ஜெயலலிதா மரணம்... அதென்ன கிளினிக்கல் டெத்... பயாலஜிக்கல் டெத்...

டிசம்பர் நான்காம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்” என்று, சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திடீரென, தான் பேசியதை மறுத்த திவாகரன், “மருத்துவத்துறையில் கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் என இரண்டு வகை  உண்டு. டிசம்பர் 4 - ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அது கிளினிக்கல் டெத். கருவிகள் உதவியோடு பயாலஜிக்கல் டெத் ஆகிவிடாமல் காப்பதற்காக மருத்துவர்கள் முயற்சி செய்தனர். அப்போலோ மருத்துவர்களிடமிருந்துதான் இதைத் தெரிந்து கொண்டேன். கிளினிக்கல் டெத் ஆனவர்கள் 24 மணி நேரத்தில் பயாலஜிக்கல் டெத் ஆகி விடுவார்கள். அதைத் தடுக்க முடியாது. அதனால், டிசம்பர் 5 - ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நரம்பியல் மருத்துவர்கள் வந்து ஜெயலலிதாவின் மரணத்தை உறுதி செய்தார்கள்." என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா பற்றி திவாகரன்

டிசம்பர் நான்காம் தேதியே ஜெயலலிதாவுக்கு இதயத்துடிப்பு நின்று போய்விட்டது. இதயத்தின் செயல்பாடுகளை மீட்டெடுப்பதற்காக சிகிச்சைகள் (Cardiopulmonary resuscitation-CPR) மேற்கொள்ளப்பட்டன. அதனால் எந்தப் பலனும் இல்லாமல் போகவே, எக்மோ (ECMO) கருவியுடன் ரத்த நாளங்கள் நேரடியாக இணைக்கப்பட்டன. 24 மணி நேரத்துக்கு அதிகமாக முயற்சி செய்தும் எந்தப் பலனும் இல்லாமல் போகவே டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

அதென்ன கிளினிக்கல் டெத்..? பயாலஜிக்கல் டெத்..?  பொதுநல மருத்துவர் ஒருவரிடம் பேசினோம். 

“கிளினிக்கல் டெத் என்று தனியாக ஒன்று கிடையாது. ‘கிளினிக்கல்  டெத்’ என்றாலே அது மரணத்தைத்தான் குறிக்கும். அதற்குப் பிறகு எந்த முயற்சி எடுத்தும் பயனில்லை. அதன்படி பார்த்தால் ஜெயலலிதாக நான்காம் தேதியே இறந்திருக்கக் கூடும். அதன் பிறகு ஸ்பைக் ஜெனரேட்டர்  போன்ற கருவிகளால் செய்த முயற்சிகள் என்பது பாதுகாப்பு கருதி, செய்தியைத் தாமதப்படுத்துவதற்காக இருந்திருக்கலாம்” என்றார்.

இறுதியாக ஜெயலலிதா மரணத்தை நரம்பியல் மருத்துவர்கள் வந்து பரிசோத்து அறிவித்ததாக திவாகரன் தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா மூளைச்சாவடைந்திருந்தாரா?

இதுகுறித்து நரம்பியல் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம் "மூளையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் நின்று விடுவதுதான் மூளைச்சாவு. மூளைச்சாவடைந்த ஒருவர் மீண்டு வரவே முடியாது. அவரின் மரணம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால், இதயத் துடிப்பு இருக்கும். உடலில் உள்ள பல உறுப்புக்களின்  செயல்பாடுகள் இருக்கும். 

மூளைச்சாவடைந்த ஒருவர் உண்மையிலேயே மூளைச்சாவடைந்திருக்கிறார் இனிமேல் அவரால் மீண்டு வர முடியாது என்பதையும், நரம்பியல் மருத்துவர்கள் பரிசோதித்துதான் முடிவு செய்ய வேண்டும். 

மூளைச்சாவடைந்த ஒருவருக்கு ஆப்னியா பரிசோதனை செய்யப்படும். செயற்கை சுவாசம் பொருத்தியிருக்கும்போது அவரின் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடுகளின் அளவுகள் கணக்கிடப்படும். பின்னர் செயற்கை சுவாசத்தை நிறுத்தி அதே சோதனைகள் செய்யப்படும். மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா என்று பரிசோதிக்கப்படும். அப்போது மூச்சு விட முடியவில்லை என்றால் உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்படும். 
 சுத்தமாக மூச்சு விட முடியாத நிலையில், மீண்டும் ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவு பரிசோதிக்கப்படும். அப்போது பாசிட்டிவ் என்று வந்தால் மூளைச்சாவு உறுதி செய்யப்படும். ஆனால் அறிவிக்கப்படாது. 

இதே சோதனை மீண்டும் ஆறுமணி நேரம் கழித்து செய்யப்படும். முதலில் பரிசோதனை செய்த மருத்துவர் குழு இல்லாமல் வேறொரு குழு பரிசோதிக்க வேண்டும். அவர்கள் ஏற்கெனவே சிகிச்சையளித்து வந்த மருத்துவர்களாகவும் இருக்கக் கூடாது. அப்போதும் பாசிட்டிவ் என்று வந்தால் மூளைச்சாவடைந்தது உறுதி செய்யப்படும்.

ஜெயலலிதா மரணம்

மூளைச்சாவடைந்த ஒருவர் மரணமடைந்து விட்டார் என்பதையும் நரம்பியல் மருத்துவர்கள்தாம் உறுதி செய்யவேண்டும். ஜெயலலிதாவை நரம்பியல் மருத்துவர்கள் பரிசோதித்து அறிவித்திருக்கிறார்கள் என்றால் அவர் மூளைச்சாவடைந்திருக்கக் கூடும். 
மருத்துவ விதிகளில் கிளினிக்கல் டெத், பயாலஜிக்கல் டெத் என்று ஒன்றும் கிடையாது, பிரெயின் டெத், டெத் ஆகிய இரண்டுதான் இருக்கிறது." என்றார் அவர்.

ஜெயலலிதா மரணம் குறித்து மர்மங்கள் எப்போது விலகுமோ தெரியவில்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!