மலச்சிக்கலைப் போக்க உதவுவது எது? நாட்டு வாழைப்பழமா, வீரிய ஒட்டுரகப் பழமா? - மருத்துவம் விவரிக்கும் உண்மை! | Effects of hybrid banana's

வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (05/01/2018)

கடைசி தொடர்பு:20:06 (05/01/2018)

மலச்சிக்கலைப் போக்க உதவுவது எது? நாட்டு வாழைப்பழமா, வீரிய ஒட்டுரகப் பழமா? - மருத்துவம் விவரிக்கும் உண்மை!

லச்சிக்கல்... அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்’ என்று பொதுவாகச் சொல்வதுண்டு. ‘உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமன்றி பல மனப் பிரச்னைகளுக்கும் மலச்சிக்கல்தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே சரிசெய்யாமல்விட்டால் அது பல்வேறு நோய்களுக்கு வாசலாக அமைந்துவிடும். மாறிவிட்ட உணவுப் பழக்கவழக்கங்களாலும், அவசர வாழ்க்கை முறையாலும்தான் மலச்சிக்கல் உண்டாகிறது.

வாழைப்பழம்

தண்ணீர் குறைவாகக் குடிப்பதாலும், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதாலும் மலச்சிக்கல் உண்டாகிறது. நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் மலம் மிகவும் இறுக்கமாக உருவாகும். அதனாலும் மலச்சிக்கல் ஏற்படும். அசைவ உணவுகளில் நார்ச்சத்து இல்லை. அதனால்தான் அசைவ உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்புகள் உண்டாகின்றன.சித்த மருத்துவர் வேலாயுதம்

நார்ச்சத்துள்ள பச்சைக் காய்கறிகள், கீரைகள், வாழைத்தண்டு, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், மாம்பழம், பேரீச்சை, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சைப் பருப்புகள் போன்றவை மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணம் தருபவை.

அன்றிலிருந்து இன்றுவரை மலம் சரியாகக் கழிக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் பரிந்துரைப்பது வாழைப்பழத்தைத்தான். பலரும் இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

“வாழைப்பழம் மலச்சிக்கலைச் சரிசெய்யும் என்பது உண்மைதான். ஆனால் இப்போது விற்கப்படும் விதையில்லாத வீரிய ஒட்டுரக வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் எந்தப் புண்ணியமும் இல்லை. அவை வயிறை நிரப்ப மட்டுமே பயன்படும்’’ என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

இதுகுறித்து விரிவாக விளக்குகிறார்... “வாழைப்பழத்தில் வீரிய ஒட்டுரக வகைகள் இருக்கின்றன. மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து மிகவும் அவசியம். அவை நாட்டு வாழைப்பழங்களில் இருக்கின்றன. நாட்டு வாழைப்பழத்திலுள்ள விதைகள் அதிக நீர்ச்சத்தை உடலுக்கு அளிக்கின்றன. ஆனால், வீரிய ஒட்டுரகங்களான, பச்சை நிற வாழைப்பழத்திலோ, மஞ்சள் நிற வாழைப்பங்களிலோ நார்ச்சத்து சுத்தமாக இல்லை. மேலும் இதில் ஃப்ரக்டோஸ் (Fructose) அதிகமாக இல்லை. குளூக்கோஸ்தான் அதிகமாக இருக்கிறது. இது சர்க்கரைநோயை அதிகப்படுத்தும். மலச்சிக்கலைத் தீர்ப்பதற்கு பதிலாக வயிற்று மந்தத்தை ஏற்படுத்திவிடும். இதுவே நாளடைவில் மலச்சிக்கலை உருவாக்கிவிடும்.

மலச்சிக்கல்

அதுமட்டுமல்ல, பொட்டாசியம் நாட்டு வாழைப்பழங்களில் அதிகம். அது இதயத்துக்கும் நன்மை அளிக்கும். ஆனால், வீரிய ஒட்டுரக வாழைப்பழத்தில் அவை சுத்தமாக இல்லை. வயிற்றை நிரப்புவதற்கான ஓர் உணவுப் பொருளாக மட்டுமே இந்த வகை மருத்துவர் சிவராமக் கண்ணன்வாழைப்பழங்கள் இருக்கின்றன.

வாழைப்பழத்தில் பூவம்பழம், ரஸ்தாலி, மலை வாழைப்பழம், கற்பூரவாழை, செவ்வாழை போன்ற நார்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களைத்தான் சாப்பிட வேண்டும். அவைதான் மலத்தை இளக்கி மலத்தைச் சீராகப் போகவைக்கும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மூன்று வேளையும் சாப்பிடலாம். காலை நேரத்தில் சாப்பிடுவது அதிக நன்மையைத் தரும்.

விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் லாப நோக்கோடு உடலுக்குக் கேடுவிளைவிக்கும் வாழைப்பழங்களை விற்பனை செய்துவருகிறார்கள். அவற்றை புறம்தள்ளிவிட்டு நம்மூர் நாட்டுப்பழங்களை மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு நல்லது" என்கிறார் மருத்துவர் வேலாயுதம்.

வாழைப்பழம்

இது குறித்து பொது நல மருத்துவர் சிவராமக் கண்ணனிடம் பேசினோம்... “நாட்டுப்பழங்கள் மட்டுமல்ல... வீரிய ஒட்டுரக பழங்களாக இருந்தாலும் அவற்றுக்கும் மலச்சிக்கலைச் சரிசெய்யும் ஆற்றல் உண்டு. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. எந்த வாழைப்பழமாக இருந்தாலும் அது நல்லதுதான்” என்கிறார் மருத்துவர் சிவராமக் கண்ணன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்