ஃபுட் அலர்ஜி ஏற்படுவது ஏன், தவிர்க்க என்ன செய்யலாம்? #FoodAllergyAlert | Suggestions to avoid Food Allergy

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (09/03/2018)

கடைசி தொடர்பு:19:31 (09/03/2018)

ஃபுட் அலர்ஜி ஏற்படுவது ஏன், தவிர்க்க என்ன செய்யலாம்? #FoodAllergyAlert

" 'னக்கு கத்திரிக்காய்னாலே அலர்ஜி. என்னைக்காச்சும் எண்ணெய்க் கத்திரிக்காயை கொஞ்சமா சாப்பிட்டாக்கூட அன்னைக்கு முழுக்க தோல் அரிச்சுக்கிட்டே இருக்கும்', 'மீன் எனக்கு ஒத்துக்காது, ஒரு துண்டு சாப்பிட்டாக்கூட வயிறு வலிக்க ஆரம்பிச்சுடும்'... இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உணவால் அலர்ஜி ஏற்படலாம். சிலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருக்கும். அதை ஃபுட் அலர்ஜி என நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

அலர்ஜி

சுகாதாரமற்ற அல்லது மோசமான உணவைச் சாப்பிடுவதால் ஏற்படுவது ஃபுட் பாய்சன். ஒருவரின் உடலின் தன்மைக்கேற்ப உணவு ஒத்துழைக்காமல் போகும் நிலைதான் ஃபுட் அலர்ஜி. ஃபுட் அலர்ஜியை முழுமையாகத் தவிர்க்க முடியாது. என்றாலும், சில உணவுமுறை மாற்றங்கள் மூலம் அவை நம்மை நெருங்காமலிருக்க வைக்கலாம்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சுகன்யாதேவி. suganya devi

"ஒவ்வொருமுறை உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்படும்போதும், நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அதை எதிர்த்துப் போராடத் தொடங்கும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால், தொடர்ந்து ஒவ்வாமை ஏற்படும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபயாடிக் உணவுப் பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மற்றும் உணவுமுறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் முடிந்தவரை ஃபுட் அலர்ஜி ஏற்படாமல் தவிர்க்கலாம்.

உணவு ஒவ்வாமையைத் தவிர்க்க உதவும் வழிமுறைகள்...

* உங்கள் உடலுக்கும் செரிமானத்துக்கும் எந்தெந்த உணவுகள் ஒவ்வாமை ஏற்படுத்துகின்றனவோ, அவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சில தினங்களுக்கு அந்த உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட்டு, சில நாள்கள் கழித்து சாப்பிட்டுப் பாருங்கள். ஒவ்வாமைப் பிரச்னை மீண்டும் ஏற்படாவிட்டால், அவற்றைத் தொடரலாம்; இல்லாதபட்சத்தில் அவற்றை முழுமையாகத் தவிர்த்துவிடலாம். இதை 'எலிமினேஷன் டயட்’ (Elimination Diet) என்பார்கள்.

* உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளில் முக்கியமானவை பால், முட்டை, நட்ஸ், கடலை, மீன், கோதுமை, சோயா.

* ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை `எலிமினேஷன் டயட்' மூலம் ஒதுக்கும்போது, ஊட்டச்சத்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உணவில், 40 சதவிகிதம் காய்கறி; 30 சதவிகிதம் புரதச்சத்து உணவுகள்; 20 சதவிகிதம் நல்ல கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்; 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

* உணவில் காலிஃப்ளவர், புரோக்கோலி, வெள்ளரிக்காய், மஷ்ரூம், முள்ளங்கி, பெருஞ்சீரகம், தேங்காய்ப்பால், நல்ல கொழுப்பு அதிகமுள்ள தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய்

* இஞ்சி... ஆன்டிபயாடிக் உணவு. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுகளில் இருந்தும் உடலைப் பாதுகாக்கும். இஞ்சியின் சுவை தெரியக் கூடாது என்பதற்காக மாத்திரை, சாக்லேட் வடிவத்தில் சிலர் இதை உட்கொள்வதுண்டு. இதில் ஃப்ளேவர்கள் பெயரில் ரசாயனங்கள் கலந்திருக்க வாய்ப்பிருப்பதால் அன்றாட உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வது நல்லது. இரண்டு கிராம்பை அரைத்துச் சாப்பிடுவது, கூடுதல் சிறப்பு.

* எலுமிச்சை உடலிலுள்ள சத்துகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் சீர்படுத்தும். தினமும் எலுமிச்சை கலந்த தண்ணீரைக் குடித்துவந்தால், நீர்ச்சத்து பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்தது.

* பச்சைக் காய்கறிகளிலிருக்கும் வைட்டமின், தாதுப்பொருள்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும். மேலும் உடலில் ஏற்படும் பல அழற்சிப் பிரச்னைகளைத் தடுக்கவும் உதவும். காலிஃப்ளவர், புரோக்கோலி, வெங்காயம், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்களிலிருக்கும் `குவார்செடின்’ (Quercetin) எனப்படும் பாலிஃபினால் ஃபுட் அலர்ஜியைத் தடுக்க உதவும்.

* புரோ பயாடிக் உணவுகளை (Pro Biotic அதிகம் உட்கொண்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்; குடல் பிரச்னைகள் தீரும்.

 பழங்கள்

* நட்ஸ் வகைகளில் அலர்ஜி இருப்பவர்கள், அவற்றுக்குப் பதிலாக நல்ல கொழுப்பு மற்றும் தாதுச்சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வேர்க்கடலை, பாதாம், வெண்ணெய் போன்றவற்றைச் உட்கொள்ளலாம்.

* சிலருக்கு ஒவ்வொரு காலத்திலும் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் போன்ற `சீசனல் உணவுகள்’ அலர்ஜியை ஏற்படுத்தும். அவர்கள், தினமும் சிறிதளவு தேன் குடித்துவந்தால், இந்தப் பிரச்னை தீரும்.

அவரவர் உடல் அமைப்பைப் பொறுத்து, சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவற்றை முழுமையாகத் தவிர்த்துவிடுவது நல்லது. ஓர் உணவு உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால், ஏன் ஏற்படுகிறது, அதற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் மருத்துவச் சோதனை மூலமாகத் தெரிந்துகொள்ளுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்."

 

 

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்