வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (28/12/2017)

கடைசி தொடர்பு:19:47 (28/12/2017)

பழங்கள், காய்கறிகள்... எது பெஸ்ட்? #FruitVsVegetables

ரோக்கியம் குறித்த அக்கறை இன்று அதிகமாகியிருக்கிறது. உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும் உணவுகளை மக்கள் தேடிச்செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் தேடலில் இயல்பாகவே ஒரு கேள்வி எழக்கூடும். பழங்கள், காய்கறிகள்... இரண்டு வகைகளில் எது சிறந்தது? அதேபோல, பழங்களைவிடக் காய்கறிகளில்தாம் சத்துகள் அதிகம் இருக்கின்றன என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. உண்மையில் காய்கறிகள், பழங்கள் இரண்டு வகைகளிலுமே, ஒவ்வொரு காய், கனிக்கும் ஏற்ப தனித்துவமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. அவற்றைச் சாப்பிடும் முறையைப் பொறுத்து, நம் உடலுக்குக் கிடைக்கும் சத்துகளும் அவற்றின் அளவும் மாறுபடலாம். உதாரணமாக, ஒரு டயட் முறையில் வெறும் பழங்கள் மட்டும் சாப்பிடச் சொல்லிப் பரிந்துரைக்கப்படும். இன்னொரு டயட்டில் காய்கறிகளுடன் சேர்த்துக் குறிப்பிட்ட சில பழங்களையும் சாப்பிடச் சொல்வார்கள். காய்கறிகள், பழங்களில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன, எது சிறந்தது, எப்படிச் சாப்பிட்டால் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படாமலிருக்கும் என்பதையெல்லாம் விளக்குகிறார் உணவியலாளர் கற்பகம்.

பழங்கள் காய்கறிகள்

ஓர் ஆரோக்கியமான உணவு முறைக்குப் பழங்கள், காய்கறிகள் இரண்டுமே முக்கியமானவை. அவை உட்கொள்ளப்படும் அளவைப் பொறுத்துதான் கிடைக்கும் பலன்களின் தன்மையும் அமையும்.

சுவை:

* பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை உடையவை.

* இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு, உப்பு என ஒவ்வொரு காய்கறிக்கும் தனித்துவமான ஒரு சுவை இருக்கிறது.

ஊட்டச்சத்து:

* குறைந்த கொழுப்பு, குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து, அதிக குளூக்கோஸ், வைட்டமின் சத்துகள், மினரல் மற்றும் நீர்ச்சத்துகள் பழங்களில் நிறைந்துள்ளன. பெரும்பாலும் கெட்ட கொழுப்பு இருப்பதில்லை.

* காய்கறிகளில் பொதுவாக மிதமான அளவில் கொழுப்பும் கலோரியும் உள்ளன. அதிக நார்ச்சத்துள்ள சில காய்கறிகளும் உண்டு. பூமிக்கடியில் விளையும் காய்கறிகள், கிழங்கு வகைகள் அதிக இனிப்பும் மினரல்ஸும் நிறைந்தவை.

பழங்கள்

சாப்பிடும் முறை:

* ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி போன்ற பழங்களை அப்படியே சாப்பிடலாம். தர்பூசணி, கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை ஜூஸாகவும் பருகலாம்.

* கேரட் போன்ற சில காய்கறிகளை அப்படியே பச்சையாகச் சாப்பிடலாம். கத்திரிக்காய் போன்ற சில காய்கறிகளை வேகவைத்துச் சாப்பிடலாம். பொரிப்பதைத் தவிர்க்கலாம்.

பலன்கள்:

* தர்பூசணி, முலாம், திராட்சை, ஆரஞ்சு, பிளம்ஸ் போன்ற பழங்களில் நீர்ச்சத்து 80 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. இந்தப் பழங்களைச் சாப்பிட்டால், நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைக்கும். திராட்சை, வாழை, செர்ரி போன்ற பழங்கள் நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருபவை. இதற்குக் காரணம், இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துகள். பழங்களில் மட்டும்தான் நமது உடலில் உள்ள திசுக்களைப் பாதுகாக்கும் பைடொகெமிக்கல்ஸ் (Phytochemicals) உள்ளன. ஒரு பழத்தின் முழுமையான பலனைப் பெற, அதைத் தொடர்ந்து முப்பது நாள்கள் சாப்பிட வேண்டும். சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் பழச்சாறு பருகலாம். அப்போதுதான் பழத்தில் உள்ள சத்துகள் ரத்தத்தில் எளிதாகக் கலக்கும். ஆப்பிள், பப்பாளி, கொய்யா, தர்பூசணி போன்ற பழங்கள் அல்லது பழச்சாறுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம், செரிமானக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நினைவாற்றல் இழப்பு, புற்றுநோய்கள் போன்றவை வராமல் தடுக்கலாம். மேலும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் சக்தி அவகேடோ, ஆரஞ்சு போன்ற பழங்களுக்கு உண்டு. ஒரு நாளை உற்சாகமாகத் தொடங்க உதவுவது பழங்களும் பழச்சாறுகளும்தாம். அதிலும் தினசரி ஒரு வகை பழச்சாறு அருந்துவது, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, செல்கள் புத்துணர்வு பெற உதவும். உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, உடல் ஆரோக்கியம் பெறும்.

காய்கறிகள்

* தினசரி உணவில் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான முள்ளங்கி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்றவற்றை வேகவைக்காமல் சாப்பிட்டால், காய்கறிகளில் இருக்கும் அனைத்துச் சத்துகளும் அப்படியே நமக்குக் கிடைக்கும். வெண்ணைக்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுவதால், ரத்த உற்பத்தி, ரத்தத்தைச் சுத்தம் செய்தல் சீராகும். இதய நோய்கள், நுரையீரல் கோளாறு, உடல் பருமன், சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம். ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் தாக்குதல் உள்ளவர்களுக்கு அதன் வீரியம் அதிகரிக்காமல் கட்டுக்குள்வைத்திருக்கவும் காய்கறிகள் உதவும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தக்காளி, மிளகாய், முட்டைக்கோஸ், காளிஃப்ளவர், வெங்காயம் போன்றவற்றை வேகவைக்கும்போது அவற்றில் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும். மேலும், பூமிக்கடியில் விளையும் காய்கறிகள், கிழங்கு வகைகளைச் சாப்பிட்டால், சிலருக்கு உடல் உபாதைகளும் ஏற்படலாம்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை திட உணவுகளைவிட திரவ உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளே அதிகம். காய்கறிகளைவிட பழங்களில் நிறைந்துள்ள நீர்ச்சத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

 


டிரெண்டிங் @ விகடன்