Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``நிறைய வாசிங்க... கொஞ்சம் யோசிங்க... ஸ்ட்ரெஸ் தானா போயிடும்!” - பட்டிமன்றம் ராஜா #LetsRelieveStress

ட்டிமன்றம் ராஜா வங்கி அதிகாரி; பட்டி மன்ற நடுவர்; பேச்சாளர். எளிய வாழ்வியல் உதாரணங்களாலும், சம்பவங்களாலும் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்கவைப்பவர். பேச்சாளராக பட்டிமன்றங்களில் இவரது அணி, பெரும்பாலும் தோல்வியைத் தழுவும். ஆனாலும் இவரது வாதத் திறமைதான் அந்த ஒட்டுமொத்த பட்டிமன்றத்தையே சுவாரஸ்யமானதாக மாற்றியிருக்கும். ராஜா ஸ்ட்ரெஸ் பற்றியும் அதிலிருந்து தான் விடுபட மேற்கொள்ளும் விதம் பற்றியும் விவரிக்கிறார் இங்கே... 

பட்டிமன்றம் ராஜா

“மனஅழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் என்பது இன்றைக்கு எல்லோராலும் உணரப்படுகிற, பேசப்படுகிற விஷயமாக இருக்கு. 'நான்  இன்னிக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் அவுட்டாக இருக்கேன். ஒரு மாதிரி மூட் அவுட் ஆகிடுச்சு. தலைவலி வந்துடுச்சு'னு எல்லாருமே பேசுறாங்க. 

எல்லாருமேன்னா..., வயதானவங்க, ஏதோ ஒரு வேலைக்குப்போறவங்கனு இல்லை... சின்னப் பசங்க வரைக்கும் இந்தப் பிரச்னை காலையிலேயே ஆரம்பிச்சிடுது. `ஸ்கூலுக்குப் போகணும்னாலே ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கு’, `அந்த கெமிஸ்ட்ரி வாத்தியாரைப் பார்த்தாலே பயமா இருக்கு.’ - இப்படி கல்லூரி மாணவர்கள்ல இருந்து பள்ளிக்கூடக் குழந்தைங்க வரைக்கும் பேசுறாங்க.

நான், சாதாரணமான ஒரு கிராமத்துல வளர்ந்தவன். வெறும் மெழுகுவத்தியும் அரிக்கேன் விளக்கும்தான் படிக்கிறதுக்கான வெளிச்சத்தை எனக்குத் தந்தது. பொழுதுபோக்கு சாதனம்னு எதுவும் கிடையாது.

பட்டிமன்றம் ராஜா

எப்போ ஸ்கூலைவிட்டு வர்றோமோ, அப்போல்லாம் எங்களுக்கு விளையாட்டுதான். ஓய்வு நேரம்ங்கிறது விளையாடுறதுக்காக அர்ப்பணிக்கப்பட்ட காலம் அது. எப்பல்லாம் ஸ்கூலைவிட்டு வர்றோமோ, காலேஜைவிட்டு வர்றோமோ, அப்பல்லாம் பக்கத்துல இருக்கிற கிரவுண்டுல கபடி விளையாடுறது, தென்னை மட்டையைவெச்சு கிரிக்கெட் விளையாடுறதுனு இருப்போம். 

வெளி உலகம் என்பது, எங்களுக்கு எல்லா வகையான ரிலீஃபையும் கொடுத்துச்சு. நண்பர்களுடன் போடுற சண்டைகூட ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அங்கே தெருவுல எங்கேயோ ஒரு கார், லாரினு ஒரு வாகனம் போகும். அதை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்போம். 

எங்கேயோ வானத்துல ஒரு புள்ளி மாதிரி விமானம் போகும். அதைத் துரத்திக்கிட்டே ஓடுவோம். மாலை நேரத்துல சீக்கிரமே வந்துவிடுகிற சந்திரனைப் பார்க்கறது இல்லைன்னா சூரியன் மறைகிற காட்சிகளைப் பார்க்குறது, கூடு நோக்கி பறந்து வரும் வண்ணமயமான பறவைகளைப் பார்க்குறது... இதெல்லாம் எங்களுக்குச் சாதாரண நிகழ்வுகள். 

