பால் குடித்தால் உயரம் அதிகரிக்குமா?! - மருத்துவம் என்ன சொல்கிறது? #MilkAndHeightGain

பால் குடித்தால், `முகமும் தோலும் பொலிவாகும்’, `தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்’, `இதயப் பிரச்னைகள் ஏற்படாது’... என்றெல்லாம் நம்மிடையே பலவித நம்பிக்கைகள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று, `உயரம் அதிகரிக்கும்’, என்ற நம்பிக்கை. இந்தக் கருத்தை வளரும் குழந்தைகள்மீது திணிக்கவும் செய்கிறார்கள். இது உண்மைதானா? விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் ம.சௌமியா.

பால்

பால் குடிப்பதால் கிடைக்கும் சத்துகள் நிறைய...

“கால்சியம் சத்து அதிகம் கிடைக்கும். வைட்டமின் டி கிடைக்கும். இதனால், எலும்புகள், பற்கள் வலுவடையும்.

வைட்டமின்கள் ஏ, டி, இ, கே, சி, பி 6, பி 12, ரிபோஃப்ளேவின், தயாமின் போன்ற பல சத்துகள் பாலில் இருக்கின்றன.

67% கால்சியம், 35% மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினீயம் போன்ற தாதுச்சத்துகள் நிறைந்தது பால்.

பாலிலுள்ள சத்துகள், இதயத்தின் செயல்பாடுகளைச் சீராக்கி, இதயத்தைப் பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை தினமும் உட்கொண்டால், மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும்.

பால் குடிப்பதற்கும் உயரத்துக்கும் தொடர்பு உண்டா? என்ற கேள்விக்கு வருவோம்.

பெரும்பாலும் 60 முதல் 80 சதவிகிதம் வரை, மரபுவழியில்தான் ஒருவருடைய உயரம் நிர்ணயிக்கப்படுகிறது. மரபுக்கு அடுத்தபடியாக உயரத்தை முடிவுசெய்வது, ஊட்டச்சத்து, வைட்டமின்கள், புரதச்சத்து, வாழ்க்கைமுறை போன்றவை. இவை பாலில் நிறைந்திருக்கின்றன.

உடற்பயிற்சி

உயரம் அதிகரிக்க, ஊட்டச்சத்து சீராக இருக்கவேண்டியது முக்கியம். இதுவரை ‘இந்த உணவு, உயரத்தை அதிகரிக்கும்’ என எந்த ஆய்வு முடிவுகளும் இல்லை. இது பாலுக்கும் பொருந்தும். அதேபோல, சைக்கிளிங், நீச்சல், கைப்பந்து போன்றவற்றை விளையாடினால் உயரம் அதிகரிக்கும் என்பார்கள். உண்மையில் இவை உடல் வலிமை பெற, மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க, தசைகள் வலுப்பெற உதவும்; உயரத்தை அதிகரிப்பதற்கு அல்ல. இதேபோலத்தான் யோகா, உடற்பயிற்சிகள், ஸ்கிப்பிங் போன்றவையும். ‘இந்தப் பயிற்சிகளையெல்லாம் செய்தால் உயரம் அதிகரிக்கும்’ என்பது தவறு.ஊட்டச்சத்து நிபுணர் ம.சௌமியா.

உயரம் என்பது, 21 வயது வரைதான் ஒருவருக்கு இருக்கும். அந்த உயரத்தையும் நாம் உட்கொள்ளும் உணவுகளும் ஊட்டச்சத்துகளும்தான் நிர்ணயிக்கும். ‘எலும்பின் அடர்த்தி நீள்வதுதான் உயரம்’ என்று கூறப்படுகிறது. எலும்பிலுள்ள எபிஃபைஸெல் பிளேட்ஸ் (Epiphysel Plates), அதற்குப் பிறகு வளர்ச்சியடைவதில்லை. 21 வயது வரை ஒருவர் உட்கொள்ளும் கால்சியம், சீரான புரதம் ஆகியவைதான் ஒரு மனிதனின் உயரத்தை நிர்ணயிப்பவை. உடல் வலிமைக்குப் பல பழக்கங்கள் நமக்கு உதவியாக இருக்கும். உதாரணமாக, ஆழ்நிலைத் தூக்கம். ஓய்வின்போதுதான் திசு வளர்ச்சிகள் எல்லாம் நடைபெறும். ஆழ்நிலை உறக்கத்தில் இருந்தால், திசு வளர்ச்சி மிகவும் வேகமாக நடைபெறும். எனவே, தேவையான அளவு தூக்கம் எல்லோருக்குமே அவசியம். யோகா, உடற்பயிற்சிகள், பேலன்ஸ்டு டயட் போன்றவையும் இதில் அடங்கும்.

கால்சியம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும். பருவமடையும் காலகட்டத்தில் பால் அருந்துவது, எலும்புகளை மேலும் வலுப்பெறவும், வளரவும் உதவும். இருந்தாலும்கூட, இது உயரத்தை அதிகரிக்கச் செய்வதில்லை. தினமும் பால் அருந்துவது, உடல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

பால்

ஆக, உயரம் அதிகரிப்பதற்கென தனியே எந்தப் பயிற்சியோ, உணவுப் பழக்கமோ இல்லை. உடல் வளர்ச்சி, எலும்பு அடர்த்தி போன்றவற்றுக்கான உணவுகளை, உயரத்துக்கு என நினைப்பது தவறு’’ என்கிறார் சௌமியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!