Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சாதியப் பாகுபாடு, தொடர் தற்கொலைகள்... என்னதான் நடக்கிறது மருத்துவக் கல்லூரிகளில்?

பொறியியல், சட்டம், மேலாண்மை... இப்படி ஒவ்வொரு துறைப் படிப்பும் ஒவ்வொரு காலத்தில் உச்சத்தில் இருந்தது. உதாரணமாக, ஒரு காலத்தில் பல பேர் போட்டி போட்டுக்கொண்டு சட்டக்கல்லூரிகளில் சேர்ந்தார்கள். அன்றையச் சூழலில் வழக்கறிஞர்கள் சமூகத்தில் உயர்வாகக் கருதப்பட்டார்கள். காலம் மாறியது. கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை, லட்சக்கணக்கில் சம்பளம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு... என ஏராளமான சலுகைகள் கிடைக்க ஆரம்பித்ததும் பொறியியல் கல்லூரிகளை நோக்கிப் படையெடுத்தார்கள். பொறியியல் படிப்புக்கும், சட்டப்படிப்புக்கும் போதிய வரவேற்பில்லாமல் போக ஆரம்பித்திருக்கும் இன்றையச் சூழலில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை நோக்கிப் போக ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற துறைப் படிப்புகளெல்லாம் ஏற்ற இறக்கத்தோடு மாறி மாறிப் பயணித்து வர, அப்போதிருந்து இப்போது வரை மதிப்பு குறையாத ஒரே துறை மருத்துவம் மட்டுமே.

தற்கொலை

ஒரு மாணவர் மருத்துவம் படிக்க வேண்டுமென்றால், பன்னிரண்டாம் வகுப்பில் அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இப்போதுள்ள நிலவரப்படி நீட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காகவே, பல மாணவர்கள் சிறுவயதிலிருந்தே தயாராகிறார்கள். மருத்துவர் ஆக வேண்டும் என்பதை ஒரு லட்சியமாகவே கொண்டு படித்து, மருத்துவக் கல்லூரிகளில் சேர்கிறார்கள். இளநிலை மருத்துவப் படிப்பை முடித்துவிட்டால், முதுநிலை மருத்துவம். இதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுக்கவேயிருக்கும் ஏதாவது ஒரு கல்லூரியில் கஷ்டப்பட்டு இடம்பிடித்துவிடுகிறார்கள்.

இப்படி எத்தனையோ சிரமங்கள்... கல்லூரியில் சேர்ந்துவிட்டாலோ அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மிகக் கொடுமையானவை. அதுவும், உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவுக்குக் கொடுமையானவை... இதைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் மருத்துவ மாணவர்களின் மரணங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

முதுகலை மாணவர்கள் போராட்டம்

2016-ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் மர்ம மரணம்; அடுத்ததாக, டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும்
யு.சி.எம்.எஸ் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த தமிழக மாணவர் சரத்பிரபு மர்ம மரணம்; சண்டிகாரில் உள்ள பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (Postgraduate Institute of Medical Education and Research) மத்திய அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேல் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு படித்துவந்த கிருஷ்ண பிரசாத் என்ற தமிழ்நாட்டு மாணவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டு மரணம்: சில நாள்களுக்கு முன்னர் குஜராத்தின் அகமதாபாதில் உள்ள பி.ஜே.மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த தமிழக மாணவர் மாரிராஜ் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி...

உடல்நலனைப் பற்றியும், மனநலனைப் பற்றியும் மற்றவர்களுக்கு சொல்லிப் புரியவைத்து குணப்படுத்தும் மருத்துவர்களே இனி நம்மால் வாழ முடியாது என்று முடிவெடுக்க என்ன காரணம்... மற்ற துறைப்படிப்புகளில் இல்லாத ஒரு நெருக்கடி மருத்துவப் படிப்பில் மட்டும் இருப்பது ஏன்...? வெளிமாநிலங்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக உயிரை மாய்த்துக்கொள்வது ஏன்?

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்தைச் சந்தித்து இது குறித்துப் பேசினோம்...