இன்னிக்கு விடிவானத்தைப் பார்க்கிற பிள்ளைகளே இல்லாத உலகம். அப்போல்லாம் நாங்க விவசாயம் முடியுற அறுவடைக் காலங்களில் வயல்வெளிக்குப் போய், அவங்களோட நிப்போம். வைக்கோலை அள்ளிப்போட்டு விளையாடுவோம். 

பட்டிமன்றம் ராஜா

இதெல்லாத்தையுமே பயங்கர இன்வால்வ்மென்ட்டோட செய்வோம். அதனால ஸ்ட்ரெஸ்ங்கிற வார்த்தையை நாங்க கேட்டதே இல்லை. அது எப்படி இருக்கும்னு பார்த்ததில்ல, உணர்ந்ததில்லை. ஆனா, இன்னைக்கு ரெண்டரை வயசுகூட ஆகாத குழந்தையிடம் தங்களுடைய கனவுகளை விதைக்கிறார்கள் பெற்றோர். ஒரு சின்ன உலகத்துல தங்களைத் திணித்துக்கொள்ளவெச்சது இந்த வாழ்க்கைமுறைதான்.
அப்புறம் இந்த மொபைல் இருக்கே... இது இல்லாத காலத்துல நாம இன்னும் கொஞ்சம் ஃப்ரீயாக இருந்திருப்போம்னு நினைக்கிறேன்.

எல்லாரும் யோசிச்சுப் பார்க்கணும். இது கைக்கு வந்தவுடனேயே உலகத்தில் நாடுகளுக்கு இடையே, நகரங்களுக்கு இடையே இருக்கும் தூரங்கள் குறைஞ்சிருக்கு. ஆனா, நமக்குள் இருக்கும் ஸ்ட்ரெஸ் அதிகமாகியிருக்கு. எந்த நேரமும் முகத்தை 'உம்'முனுவெச்சிக்கிட்டு, மனத்தை இறுக்கமா வெச்சிருக்கிறவங்க கூட இருந்தாலே நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகிடும்.

நம்ம வீடுகள்லயே ஒருத்தருக்கொருத்தர் உரையாடுவது குறைஞ்சு போயிடுச்சு. வீட்டுக்குள்ளேயே இருக்கும் குடும்ப உறவுகளிடம் கலகலப்பு குறைஞ்சதுதான் நமக்கு ஸ்ட்ரெஸ் வந்ததுக்கு  முதல் காரணம்.  வாய்விட்டுச் சிரிச்சா ஸ்ட்ரெஸ் போயிடும். இல்லை, அடுத்தவங்களைச் சிரிக்கவெச்சா போயிடும். மத்தவங்களை சிரிக்கவெக்கிறது மகிழ்ச்சியான விஷயம். 

ஸ்ட்ரெஸ் எதனால வருது? எல்லாத்துக்கும் அநாவசியமா ஆசைப்படுறதுனால வரும். எல்லாத்துக்கும் அநாவசியமாக் கோபப்படுறதுனால வரும்.  `நாம ஒரு சமூகத்துல கூட்டா வாழுறோம், எல்லாரையும் அனுசரிச்சுப் போவோம்’கிற இங்கிதம் தெரியாத மனிதர்களால் வரும்.

பட்டிமன்றம் ராஜா

பசங்களை அடிக்கிறது, அந்தக் காலத்துல எல்லா இடங்களிலும் வாடிக்கை. அடி வாங்காம அப்போ யாருமே வளர்ந்திருக்க முடியாது. அப்பா அடிப்பார். வாத்தியார் அடிப்பார். அம்மா கண்டிப்பாங்க. ஏன், கல்லூரிகளில்கூட லெக்சரர் அடிக்கலைன்னாலும், கோபத்துல கையை ஓங்குவார். ஒரு கண்டிப்பான சமூகத்துல நாங்க வளர்ந்து வந்ததால,  எங்களுக்குத் தோல்விகளும் அவமானங்களும் ரொம்ப பெரிசாகத் தெரியலை. 

