வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (11/03/2018)

கடைசி தொடர்பு:12:40 (11/03/2018)

சோர்வு, தோல் சுருக்கம், மயக்கம்... கோடை அவஸ்தைகளிலிருந்து தப்பிக்க எளிய வழிகள்!

ழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வாட்டியெடுக்கும் வெயில், இந்த ஆண்டு மார்ச் மாதமே தொடங்கிவிட்டது. கோடை வெயிலிலிருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்வது கொஞ்சம் சவாலான காரியம்தான். வெயிலில் அலைந்து திரிந்தால் உடல் சோர்வு, அதிக தாகம்-வியர்வை, தோல் சுருக்கங்கள் உண்டாவது... என என்னென்னவோ பிரச்னைகள் படையெடுக்கும். சிலருக்குத் தோலில் எரிச்சல், மயக்கம், உடல் வறட்சி, மூக்கில் சிறு கொப்பளங்கள், கண் எரிச்சல், அடி வயிற்றில் வலி, எரிச்சல் வலியுடன் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் பிரிவது, பாதத்தில் எரிச்சல் போன்றவையும் ஏற்படலாம். கோடை காலத்தில் ஏற்படும் இந்த உடல் உபாதைகளிலிருந்து தப்பிக்கச் சில எளிய வழிகள் இருக்கின்றன. அவை...

கோடை


* தினமும் இரண்டு முதல் நான்கு லிட்டர் நீர் அருந்தவேண்டியது அவசியம். 

* தினமும் காலை, மாலை இரு வேளையும் குளிக்கலாம். இது உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும்.

* பருத்தி ஆடைகளை அணியலாம். இதனால் வியர்வை எளிதாக வெளியேறும்; தோல் எரிச்சல் குறையும். 

* வெள்ளரி, தர்பூசணி, முலாம்பழம், நுங்கு போன்ற வெயிலுக்கு இதமான, உடல் சூட்டைத் தணிக்கும் பழங்களை உட்கொள்ளலாம்.

* மோர், இளநீர், நன்னாரி சர்பத், வெட்டி வேர் சர்பத், நுங்கு சர்பத் போன்றவை உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும். 

* வெளியே செல்லும்போது ஒரு பாட்டில் நீரை எடுத்துச் செல்வது நல்லது. 

* வெயில் அதிகமாக இருக்கும்போது வெளியே செல்லாமல், குறைவாக இருக்கும்போது வெளி வேலைகளை முடித்துவிடுவது நல்லது. மதிய நேரத்தில் தேவையான அளவுக்கு ஓய்வெடுப்பதும், நிழலில் இருப்பதும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும். 

* அதிக உடல் சூட்டை ஏற்படுத்தும் துரித உணவுகளையும், மாமிச உணவுகளைம் தவிர்த்துவிடலாம். ஏற்கெனவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த உணவுகளால் உடலில் செரிமானம் பாதிக்கப்படும்.  

* உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாலையும் மாலை நேரமும்தான் ஏற்றவை. வெயில் குறைவாக இருக்கும்போது இந்தப் பயிற்சிகளைச் செய்வது நல்லது. ஒவ்வொரு பயிற்சியின்போதும் தேவையான அளவுக்கு நீர் அருந்த வேண்டும். 

* மெல்லிய ஈரத்துணியை அடிவயிற்றிலும் கண்ணிலும் 20 முதல் 30 நிமிடங்கள் வைத்திருந்தால், அடி வயிற்றுவலி, கண் எரிச்சல் குறையும். 

* மண் குளியல், வாழை இலைக் குளியல் கோடைக்கேற்ற சிறந்த இயற்கைக் குளியல்கள்.

* இடுப்புக் குளியல், முதுகுத்தண்டு குளியல், முழு உடல் குளியல் போன்றவற்றை வாரம் ஒருமுறை மேற்கொள்ளலாம். 

* வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவும். 

* முடிந்த வரை டீ, காபியைத் தவிர்த்துவிட்டு பழங்கள், பழக்கலவைகளைச் சாப்பிடலாம். டீயும் காபியும் உடல் சூட்டை அதிகரிக்கும். 

* இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் கண்களின் மேல் ஈரத்துணியைப் போட்டுக்கொள்ளலாம். இது எரிச்சலைக் குறைத்து, நன்றாகத் தூங்கவைக்கும்.

* உறங்கச் செல்வதற்கு முன்னர் உள்ளங்கால், தொப்புளில் விளக்கெண்ணெய் வைப்பது சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீர்த் தொற்று போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும். கால் கட்டை விரலிலும் விளக்கெண்ணெய் வைக்கலாம்.

கோடை

* தினமும் வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதும், மோர் அருந்துவதும் நல்லது. 

* வெறும் வயிற்றில் பழைய சாதம், நீராகாரம் சாப்பிட்டால், வயிறு மற்றும் செரிமானத் தொந்தரவுகளிலிருந்து தப்பிக்கலாம். 

* வியர்வையோடு இருக்கும்போது குளிக்காமல், சிறிது நேரம் கழித்துக் குளிக்கலாம். வியர்வையுடன் குளித்தால் சளி பிடிக்க வாய்ப்புண்டு. 

* சிலருக்கு வெயில் ஒத்துக்கொள்ளாமல் அதிகச் சளி பிடிக்கும்; தொண்டைவலி ஏற்படும். அவ்வப்போது தூதுவளை, ஆடாதொடை கஷாயம், துளசி கஷாயம் போன்றவற்றை அருந்தலாம்.  

* நல்லெண்ணெயால் வாய் கொப்பளிப்பது உடல் சூட்டைக் குறைக்கும். 

 

 


டிரெண்டிங் @ விகடன்