வேலைக்காரன், 36 வயதினிலே, பூலோகம்... உணவு அரசியல் பேசும் படங்கள்!

பெரும்பாலான திரைப்படங்களின் மையம், காதலாக இருப்பது பொதுவான விதி. ஆனால், அண்மைக் காலமாக காதலை மையப்படுத்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல், உணவியல் மற்றும் வாழ்வியல் சார்ந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களும் வரத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக உணவு சார்ந்த மிகப்பெரிய வணிக உலகத்தில் நடக்கும் அரசியலைத் தோலுரித்துக் காட்டும் திரைப்படங்கள் வருவது ஆரோக்கியமான விஷயம். உணவு அரசியலுக்கு சாசனம் எழுதினால், மிகப்பெரிய அத்தியாயம் தேவைப்படும் அளவுக்கு விஷயங்கள் அதிகம். இன்றையத் தேதியில், அறமற்ற உணவு வணிகத்தின் பிடியில் நாம் மாட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் பல தரப்பினரையும் சென்று சேரும் திரைப்படங்களின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான விழிப்பு உணர்வைக் கொடுத்தால், ஓரளவுக்கு மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 'உணவு அரசியல்' என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு அண்மைக் காலத்தில் வெளிவந்த விழிப்பு உணர்வுத் திரைப்படங்கள் பற்றிய ஓர் அலசல்தான் இந்தக் கட்டுரை! நலமான உணவியல் குறித்த பிரசாரத்தை வெள்ளித்திரையில் மேற்கொண்ட திரைப்படங்கள் என்னென்ன? பார்க்கலாம்...

உணவு

‘36 வயதினிலே’

ஜோதிகாவின் நடிப்பில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெளியான ‘36 வயதினிலே’ திரைப்படம், ஆர்கானிக் உணவுகளைப் பற்றிப் பேசியிருந்தது. பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், ரசாயன உரங்களாலும் உயிர்விக்கப்பட்ட இன்றைய காய்கறிகளின் ஆபத்தை ‘36 வயதினிலே’ திரைப்படம் சிறப்பாகத் தெளிவுபடுத்தியிருந்தது. ‘ஆர்கானிக்’ உணவுகளின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்ல பல ஆண்டுகளாக முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்ற இயற்கை நல விரும்பிகளின் பணி, திரைப்படம் வெளியான பிறகு எளிமையாகியிருக்கலாம். ஆர்கானிக் உணவுகளை நோக்கி ஓரளவு மாறிவிட்ட இன்றைய சமுதாயத்தில், மாறாமல் இருந்த மிச்ச சொச்சங்களும், “ஜோவே சொல்லிடாங்க... இனிமே அப்படித்தான்” என்ற திரையுலக பிம்பத்தால் மாற வாய்ப்பிருந்தது.

மாடித் தோட்டம்

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற சித்த மருத்துவக் கோட்பாடைச் சமீபத்தில் வெளிப்படுத்திய திரைப்படம் ‘36 வயதினிலே’ ரசாயனக் கலப்படம் இல்லாத உணவுகளை உட்கொள்ள, நாமே அவரவர் வீடுகளில் தோட்டமோ, மாடித் தோட்டமோ அமைப்பதே சிறந்தது என்ற கருத்து உருப்பெற்று வந்த நிலையில், இந்தத் திரைப்படத்தில் ‘வீடுதோறும் தோட்டம் அமைப்போம்’ என்ற கருத்தை ஆழமாகச் சுட்டிக்காட்டியது பாராட்டுக்குரியது!

‘பூலோகம்’

கார்ப்பரேட் முதலாளிகளின் ஏமாற்று வித்தையை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டியிருந்தது `பூலோகம். சேனல்களின் வியாபார தந்திரங்களையும், உணவுப் பொருள் விற்பன்னர்களின் மாய வித்தைகளையும் தைரியமாக தோலுரித்திருந்தது. `வணக்கம்... வணக்கம்’ பாடலில் ஜுரம் வருவதற்கான காரணம், உடலுக்கு பலமூட்டும் சித்த மருத்துவம் சொல்லும் சில இயற்கை உணவுகள் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. `இவன் சென்னை மாநகர் வீரன்...’ பாடலில் விளம்பரங்களின் சதியால், நம் பாரம்பர்ய உணவுகள் குப்பை உணவுகளிடம் தோற்றதை விவரித்திருப்பார்கள். `ஊட்டச் சத்து மாவென்பான், சாப்பிட்டாதான் மூளையாம், நாட்டை மார்க்கெட்டாக்கியே விளையாடுறான்டா, மாடல் பாத்து ஓடாதே வாழ்க்கை உன்னோடதே...’ என்று போகிறது அந்தப் பாடல். நம் பண்பாடு சார்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் அந்நிய முதலைகள் விழுங்கிக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையை சிறப்பாகச் சித்தரித்திருந்தது `பூலோகம்.’

