குழந்தைகளுக்குத் தமிழக அரசு ஏன் வைட்டமின் ஏ மருந்து கொடுக்கிறது தெரியுமா? #VitaminA

போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசி வரிசையில் இப்போது வைட்டமின் ஏ! தமிழ்நாடு முழுக்க ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து கொடுக்கும் வேலையைத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசு. `உலகம் முழுக்க ஐந்து வயதுக்குட்பட்ட 25 கோடி குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ குறைபாடு இருக்கிறது’ என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு புள்ளிவிவரம்.  குழந்தைகளுக்கு ஏற்படும் இந்தக் குறைபாட்டை ஈடு செய்வதற்காக இந்த முயற்சியை எடுத்திருக்கிறது அரசு. அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுவருகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கிய இந்தத் திட்டம் வரும் 23-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த நாள்களுக்குள் இந்தச் சத்தைப் பெறாத குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று இந்த மருந்தை வழங்கப்போவதாகவும் தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை அறிவித்திருக்கிறது. சரி... குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ எவ்வளவு அவசியம்? ஊட்டச்சத்து நிபுணர் கற்பகம் அதன் நன்மைகளைப் பட்டியலிடுகிறார்...

குழந்தைகள்

வகைகள், சத்துகள்!
வைட்டமின் ஏ-வில் ப்ரீ-ஃபார்ம்டு (Preformed) மற்றொன்று புரோ வைட்டமின் ஏ (Pro vitamin A) என இரண்டு வகைகள் இருக்கின்றன.

* ப்ரீ-ஃபார்ம்டு வைட்டமின் ஏ, மீன், பால் உணவுகள், கோழி, இறைச்சி ஆகியவற்றில் கிடைக்கும். இதிலிருந்து ரெட்டினால் (Retinol) என்ற சத்து நமக்குக் கிடைக்கிறது. 

வைட்டமின் ஏ

* புரோ வைட்டமின் ஏ, காய்கறிகள், பழங்களில் கிடைக்கும். இதில், கரோட்டினாய்டுஸ் (Carotenoids) என்ற சத்து இருக்கிறது. பல வகை கரோட்டினாய்டுகள் இருந்தாலும், முக்கியமானது பீட்டா கரோட்டின் (Beta Carotene). மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடண்டான இது, பல நோய்த்தொற்றுகளில் இருந்தும் நம்மைக் காக்கும்.

ஐந்து வயதுக்கு உட்பட்டக் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் தர வேண்டும்?
* குழந்தைப் பருவத்தில் ஒருவர் உட்கொள்ளும் ஊட்டச்சத்துதான், பிற்காலத்தில் பல நோய் பாதிப்புகளில் இருந்தும் அவரைப்கற்பகம் வரதன் பாதுகாக்கும். சில குழந்தைகளுக்கு, பிறக்கும்போதே வைட்டமின் ஏ குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது. கர்ப்பக் காலத்தில் பெண்கள் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாவிட்டால், குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வைட்டமின் குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று குழந்தை பிறந்து ஆறு மாதத்துக்குப் பின்னரே பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்க முடியும். இந்தப் பரிசோதனைகளைச் செய்யாதவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு அதற்கான மாத்திரைகளைக் கொடுப்பதில்லை. குழந்தைகள் வளரும்போது பார்வைக்குறைபாடு ஏற்படுவது, மாலைக் கண் நோய், சரும நோய்கள், எலும்பு வலுவில்லாமல் போவது... போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் குறைபாடுதான் காரணம். இதைக் கருத்தில்கொண்டுதான், ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ கொடுக்கப்படுகிறது.

* முதல் ஆறு மாதங்களுக்கு, குழந்தை தாய்ப்பால் குடிக்கும் என்பதால், ஊட்டச்சத்தில் பெரிய அளவில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தச் சத்துகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால், பார்வையில் குறைபாடு ஏற்படாது; எலும்புகள் அடர்த்தியாகும்; பல் வளர்ச்சி சீராக இருக்கும்; மூளை வளர்ச்சியும் அதிகரிக்கும். ஏனென்றால், ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் குழந்தையின் அனைத்து உடல் வளர்ச்சிகளும் ஆரம்பமாகும்.


வைட்டமின் ஏ அதிகமிருக்கும் உணவுகள்...
ஆரஞ்சு, தக்காளி, பூசணிக்காய், கேரட், ஸ்வீட் பொட்டேட்டோ, புரோக்கோலி, வெண்ணெய், முட்டை, பப்பாளி, ஆப்பிள், மாம்பழம், தர்பூசணி, மீன், முட்டை, மஞ்சள், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள். 

வைட்டமின் ஏ குறைபாடு... விளைவுகள்!
பார்வைக் குறைபாடு, மாலைக் கண், பல் - ஈறுகளில் பிரச்னை, சரும வறட்சி, எலும்பு வலுவின்மை, கண்கள் நிரந்தரமாகத் தெரியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

குழந்தைகள்

* `செலியாக் நோய்” (Celiac disease), நோய் எதிர்ப்புசக்திக் குறைபாடு, கணையப்பிரச்னை இருப்பவர்கள் இந்த வைட்டமினை எந்த வடிவத்தில் உட்கொண்டாலும், அவர்களின் கல்லீரலால் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தப் பிரச்னைகளை குணப்படுத்திய பிறகுதான் உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் ஏ குறைபாடு அறிகுறிகள்...
குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற உடல் வளர்ச்சி இருக்காது; தோல்கள் வறண்டிருக்கும்; தொண்டையில் வறட்சி உண்டாகும்; இரைப்பை மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். 

குறைபாடு


வைட்டமின் ஏ தரும் பலன்கள்!
*எலும்புகள் அடர்த்தியாகும்; பார்வை கூர்மையாகும்; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; மூளைச் செயல்பாடு மேம்படும்; சருமப் பிரச்னைகள் தீரும். அதே நேரத்தில், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், அது ஒரு குறைபாடாக மாறிவிடும். புது நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும். எனவே, மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகுதான் மாத்திரையாகவோ, திரவமாகவோ வைட்டமின் ஏ-வைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!