`ஒரு நாளைக்கு 10 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் வேண்டாம், புற்றுநோய் ஏற்படலாம்!’ - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம் | Excess sugar in your diet might lead to cancer

வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (12/03/2018)

கடைசி தொடர்பு:11:53 (12/03/2018)

`ஒரு நாளைக்கு 10 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் வேண்டாம், புற்றுநோய் ஏற்படலாம்!’ - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

நாம் சாப்பிடும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள்...  அனைத்திலும் இயற்கையாகவே இருக்கிறது சர்க்கரை. இவை தவிர, நாம் அருந்தும் டீ, காபி, ஜூஸ் போன்ற பானங்களில் நேரடியாகவும் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்கிறோம். ஒருவரின் இயல்பான அளவுக்கு மேல் ரத்தத்தில் சர்க்கரை சேர்வதால் முதலில் உடல் எடை அதிகரிக்கும். இதனால்,  சர்க்கரைநோய், இதயநோய், சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம்... எனப் பல தொற்றா நோய்கள் ஏற்படவும் அது காரணமாகிவிடும். இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக ஓர் ஆபத்தும் சேர்ந்திருக்கிறது... `புற்றுநோய்'. `ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் புற்றுநோய் ஏற்படும்’ என்று அண்மையில் எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

சர்க்கரை

சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் நம்மை காத்துக்கொள்ள சில அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறது. அதன்படி, `ஒருவர் நாளொன்றுக்கு அதிகபட்சமாக பத்து டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் உட்கொள்ளக் கூடாது’ என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. 

நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா, ஒவ்வோர் உணவிலும் எவ்வளவு சர்க்கரை இருக்கிறதென்று பார்த்துப் பார்த்துச் சாப்பிட முடியுமா, இதிலிருந்து தப்பிப்பதற்கு என்னதான் வழி?

விரிவாகப் பேசுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் ராஜ்குமார். மருத்துவர் ராஜ்குமார்

"பொதுவாக சர்க்கரையில் இரண்டு வகைகள் உள்ளன. எக்ஸ்ட்ரின்சிக் (Extrinsic sugar) மற்றும் இன்ட்ரின்சிக் (Intrinsic sugar). எக்ஸ்ட்ரின்சிக், உணவுகளிலும் பானங்களிலும் நாம் சேர்த்துக்கொள்வது. இன்ட்ரின்சிக், காய்கறிகள், பழங்களில் இயற்கையாகவே இருப்பது. 

ஒரு நாளைக்கு, நமக்குத் தேவைப்படும் மொத்த கலோரிகளில், சர்க்கரையின் அளவு பத்து சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதுதான் இதுவறையில் நடைமுறையில் இருந்தது. ஆனால், உலகச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தி, அதனை ஐந்து சதவிகிதமாகக் குறைத்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் கலோரி அளவு ஒரே மாதிரியாக இருக்காது. அவர்களின் பி.எம்.ஐ (BMI) அளவைப் பொறுத்து அல்லது ஐடியல் வெயிட்டைப் பொறுத்து தேவையான கலோரியைக் கணக்கிடலாம். 

முதலில், ஐடியல் வெயிட்டை வைத்து எப்படிக் கண்டறிவது என்று பார்ப்போம்.

180 செ.மீட்டர் உயரம் கொண்டவரின் (180-100 = 80) ஐடியல் வெயிட் 80. 

உடல் பருமன்

180 செ.மீட்டர் உயரம் கொண்டவர், 80 கிலோ எடையில்  சரியாக இருந்தால் நாளொன்றுக்கு 80 X 25 = 2,000 கிலோ கலோரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

80 கிலோவைவிடக் குறைவாக இருந்தால், நாளொன்றுக்கு 80 X 30 = 2,400 கிலோ கலோரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

80 கிலோவிட அதிகமாக இருப்பவர்கள், நாளொன்றுக்கு 80 X 20 = 1,600 கிலோ கலோரிக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. 

அதன்படி, 180 செ.மீட்டர் உயரம் கொண்டவருக்கு ஒரு நாளைக்கு  2,000 கிலோ கலோரி தேவை. அதிலிருந்து ஐந்து சதவிகிதம் என்றால் சரியாக 100 கிலோ கலோரிதான் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதாவது, ஆண் ஒருவர், 9 டீஸ்பூன் சர்க்கரையும், பெண் ஆறு டீஸ்பூன் சர்க்கரையும் எக்ஸ்ட்ரின்சிக்காக சேர்த்துக்கொள்ளலாம். அதைவிட அதிகமாகச் சேர்த்துக்கொள்ளும்போது உடல் எடை அதிகரித்துவிடும். அதனால் அனைத்துவிதமான புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. நம் உடல் எடை சரியான அளவில் இருக்கிறதா என்பதை பி.எம்.ஐ அளவைக் கண்டறிந்து தெரிந்துகொள்ளலாம்" என்கிறார். 

சர்க்கரை அளவு

புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சரவணனிடம் பேசினோம் "புற்றுநோய் வருவதற்கான காரணங்களில் முக்கியமானது உடல் பருமன். குறிப்பாகப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், ஆண்களுக்கு புராஸ்டேட் கேன்சர் ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை அதிகமுள்ள உணவுகளால் உடல் பருமன் ஏற்படும். ஒவ்வொருவரும் தங்கள் உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரித்தால், இந்தப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்" என்கிறார் சரவணன்.

பி.எம்.ஐ... எப்படிக் கணக்கிடுவது?

ஒருவரின் உடல் எடை 80 கிலோ, உயரம் 180 செ.மீட்டர் என வைத்துக்கொள்வோம். முதலில் உயரத்தை மீட்டரில் மாற்றிக்கொள்ள வேண்டும். 180 செ.மீ/100 = 1.8 மீ. 

பி.எம்.ஐ = 80 / (1.8 X 1.8) அவரது பி.எம்.ஐ எண் = 24.69. 

இதன்படி ஒருவரின் பி.எம்.ஐ 18.5-க்கும் 25-க்கும் இடையிலிருந்தால் இயல்பான எடை. 25-லிருந்து 29.9-க்கு இடைப்பட்டதாக இருந்தால் அவர் அதிக எடையிலிருக்கிறார். 30-க்கும் மேலிருந்தால், அவர் உடல் பருமன் உள்ளவர் என்று வரையறுக்கிறார்கள்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்,

கலோரியைக் கணக்கிடுவது எப்படி?

இணையதளத்தின் மூலமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கலோரியின் அளவைத் தெரிந்துகொள்ள விரும்புவர்கள். ninindia.org என்ற இணைய முகவரியில் `கவுன்ட் வாட் யு ஈட்’ (Count what u eat ) என்ற பகுதிக்குள் சென்று நாம் சாப்பிட்ட உணவுகளைப் பதிவுசெய்தால், நாம் எவ்வளவு கலோரி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டிவிடும்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்