பாரம்பர்ய உணவுகள்

`அப்பா’

பிள்ளைகளை வளர்க்கும் வாழ்வியல் முறை பற்றியும், உணவு கலாசாரத்தைப் பற்றியும் கவித்துவமாகச் சொல்லியிருந்த திரைப்படம் `அப்பா’. ஆரம்பக் காட்சியிலேயே, `ஆரோக்கியமா வாழணும்னா, இயற்கையோடு இயைந்து வாழணும்’ என்று வந்த வசனம் பார்வையாளர்களை இயற்கையோடு ஒன்றவைத்தது. ’அரசுப் பள்ளிக் குழந்தைகள் நோயில்லா நாட்டுக் கோழிகள்’ என்ற வசனம், மரபு மாறிய பிராய்லர் கோழிகளின் தீமைகளை மறைமுகமாகச் சொல்லியிருந்தது. குழந்தை வளர்ப்பு, கல்வி முறை, சமுதாய நோக்கு, நட்பு, பாசம், பாரம்பர்யம் போன்றவற்றைக் கொண்ட காட்சிகளோடு, நல்ல வசனங்களும் இடம்பெற்ற `அப்பா’, மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை உண்டாக்கியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

‘வேலைக்காரன்’

இதற்கு முன்னர் சில படங்கள் உணவு அரசியலை ஆங்காங்கே பேசியிருக்கின்றன. முழுமையாக உணவு அரசியலையே மையமாகவைத்து வெளிவந்திருக்கும் திரைப்படம் `வேலைக்காரன்.’ கதையில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக, உணவு அரசியலை நன்றாக ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார் இதன் இயக்குநர். படத்தின் தொடக்கத்திலேயே ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ’வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலைக் குறிப்பிடுவதிலிருந்து, நுகர்வோரைச் சார்ந்து இருக்கும் ‘அனைத்தையும்-நுகர்’ கலாசாரத்தைச் சுட்டிக்காட்டுவது வரை அற்புதம்.

வேலைக்காரன்

புதிதாக முளைத்திருக்கும் உணவு வகைகளின் ஆபத்துகள், குறிப்பாக சிறுவயது முதலே தேவையற்ற உணவுகளைக் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என சிலவற்றைத் திரைப்படத்தில் வெளிப்படையாகக் காட்டியது சிறப்பு. துரித உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகளைப் பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ தூற்றும் சில கூட்டங்களின் மத்தியில் இருந்துகொண்டு, மெகா திரையில் தைரியமாக அவற்றின் தீமைகளைப் பேசியிருக்கிறது `வேலைக்காரன்’ படக்குழு. அனைவருக்கும் பிடித்தமான நடிகரின் மூலம் முக்கியமான மெசேஜைக் கொண்டு சேர்த்திருப்பதும் நன்று. ’ஹீரோ-வொர்‌ஷிப்’ கலாசாரம் உள்ள நம் நாட்டில், முக்கியமான உண்மையை வெளிப்படுத்த சிவகார்த்திகேயன் பயன்பட்டிருக்கிறார்.

சித்த மருத்துவராக, பல மேடைகளில் உணவு அரசியலைப் பற்றிப் பேசியும் எழுதியும் வருடக்கணக்கில் விழிப்பு உணர்வு ஏற்படுத்திவரும் மருத்துவர் கு.சிவராமனையே கதைக்கான முடிச்சை அவிழ்க்கும் மருத்துவக் கதாபாத்திரமாகப் பயன்படுத்தியிருப்பதும் நன்று. அவரது எழுத்து மற்றும் பேச்சுக்கு கிடைப்பதைப்போல, ஆடியன்ஸிடமிருந்து அருமையான ரெஸ்பான்ஸ். குறிப்பாக, பல பெரிய நிறுவனங்கள், குழந்தைகளை விளம்பர-வியாபாரத் தந்திரத்தால் மயக்கி எப்படி வலையில் சிக்கவைக்கின்றன என்பதைப் பற்றி அவர் சொல்லியிருப்பது இன்றைய காலக்கட்டத்துக்கு அவசியமான ஒன்று.

உணவு அரசியல்

‘அடக்குமுறை முதலாளித்துவம்’ இப்போது எப்படி ‘அறமற்ற முதலாளித்துவமாக’ மாறியிருக்கிறது என்பது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக உணவு தயாரிப்பில் அறம் பிறழ்ந்தால், மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகளைப் பற்றி விளக்கியிருப்பது அருமை. விழிப்பு உணர்வு கதையம்சம், சமுதாய அக்கறை என நிறைய பிளஸ்கள் திரைப்படத்தில்! நல்ல கருத்துகளை எடுத்துக்கொண்டு உணவு கலாசாரத்தை மீண்டும் புதுப்பிக்க அனைவரும் முன்வருவோம்!...

உணவு அரசியலின் நுணுக்கங்களை தெரிந்துகொண்டு, உடனடியாக நாம் விழித்துக்கொள்வது அவசியம். தடம் மாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்துக்கு, அனைத்து வகையிலும் விழிப்பு உணர்வு தேவை. அச்சு ஊடகத்தின் மூலமும், திரைப்படங்களின் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். மேற்சொன்ன திரைப்படங்கள் மட்டுமல்லாமல், வேறு சில திரைப்படங்கள் உணவு அரசியலை மேலோட்டமாக தொட்டிருக்கின்றன. திரைப்படங்கள் சொல்லும் நல்ல கருத்துகளை பாடமாக எடுத்துக்கொண்டு விழித்துக்கொள்வோம்!...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!