வேலைக்குச் செல்லும் குடும்பத்தலைவிகளுக்கான அவசிய ஆரோக்கிய டிப்ஸ்..!

காலையில் வேகமாக எழுந்து, வீட்டு வேலைகளை முடித்து வைத்துவிட்டு, கணவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு, குழந்தைகளைக் கிளப்பி ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துவிட்டு அரைகுறை உணவை சாப்பிட்டு அவசர அவசரமாக அலுவலக வாசலுக்குள் நுழையும் பெண்களா நீங்கள்..? அப்படியென்றால் இங்கே குறிப்பிட்டுள்ள சில டிப்ஸ்களை அவசியம் பின்பற்றுங்கள்.. உங்களுக்கென வாழ்வதற்கும் சில மணித்துளிகளை செலவழியுங்கள்.. பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கு சில டிப்ஸ்களை வழங்குகிறார் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி.

1. திட்டமிடுதல் :

எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்வது நலம். அப்படி தன்னுடைய குடும்பத்தையும், அலுவலகத்தையும் பேலன்ஸ் செய்வதற்கு முதலிலேயே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும்போது அலுவலக வேலைகளையும், அலுவலகத்தில் இருக்கும்போது குடும்ப சூழலையும் மனத்தில் குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை நன்றாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

2. பிடித்ததைச் செய்யுங்கள் :

குடும்பம், வேலை எனக் காலில் சக்கரத்தை மாட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கும் வேளையிலும் உங்களுக்குப் பிடித்ததைச் செய்வதற்கு மறந்துவிடாதீர்கள். பிடித்த பாட்டைத் திரும்பத் திரும்பக் கூடக் கேளுங்கள்.. உங்களுக்குப் பிடித்த விஷயங்களை முழு மனநிறைவோடு செய்யுங்கள்.

பெண்

3. உடற்பயிற்சி :

காலையில் எழுந்தவுடன் உங்களுடைய உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை செய்வதற்கு மறந்துவிடாதீர்கள். நல்ல உடற்பயிற்சியே உங்களுடைய உள்ளத்தையும், மனத்தையும் மகிழ்ச்சியோடு வைத்திருக்க உதவும்.

4. சிரியுங்கள் :

எந்தக் கவலையையும் எண்ணி, எண்ணி மூலையில் சோர்ந்து விடாமல் மகிழ்ச்சியோடு அந்த வலியையும் கடப்பதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். முடிந்த அளவுக்கு உங்களை சந்திப்பவர்களை சிரித்துக்கொண்டே வரவேற்க முயற்சியுங்கள். புன்னகையே பல நோய்களுக்கான மருந்து என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

5. சத்தான உணவுகளை உண்ணுங்கள் :

கணவருக்கும், குழந்தைகளுக்கும் மட்டும் உடல்நலனில் அக்கறை காட்டினால் போதாது. கொஞ்சமாவது உங்களின் மீதும் அக்கறை கொள்ளுங்கள். மூன்று வேலையும் சத்தான காய்கறிகளை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

பெண் - ஹெல்த்

6. புத்தகம் வாசியுங்கள் :

புத்தகங்கள் நம்மை வேறொரு உலகுக்கு கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பொக்கிஷங்கள். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினசரி ஐந்து பக்கங்களையாவது வாசியுங்கள். புத்தக வாசிப்பு உங்களிடம் உள்ள மனஅழுத்தத்திலிருந்து உங்களை வெளிக்கொண்டு வரும்.

7. பாசிட்டிவாக செயல்படுங்கள் :

எந்த ஒரு விஷயத்தையும் நெகட்டிவாக எடுத்துக்கொள்ளாமல் அந்த விஷயத்தை பாசிட்டிவாக எப்படி அணுகலாம் என்பதை யோசியுங்கள். குடும்பம், அலுவலகம் இரண்டையும் சரிசமமாக பின்பற்றும்போது நிறைய எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். அவற்றை தடுத்து நேர்மறை எண்ணங்களோடு வாழ்வதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.

8. நல்ல தூக்கம் :

முடிந்த அளவுக்கு ஆழ்ந்து நிம்மதியாக தூங்குங்கள். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். கணவர், குழந்தை என எல்லாவற்றையும் மறந்து உங்களுக்கென ஒரு கனவு உலகத்துக்குள் உங்களால் தூக்கத்தில் தான் பயணிக்க முடியும். எனவே, அந்தத் தூக்கத்துக்கு குறை வைக்காதீர்கள்.

பெண் - ஹெல்த்

 

9. நண்பர்களோடு பேசுங்கள் :

மாதத்துக்கு ஒரு முறையாவது உங்களுடைய நண்பர்களை சந்தித்து, பள்ளி, கல்லூரி நாள்களை அசை போட்டுக் கொள்ளுங்கள். அப்போது மீண்டும் அந்தப் பள்ளி, கல்லூரி நாள்களுக்குள் உங்களுடைய உள்ளம் பயணித்துவிட்டு வருவதால் புதுத்தெம்பு உங்களுக்குள் எழும். 

10. குழந்தைகளுடன் விளையாடுங்கள் :

அலுவலகம் முடிந்து வந்தவுடன் உங்களுடைய குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு முன்னால் விளையாடக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் சிறுவயதில் ஓடியாடி விளையாடிய விளையாட்டை உங்களுடைய குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!