் ஆபத்து உண்டு. அல்சைமர் நோய் ஏற்படலாம். சிகரெட்டில் இருக்கும் நிக்கோடின் மனதை அடிமைப்படுத்தி விடும். அதனால் புகை மூளைச் செயல்பாட்டுக்குப் பகை!  

வெள்ளைச் சர்க்கரை விபரீதம்!

அதிக சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வது, புரோட்டீன் சத்துகள் உட்கிரகிப்பதை குறைக்கும். அதனால்  ஏற்படும் சத்து குறைபாடு  நரம்புகளின் வளர்ச்சியைக் குறைத்து, மூளையையும் பாதிக்கும். ரீபைண்ட் செய்யப்பட்ட சர்க்கரை, மைதா, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மூளையின் செயல்பாடுகளையும் இந்த உணவுகள் பாதிக்கும்.  

சுற்றுச்சூழல் மாசு... கவனம்!

மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. மூளை செல்களுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காவிட்டால், அது செயல்பாடுகளைப் பாதிக்கும்.

தூக்கம்

தூக்கம் அவசியம்!

உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்குப் போதுமான அளவு தூக்கம் அவசியம். நாம் தூங்கும்போதுதான் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். போதிய அளவுக்குத் தூங்காவிட்டால் மூளைக்கு ஓய்வு கிடைக்காமல் போய்விடும். மூளை செல்கள் பாதிக்கப்படும். ஆழ்ந்த தூக்கம் மூளை செல்களை அதிகரிப்பதோடு புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது.  

அதிக உணவு, ஆபத்து!

அதிகமாகச் சாப்பிடுவதாலும் கொழுப்பு உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதாலும் மூளையின் ரத்த நாளங்கள் சுருங்கிப்போய்விடும். மூளையின் செயல்பாடும் குறைந்துவிடும். 

மூளையை பாதிக்கும் மதுப்பழக்கம்

மதுப்பழக்கம் வேண்டாம்!

மதுவில் உள்ள ஆல்கஹால் நரம்பு மண்டலம், கல்லீரல், இதயம் ஆகிய உள்ளுறுப்புகளைப் பாதிக்கிறது. நச்சுத்தன்மை அதிகரிப்பதால் நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகி மூளை கட்டளையிடும் தன்மை தடைபடும். 

மன அழுத்தம் தவிருங்கள்!

மன அழுத்தம், நரம்பு மண்டலத்தில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. மன அழுத்தம் அதிகமானால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உண்டு. 

அதீத வேலை ஆபத்து

அதிகமாக யோசிக்காதீர்கள்!

உடல்நலம் குன்றிய காலத்தில் மூளையின் செயல்பாடு மந்தமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் தீவிரமாகப் படிப்பதும், மூளைக்கு அதிகம் வேலை கொடுப்பதும் நல்லதல்ல. 

இழுத்துப் போர்த்தாதீர்கள்!

சிலர், போர்வையால் கால் முதல் தலைவரை போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். அதனால்  காற்றோட்டம் குறைகிறது. நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு போர்வைக்குள்ளாகவே நிரம்பி, தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் தடை ஏற்படுத்துகிறது. அதனால் மூளைச்செல்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் குறைந்து, மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!