'என்னடா, இன்னிக்கு அப்பாதானே அடிச்சார், வாத்தியார்தானே திட்டினாரு, அம்மாதானே தப்பாப் பேசினாங்க... பேசிட்டுப் போகட்டும்'னு விட்டுடுவோம். ஆனா, இன்னிக்கு குழந்தைங்களுக்கு வாத்தியார் சொல்ற ஒரு வார்த்தை... அம்மா சொல்ற ஒரு மறுப்பு... ஒரு பொருளைக் கேட்டு அது `கிடையாது’னு அப்பா சொல்லிட்டா... ஏதோ வாழ்க்கையில் மிகப் பெரிய சோகம் நடந்த மாதிரி பையன் ஃபீல் பண்ண ஆரம்பிச்சிடுறான். 

வாத்தியார், 'உனக்கு அறிவிருக்கா?'னு கேட்டா, 'தற்கொலை செய்துகொள்ளப் போறேன்'னு சீட்டு எழுதிவெச்சிட்டு தற்கொலை பண்ணிக்கிறான். இன்றையப் பிள்ளைகளுக்கு சின்ன வயசுலேயே தோல்விகளையும் அவமானங்களையும் எதிர்கொள்ளக் கற்றுத்தரத் தவறிவிட்டோம். எந்தப் பிள்ளைகள் இவற்றையெல்லாம் தாங்கி வளர்கிறார்களோ, அவர்களாலதான் பல மனிதர்களுக்கு அறிமுகமானவர்களாகவும் வெற்றியாளர்களாகவும் ஓரளவுக்காவது வர முடியுது. 

ஒரு சின்னத் தோல்வியோ, அவமானமோ வாழ்க்கையின் முடிவு அல்ல. அது ஒரு நீண்ட பயணம். தோல்விகள், அவமானங்கள் இதெல்லாம் இருக்கத்தான்யா செய்யும். இதோடு நாம எப்போ வாழ கற்றுக்கொள்கிறோமோ அப்போதான், அவர்கள் மேலே மேலே போக முடியும்.


இன்னிக்கு உள்ள பிள்ளைகளுக்கு ஸ்ட்ரெஸுக்கான இன்னொரு முக்கிய காரணம், அதிகப்படியான சோம்பேறித்தனம். 
வீட்டுல எல்லா வசதியும் இருக்கு. இரவு தூங்குறதுக்கு நள்ளிரவு 12 மணி ஆகுது. நாங்கல்லாம் அந்தக் காலத்துல ராத்திரி வந்துட்டாலே, ஆறரை, ஏழு மணிக்கெல்லாம் ஜைனத் துறவிகள் மாதிரி சாப்பிட ஆரம்பிச்சிடுவோம்.  

இரவு எட்டு மணி எங்களுக்கு நடுச்சாமம் மாதிரி. அப்போ ரேடியோ, டி.வி-யெல்லாம் கிடையாது. இரவு நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தோம். அதனால காலையில ஸ்ட்ரெஸ் இருக்காது. சீக்கிரம் தூங்கி, காலையில் 6 மணிக்கு எழுந்திரிக்கிறவங்க ஸ்ட்ரெஸ்ஸைக் கன்ட்ரோல்லவெச்சிருப்பாங்க.

தன் மனசுக்கு எது பிடிக்குதோ... அது ஓர் ஓவியம் வரையறதா இருக்கலாம், பாட்டுப் பாடுறதாக இருக்கலாம். அதுக்குக் கொஞ்ச நேரத்தை, வாரத்தில் ஒரு முறையாவது செலவிட்டால், நல்ல ரிலீஃப் கிடைக்கும். 

வாழ்க்கை ரொம்ப இனிமையானது. ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு தருகிற வரம். இந்த நாளை இனிமையானதாக ஆக்குவோம்.  நன்மை செய்கிறவர்களாகச் சுற்றித் திரிவோம். இறைவனை கொஞ்ச நேரம் தியானிப்போம். 
நமக்கு அன்பானவர்களுடன் கொஞ்சம் நேரம் செலவிட்டால், நிச்சயமாக ஸ்ட்ரெஸ் நம்மை பாதிக்காது.

இளைஞர்களே! நீங்களே இப்படி ஸ்ட்ரெஸ்ஃபுல்லாக இருந்தால் எப்படி? எதிர்கால இந்தியா என்னவாகும்? நண்பர்களுடன் சந்தோஷமாகப் பழகுங்கள். நிறைய வாசிங்க. கொஞ்சம் யோசிங்க. ஸ்டெரெஸ்ங்கிறது தானாகவே போயிடும்'' எனக் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement