Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`இந்த நிமிஷம், இந்த நொடி நிஜம்னு நினைச்சா மனஅழுத்தம் இல்லை’ - சமுத்திரக்கனி #LetsReliefStress

சமுத்திரக்கனி... இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு இவர் தலைமகன். இவரது படங்கள், இவர் ஏற்கும் கதாபாத்திரங்கள் பல யதார்த்த சினிமாவின் புதிய பரிமாணங்கள். இளைஞர்கள் பலருக்கு இவர் நல்லதொரு இன்ஸ்பிரேஷன். சமூகப் பிரச்னைகளிலும் அவ்வப்போது தடம்பதிப்பவர். தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் தரும் நிகழ்வுகளையும் அதிலிருந்துவிடுபட்டதையும் அத்தனை இயல்பாகச் சொல்கிறார்.

''எனக்கொரு நண்பன் உண்டு. அவன் பெயர் குரு. அப்போ அவனும் என்னை மாதிரியே சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டர். அவன் எப்போ பார்த்தாலும். `டேய் , மனசு ஒரு மாதிரியா இருக்கு. கையெல்லாம் நடுக்கமா இருக்குடா. பூமியே பிளக்குற மாதிரி இருக்கு. 'ரெண்டாயிரத்துல உலகம் அழிஞ்சிடும்’னு சொல்றாங்கடானு என்று சொல்லுவான். நான், `என்னடா, இந்த மாதிரியே பேசிக்கிட்டு இருக்கே... இப்படியெல்லாம் பேசதாடா’னு சொல்லுவேன்.

சமுத்திரக்கனி
 
ஒருநாள் எல்லாரும் டீ குடிச்சிக்கிட்டு இருந்தப்போ, சட்டுனு எழுந்துபோய், ரோட்ல நின்னு கையை கேமராவுல ஆங்கிள் பார்க்கிற மாதிரி ஷாட்வைக்க ஆரம்பிச்சிட்டான். எனக்கு உடனே புரிஞ்சுப் போச்சு. மனஅழுத்தத்துல அவனுக்கு புத்தி பேதலிச்சிடுச்சுனு தெரியவந்துச்சு.

அந்த நொடி... அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்பக் கவலையாகவும் பயமாகவும் இருந்துச்சு. ஏன்னா, நம்மகூடவே இருந்த நண்பன் இப்படி ஆயிட்டானேனு கவலை. நாமும் இதைக் கடந்துதான் வரணும்னு பயம் வந்துடுச்சு. அந்த பயம் எனக்கு ரொம்ப நாள் இருந்துச்சு. ராத்தியில படுத்தா சில நாள் தூக்கமே வராது. படுத்தா அப்படியே பில்டிங் கீழே போற மாதிரி இருக்கும்.

திரும்ப அதுல இருந்து வெளியே வர்றதுக்கு நான் நிறைய... நிறைய நிறையப் படிக்க ஆரம்பிச்சேன். நண்பர்களோட கூட்டத்துல சேர்ந்துக்குவேன். அங்கே நிறைய பேசுறது, நிறைய சிரிக்குறது, நிறைய பேசுறதுனா கொஞ்சம் நஞ்சம் இல்லை. விடிய விடியப் பேசுவோம். அப்படித்தான் நான் அந்த பாதிப்புல இருந்து மீண்டு வந்தேன்.

 

சமுத்திரக்கனி

அதற்குப் பிறகு நான் மாட்டினது 'நிறைஞ்ச மனசு' படத்துல. நான் இயக்கிய 'நிறைஞ்ச மனசு' படத் தோல்வியை என்னால தாங்கிக்கவே முடியலை. என் நண்பனுக்கு வந்த அதே பிரச்னை எனக்கும் வந்துச்சு. அதாவது நாம தோத்துட்டோம். நாம இனி அவ்வளவுதான். இதோட நம்ம கரியரே முடிஞ்சுதுனு உள்ளுக்குள்ள ஒரு கேரக்டர் பேசிக்கிட்டே இருக்கும். அதுதான் என்னை ஒரு மாதிரி பயமுறுத்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா கையெல்லாம் நடுங்க ஆரம்பிக்கும்.

ரூமுக்கு வந்து தனியா படுத்தோம்னா என்னமோ மாதிரி இருக்கும். தூங்கலாம்னா தூக்கமே வராது. உள்ளுக்குள்ள இருக்கிற எலும்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்கும். பில்டிங் அப்படியே பிளந்து விழுந்துடுற மாதிரி தலை சுற்றும்.

`சரி, இதுக்கு மேல இங்க இருந்தா சரிப்பட்டு வராது’னு பேக்கை தூக்கிக்கிட்டு மதுரைக்குக் கிளம்பிப் போயிட்டேன். அங்கே 'பருத்தி வீரன்' ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. நேரா அமீர் அண்ணன்கிட்ட போய், 'அண்ணே, நான் இதுல ஒர்க் பண்றேனே...’னு கேட்டேன்.

'ஏன் நீங்கதான் ரெண்டு படம் டைரக்ட் பண்ணி இருக்கீங்களே... அடுத்த படம் பண்ண ட்ரை பண்ணுங்களேன்'னு சொன்னார். 'இல்லண்ணே, எனக்கு பயமா இருக்கு. எதைப் பார்த்தாலும் பயமா இருக்கு' அப்படினு பதற்றத்துல சொன்னேன். 'சரி ஒர்க் பண்ணு’னு சொன்னார். 'பருத்தி வீரன்' படத்துல ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 மணி நேரம் வேலை பார்த்தேன். என்னை மறந்து தூங்கினால்தான் உண்டு. அதனால என் நண்பன், என்னைப் பல டாக்டர்கள்கிட்ட கூட்டிக்கிட்டுப் போவான். மனநல மருத்துவர்கிட்டகூட அழைச்சிக்கிட்டுப் போய் என்னைக் காண்பிச்சான்.

நான் திரும்பத் திரும்ப என் நண்பன் குரு மாதிரி ஆயிடுவோமோனு நெனைச்சுக்குவேன். அதுக்கப்புறம் வேலை வேலைனு பார்க்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட ஆறு மாசம் வேலை பார்த்ததுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அந்த மனஅழுத்தத்துல இருந்து வெளியில வந்தேன். ஒரு விஷயம் பிரச்னை பண்ணுச்சுனா, அதையே போட்டு நோண்டிக்கிட்டு இருக்காம, அதுக்குப் பக்கத்துலயே இணையாக இன்னொரு வேலை இருக்கும். அதைப் பிடிச்சு எடுத்துக்கிட்டுப்போய் அதுல நாம ஃபுல் அண்ட் ஃபுல் என்கேஜ் ஆயிட்டோம்னா இந்தப் பிரச்னையிலேருந்து ஈஸியா வெளியில வந்துடலாம்.

இந்தப் பிரச்னை இவங்களுக்குத்தான் வரும் அவங்களுக்குத்தான் வரும்கிறது இல்லை. நல்லா வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறவங்களுக்குக்கூட வரலாம். இது யாருக்கு வராதுன்னா, ஒரே ஒரு ஆளுக்கு வராது. நல்லபடியா விவசாயம் பண்ணிக்கிட்டு, தேவைக்கு அதிகமா ஆசைப்படாம, தேவைக்கேற்ப செலவு செஞ்சுக்கிட்டு வாழுறவங்களுக்கு வராதுனு நினைக்கிறேன்.

இப்போ கிராமங்கள்ல பார்த்தோம்னா பல பேர் முகத்துல சந்தோஷம் இருக்கு. அவங்க யாருக்கும் பெரிய கனவுகளே கிடையாது. அதனால ஏமாற்றங்களே இல்லை. பெரிய கனவுகளோட இருக்கிறவங்களுக்குத்தான் அது நிறைவேறாதபோது கவலை வரும். ஏமாற்றம் வரும். தன்னைக் குறித்த கேள்வி வரும்.

சமுத்திரக்கனி
 

நாளைக்கு என்ன, நாளைக்கு என்ன?’னு ஓடாம இந்த நிமிஷம்... இந்த நொடி... இது நிஜம்னு நினைக்கணும். இதைச் செய்றதுதான் சந்தோஷம்னு இருக்கணும். இதை மிஸ் பண்ணிடக்கூடாதேனு இருந்தோம்னா மனஅழுத்தப் பிரச்னை நமக்கு வரவே வராது. இப்போ நான் அப்படித்தான் மாறிட்டேன். இப்போ எது முக்கியமோ அதை மட்டும்தான் செய்யறேன். நாளையைப் பற்றி... எதிர்காலம் பற்றி எனக்குக் கவலை கிடையாது.

அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தப்போ ஒரு நாள் நடந்துபோய்கிட்டே இருந்தேன். நாம இனி அவ்வளவுதானா, சினிமா இனி நமக்கு கிடைக்காதா? அப்படினு நினைச்சுக்கிட்டே போனேன். சரி, இதுக்கு ஒரு நாள் குறிப்போம். அந்தத் தேதிக்குள்ள நம்மால சாதிக்க முடியலைனா, நாம தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துடுவோம்னு நினைச்சேன். அந்தத் தேதியும் கொஞ்சம் கொஞ்சமா நெருங்க ஆரம்பிச்சுது.

அப்போதான் எனக்குள்ள இருந்து ஒரு கேள்வி எழுந்துச்சு. `நாம ஏன் சாகணும்’னு நினைச்சேன். அந்த எண்ணம் வலுப்பெற ஆரம்பிச்சுது. அப்போதான் ஒண்ணு புரிஞ்சுது. நமக்குள்ள பாசிட்டிவான எண்ணமும் இருக்கு. எதிர்மறையான எண்ணங்களும் இருக்கு. எதை நாம தீனி போட்டு வளர்க்கிறோமோ அதோட கட்டுப்பாட்டுக்கு நம்ம மனம் போக ஆரம்பிச்சுடும்னு தெரிஞ்சுது.

நல்ல எண்ணங்களால் தீய எண்ணங்களை வெல்ல முடிஞ்சுதுனா நமக்கு மனஅழுத்தம் வரவே வராது. தீய எண்ணங்கள், நம்ம நல்ல எண்ணங்களை வென்றுவிட்டால், நமக்கு மனஅழுத்தம் வரும். இதை எப்படிக் கட்டுக்குள் வெச்சிக்கிறோம்கிறது நம்ம கையிலதான் இருக்கு.

`பருத்திவீரன்’ முடிஞ்சதுக்கு அப்புறமும் எனக்கு சில பல தோல்விகள். நமக்குப் பிடிச்சவங்களைப் போய்ப் பார்த்தோம்னா நமக்கு மனஅழுத்தம் போய்விடும். ரொம்ப மனசு சரில்லைனா கே.பி. சாரைப் பார்க்கப் போயிடுவேன்.

என்னைப் பார்த்துமே, 'என்னடா சார்ஜ் குறைஞ்சிடுச்சா?'னு கேட்பார். 'இல்லை சார். நிறையக் கேள்விகள் வருது. ஆனா பதில் இல்லை'னு சொல்வேன். அவர் அவருடைய வெற்றிகள், தோல்விகள் பற்றிச் சொல்லுவார். அவர்கிட்டே போய் பேசிக்கிட்டே இருப்பேன். ஒரு நாள் முழுவதும் கூட இருப்பேன். ஷூட்டிங்ல இருந்தார்னா, அங்கேயே நான் போய் ஸ்பாட்லயே அசிஸ்டென்ட்டா வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.

எனக்கு யார்கிட்டேயிருந்து சார்ஜ் கிடைக்குதோ, அவங்களைத் தேடிப்போய், அவங்ககூட இருப்பேன். அப்படி இருந்தோம்னா நம்ம மனஅழுத்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காணலாம்.

இப்போ என்னன்னா, என்கிட்டே வந்து இந்தப் பிரச்னைக்கு நிறைய பேர் தீர்வு கேட்கிறாங்க. வயது ஆக ஆக நம்முடைய தளங்கள், நினைவுகள், அளவுகோல் இதெல்லாம் மாறுது. இப்போ நான் நிறையப் பேருக்குச் சொல்றது... 'டேய் இதையெல்லாம்விட பெரிய பிரச்னை இருக்கு. இந்த ஒரு விஷயத்தையே நினைச்சிக்கிட்டு இருக்காதே. அதைக் கடந்து வாங்க'னு சொல்றேன்.

இன்னொரு விஷயம், மனஅழுத்தத்துலருந்து வெளிய வரணும்னா மன்னிக்கப் பழகிக்கணும். ஒருத்தர் நம் மனசைக் காயப்படுத்திட்டாங்கன்னாக்கூட பரவாயில்லைனு மன்னிச்சிடுங்க. மன்னிப்பைவிட பெரிய தண்டனை எதுவும் கிடையாது.

எனக்கு ஒருத்தன் கெடுதல் பண்றான்னு தெரிஞ்சாக்கூட நான் டென்ஷன் ஆக மாட்டேன். அவன் கிட்டேயே, 'எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை. உனக்குத்தான் துன்பத்தைத் தேடிக்கிறே. நான் இப்படியேதான் இருப்பேன். என்கிட்ட வர உனக்குத்தான் மனசாட்சி இடம் கொடுக்காது. போயிட்டுவா'னு சொல்லிடுவேன்.

மன்னிக்கிறதுங்கிறது அற்புதமான விஷயம். இந்த மன்னிக்கும் குணம் இல்லாததால்தான் நிறைய கொலைகள், கொள்ளைகள், வன்முறைகள். மனசுல சேருற குப்பைகள்தான் நம்மை எங்கெங்கோ கொண்டுபோய் நமக்குள் மன அழுத்தத்தை உண்டு பண்ணுது.

மன்னிக்கப் பழகினோம்னா நமக்குள் ஒரு இறைசக்தி வரும். அது நம்மை எங்கேயோ நாம் நினைத்துப் பார்க்காத ஓர் உயரத்துக்குக் கொண்டு போய்விடும்'' எனக்கூறி விடை கொடுத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