6 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கட்டாயமாகுமா? - தாய்ப்பால் மகத்துவங்கள்! #BreastFeeding

சிவகாசிக்கு அருகேயிருக்கும் சித்துராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி மருத்துவராக வேலை செய்பவர் ஐஸ்வர்யா. பணியின்போது, ஆறு மாதங்களுக்குப் பேறுகால விடுப்பில் சென்றிருந்தார். இதற்கிடையே மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார். பிரசவம் முடிந்ததும் மறுபடியும் பணியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் மருத்துவ மேற்படிப்புப் படிக்க அவருக்கு சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்தது. ஆனால், ‘பயிற்சி மருத்துவராக குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது வேலை செய்திருக்க வேண்டும். அவர் பணியை முழுமையாக நிறைவுசெய்யவில்லை’ என்று காரணம் காட்டி அவரைப் பணியிலிருந்து விடுவிக்க மருத்துவத்துறை இயக்குநர் மறுத்துவிட்டார். இரண்டு ஆண்டுகளில் அவர் எடுத்திருந்த பேறுகால விடுமுறையும் இதில் அடங்கும். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஐஸ்வர்யா.

தாய்ப்பால்

வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் தனது உத்தரவில், “பிரசவம் என்பது ஒரு குழந்தையை மட்டும் தருவதில்லை. குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு அது மறுபிறவியைத் தருகிறது. அதுபோன்ற சூழலில் பிறந்த குழந்தைக்கு மட்டுமல்லாமல், அந்தத் தாய்க்கும் சத்தான உணவும் முறையான ஓய்வும் தேவை. அப்போதுதான் அந்தப் பெண்ணால் குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் ஊட்டிப் பராமரிக்க முடியும். குழந்தைக்குத் தாய்ப்பாலுக்கு இணையாக வேறு எதுவும் கிடையாது” என்றார்.

நீதிபதி கிருபாகரன், “பெண் ஊழியர்களுக்குப் போதுமான அளவு பேறுகால விடுமுறை வழங்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார். மேலும், “தமிழக அரசு பேறுகால விடுப்பை 9 மாதமாக உயர்த்தியதுபோல மத்திய அரசும் ஏன் உயர்த்தக் கூடாது? தன்னைப் பெற்ற தாயிடம் குறைந்தது ஆறு முதல் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் அடிப்படை உரிமை என்று நீதிமன்றம் ஏன் உத்தரவிடக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தாய்ப்பால்

தாய்ப்பாலின் மகத்துவம் குறைந்துவரும் சூழலில் நீதிபதி கிருபாகரனின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது குறித்து, மகப்பேறு மருத்துவ நிபுணர் ஶ்ரீகலா பிரசாத்திடம் கருத்துக் கேட்டோம். “நீதிபதியின் இந்தக் கருத்து சட்டமாக்கப்பட்டால் அதை வரவேற்கிறேன்’’ என்ற ஸ்ரீகலா பிரசாத், தாய்ப்பாலின் சிறப்புகளையும், பாலூட்டும் தாய்மார்களுக்கான சில ஆலோசனைகளையும் கூறினார்..

“தாய்ப்பால் கொடுப்பது மிகவும் எளிது. பவுடர் பால் அல்லது விலங்குகளின் பால் கொடுப்பதால் குழந்தைக்கு ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகள் எதுவும் தாய்ப்பால் கொடுப்பதால் வருவதில்லை. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உடனடியாகக் கொடுக்கக்கூடியது தாய்ப்பால். மற்ற பாலைப்போல சூடுபடுத்த வேண்டும், சுத்திகரிக்க வேண்டும், வடிகட்ட வேண்டும் போன்ற வேலைகள் இதில் இல்லை. மிதமான சூட்டுடன் காணப்படும் தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் இருக்கின்றன.

குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை. நீர்ச்சத்தும் தாய்ப்பாலில் இருக்கிறது. ‘முன்னம்பால்’, ‘பின்னம்பால்’ என்பார்கள். அதாவது குழந்தை பால் அருந்தும் முதல் ஐந்து நிமிடங்கள் வரை நீர்ச்சத்து நிறைந்த பால் சுரக்கும். அடுத்த ஐந்து நிமிடங்கள் சுரக்கும் பாலில் புரதச்சத்து, கொழுப்பு மற்றும் தாதுச் சத்துகள் நிறைந்திருக்கும். ஆகவே எல்லா ஊட்டங்களும் அதில் இருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

குழந்தை நன்றாகச் சப்பி சப்பி பால் குடித்தால்தான் பால் சுரக்கும். பொதுவாக குழந்தை பிறந்த ஆரம்ப நாள்களில் பால் சுரக்கும் அளவு குறைவாகத்தான் இருக்கும். அப்போது அந்தத் தாயைச் சுற்றியிருக்கும் பெண்களும் வயதில் மூத்த பெண்களும் அவருக்கு அதை எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு சிலர் ‘எங்களுக்கெல்லாம் இப்படி இருந்ததில்லை. பால் பீய்ச்சி அடிக்கும்’ என்று எதையாவது சொல்லி அந்தப் பெண்ணின் மனதை நோகச் செய்துவிடுவார்கள். கூச்சம், அனுபவமின்மை காரணமாக சில பெண்களுக்குப் பால் சுரப்பதில் தாமதம் ஏற்படலாம். ஆனால் சொல்லிச் சொல்லி அதை ஒரு குறையாக்கிவிடுவது சரியல்ல.

ஒருவருக்குக் குறைமாதத்தில் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையின் தேவைக்கு ஏற்ப போதுமான சத்துகளுடன் தாய்ப்பால் நிறைந்திருக்கும். அது இயற்கையாகவே தாயின் உடலில் சுரந்துவிடும். இதேபோல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான அளவு பால் சுரக்கும். இது இயற்கையின் நியதி. ஆனால் சிலர் குழந்தைக்கு பால் போதவில்லை என்று ஆட்டுப்பாலையும் மாட்டுப்பாலையும் கொடுத்துவிடுவார்கள். இப்படிக் கொடுப்பதால் குழந்தையின் பசி தீர்ந்துவிடும். மீண்டும் தாயிடம் பால் குடிக்காது. தாய்ப்பாலைப்போல சப்பிச் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லாததால் குழந்தை மாட்டுப்பாலை அருந்துவதை விரும்பத் தொடங்குகிறது.

தாய்ப்பால்

குழந்தையை நன்றாக அணைத்து, மார்பின் நுனிக்காம்பில் மட்டும் வாயை வைக்காமல் அதைச் சுற்றியுள்ள கருமையான பகுதியையும் கவ்விப் பிடிக்கும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் ஹார்மோன் தூண்டுதல் ஏற்பட்டு பால் நன்றாகச் சுரக்கும். மேலும் தொடர்ந்து ஒரே மார்பில் பால் அருந்தச் செய்யாமல், மாற்றி மாற்றிக் கொடுக்க வேண்டும். பால் கொடுத்ததும், தோளில் போட்டு முதுகில் தடவிக் கொடுக்க வேண்டும். இதனால் வாய்வு வெளியேறும். வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவும். மத்திய அரசு சைல்டுகேர் விடுமுறையாக இரண்டு ஆண்டுகள் கொடுக்கிறது. குழந்தையின் 18 வயது வரைகூட அதைப் பராமரிப்பதற்காக விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்’’ என்கிறார் ஸ்ரீகலா பிரசாத்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!