வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (13/03/2018)

கடைசி தொடர்பு:17:33 (13/03/2018)

நிரந்தரம், தற்காலிகம்... டாட்டூவில் எது பெஸ்ட்? - சில மருத்துவ அறிவுரைகள்! #TattooAlert

`ஃபேஷன்’ என்ற பெயரில் பல அழகுசாதனப் பொருள்களை இன்றைய இளைய தலைமுறை பயன்படுத்துவதை நாமறிவோம்; அதையும் தாண்டி, உடல் சார்ந்த வெவ்வேறு சிகிச்சைகளையும் மேற்கொள்வது இப்போது அதிகரித்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது, உடல் முழுக்க டாட்டூ போட்டுக்கொள்ளும் கலாசாரம். இதற்கு எந்த எல்லையும் இல்லை. உடலில் பல இடங்களில், பல வண்ணங்களில், டிசைன் டிசைனாக டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். டாட்டூ போட்டுக்கொள்பவர்கள் அதிகமுள்ள நாடு அமெரிக்காதான். என்றாலும், அண்மைக்காலமாக நம் ஊரிலும் இதன் மோகம் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் 'டாட்டூ போட்டுக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லதல்ல’, `புற்றுநோய்கூட ஏற்படலாம்' போன்ற தகவல்கள் கிலியைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றன.

டாட்டூ

'டாட்டூ போட்டுக்கொள்வது நல்லதுதானா... அதனால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா... அதைப் போட்டுக்கொள்வதற்கு முன்னர் தெரிந்துக்கொள்ளவேண்டிய தகவல்கள் என்னென்ன?' என்பதையெல்லாம் குறித்து சரும மருத்துவர் ஷரதாவிடம் கேட்டோம்.ஷரதா

``டாட்டூவில் நிரந்தரம், தற்காலிகம் என இரண்டு வகைகள் உள்ளன. தற்காலிக வகை, போட்டுக்கொள்ளும்போது எந்த வலியையும் ஏற்படுத்தாது. குறிப்பிட்ட சில தினங்களில், வாரங்களில் அழிந்துவிடும். நிரந்தர வகை, வலி ஏற்படுத்துவது. இதை அழிப்பது மிகவும் சிரமம். எனவே, இவற்றில், உங்களுக்கு எது வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டு டாட்டூ போட்டுக்கொள்ளுங்கள். நிரந்தர வகையைப் போட்டுக்கொண்டால், அதற்காகச் செலவழித்த பணத்தைவிட ஆறு மடங்கு அதிகமாக அழிப்பதற்கு செலவு செய்யவேண்டியிருக்கும். நிரந்தர டாட்டூவைத் தேர்ந்தெடுப்பவர்கள், எந்தச் சூழலிலும் அதை அழிப்பதற்கு முயற்சி செய்யாமல் இருப்பதே நல்லது. எனவே, ஆரம்பத்திலேயே தற்காலிக டாட்டூ போட்டுக்கொள்வது சிறந்தது.

வண்ணங்கள் அதிகமிருக்கும் டிசைன்களைத்தான் பலரும் விரும்புகிறார்கள். வண்ணங்களுக்கு ஏற்றபடி லேசர்களும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான காந்த அலை அளவும் (Wavelength) கணக்கிலெடுத்துக்கொள்ளப்படும். இவை சருமத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, டாட்டூ விரும்பிகள் பல வண்ணங்களில் போட்டுக்கொள்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். வண்ணங்களில் உபயோகப்படுத்தப்படும் நிறமிகள், சரும ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். அதேபோல, சிலர் உடலின் பல பாகங்களில் போட்டுக்கொள்வார்கள். சருமம் மெலிதாக இருக்குமிடங்களில் டாட்டூப் போடுவதைத் தவிர்க்கலாம்.

டாட்டூ போட என்னென்ன பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பொறுத்துதான் அதை அழிக்கவும் முடியும். எனவே, போட்டுக்கொள்வதற்கு முன்னர் அதற்காகப் பயன்படுத்தப்படும் ஊசிகள், நிறமிகள், மை, லேசர் எல்லாவற்றையும் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள். ஒருவேளை அழிக்கவேண்டிய சூழல் வந்தால், இந்தத் தகவல்கள் பயன்படும். வேறொருவருக்குப் பயன்படுத்திய ஊசி வேண்டாம். இது, பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் கண்முன்னே புது ஊசியைப் பயன்படுத்துகிறார்களா என்பதை கவனிக்கவும்.

ஊசி

டாட்டூ போடுவதற்கு முன்னர், அந்த உடல் பாகத்தில் ஆன்டி-செப்டிக் க்ரீம் (Antiseptic Cream) போட்டுக்கொள்ளவேண்டியது அவசியம். இது பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல், சருமத்தைக் காக்க உதவும். சருமம் வறட்சியாக இருக்கும்போது, டாட்டூ போட்டுக்கொள்ளக் கூடாது. டாட்டு போட்டுக்கொள்ளும் தினத்துக்கு முந்தைய நாள் முழுக்க தண்ணீர் குடித்து, உடலில் சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல, டாட்டூ போடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும் க்ரீம்களை (Moisturizing cream) தடவிவர வேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் டாட்டூ போட்டுக்கொள்ளக் கூடாது.

டிசைன்

டாட்டூ போட்டதற்கு பின்னர், அந்த இடத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு, அந்த நிபுணரோ, மருத்துவரோ பரிந்துரைத்த ஆன்டிபயாடிக் க்ரீம் (Antibiotic cream) பயன்படுத்த வேண்டும். குறி போட்ட இடத்தை சூரிய ஒளியில் காண்பித்து வருவது நல்லது. சில நாள்களுக்கு, அந்த இடத்திலுள்ள சருமம் சுருங்கி, செல்கள் உயிரிழந்து காணப்படும். இதற்காக, அந்த இடத்தைச் சொறிவதோ, துண்டு வைத்துத் துடைப்பதோ, ஒத்தடம் கொடுப்பதோ கூடாது. அந்தப் பகுதியை தண்ணீரில் நனையாமல் வறட்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பதினைந்து நாள்களுக்கு, ரசாயனம் எதுவும் அதன் மேல் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். நம் பண்பாட்டுக்குப் பொருந்தாதது டாட்டூ. அதோடு, பல உடல் உபாதைகளுக்கும், நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் இதைத் தவிர்த்துவிடுவதே சிறந்தது’’ என்கிறார் ஷரதா. 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க