"இந்த மரணங்களுக்கு சமூக, பொருளாதாரப் பின்புலங்களே முதன்மையான காரணம். உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிப்பதற்கு பலர் ரவீந்திரநாத்ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், அத்தனை இடங்கள் இந்தியாவில் இல்லை. அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சீட்களின் எண்ணிக்கையும் ஒரே மாதிரியாக இல்லை. வட மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அதிகமான இடங்கள் இருக்கின்றன. இருந்தாலும், ஓபிசிக்கான இட ஒதுக்கீடு இந்திய அளவில் இருப்பதால், தமிழ்நாட்டில் மற்ற மாநில மாணவர்களும், மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டு மாணவர்களும் சேர்ந்து படிக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் படிக்கும் மற்ற மாநில மாணவர்கள் பெரிய அளவில் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லை. ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் மற்ற மாநிலங்களில் ஏராளமான இன்னல்களை அனுபவிக்கிறார்கள். சாதி, மத, இன, மொழி அடிப்படையில் ஏராளமான வதைக்கு உள்ளாகிறார்கள். அடித்து விரட்டப்படுகிறார்கள். மாணவர்கள் மட்டுமின்றி அங்கே பணிபுரியும் பேராசியர்களே நம் மாணவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கேலி, கிண்டல் செய்து ஒடுக்குவது தொடர்ந்து நடந்துவருகிறது. பல மாணவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள். அதனால், சிலர் மனம் வெறுத்துத் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள். தங்களின் இடங்களை மற்றவர்கள் பறித்துக்கொள்கிறார்களே என்கிற ஆத்திரமும் காழ்ப்புணர்வும்தான் இதற்கு முழுக் காரணம்.

சரவணன்

டெல்லி எய்ம்ஸில் இறந்த மாணவர் சரவணனின் அருகே பொட்டாசியம் மருந்து, சிரிஞ்ச் ஆகியவை கிடந்திருக்கின்றன. அவரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும், அது தற்கொலை அல்ல, மரணம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதுகுறித்து டெல்லி போலீஸார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

பி.ஜே மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்., மூன்றாம் ஆண்டு படித்துவரும் மாரிராஜ் என்ற தலித் மாணவரை டீ வாங்கி வரச் சொல்வது, டீ வாங்கி வந்த பாத்திரங்களை கழுவச் செய்வது போன்ற கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள். கொடுமைகள் தாங்க முடியாத அவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். நல்லவேளையாக அவர் காப்பாற்றுப்பட்டுவிட்டார். இருந்தாலும் இப்போது வேறுவிதமான கொடுமைகளை அனுபவித்துவருகிறார். மற்ற மாணவர்களிடமிருந்து அவரை மட்டும் தனிமைப்படுத்துவது, வார்டுக்குள் நோயாளிகளைப் பார்க்க அனுமதி மறுப்பது, அறுவை சிகிச்சை வாய்ப்புகள் வழங்க மறுப்பது, தேர்வெழுத வாய்ப்பு மறுப்பது போன்ற கொடுமைகளை அந்த மாணவருக்கு எதிராகச் செய்துவருகிறார்கள். இது தொடர்பாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சரிடம், தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் பேசியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கிருஷ்ண பிரசாத் குடும்பத்தினருடன்

இந்தப் புறக்கணிப்புகள் வேறொரு கோணத்திலும் விசாரிக்கப்பட வேண்டும். ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டு அல்லது கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டால், அந்த இடத்தில் வேறொரு மாணவர் சேர்ந்துவிடலாம். வேறொரு மருத்துவக் கல்லூரியில் இருந்து அந்த இடத்துக்கு இடமாறுதல் பெறவும் முடியும். அதற்காகவும் இதுபோன்ற செயல்கள் அரங்கேறலாம். இது போன்ற கொடுமைகளுக்கு, மரணங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முதுகலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை அந்தந்த மாநில மாணவர்கள் மட்டுமே படிக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.

நம் மாணவர்கள் மற்ற மாநிலங்களில் படிக்கும்போது மொழி தெரியவில்லை என்று அலைக்கழிக்கப்படுகிறார்கள். மொழியைக் கற்றுக்கொள்வதில் உள்ள தாமதத்தைக் காரணம் காட்டி, ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த மொழிப் பாகுபாட்டினாலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதைத் தடுக்க, அரசே சில உதவி மையங்களைத் திறந்து மாணவர்களுக்கு உதவ வேண்டும்.

இந்தியா முழுக்க உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சாதி, மொழி, இன, பாலினரீதியான பாகுபாடுகள் பார்க்கப்படக் கூடாது என்று மாணவர்கள் மத்தியிலும் விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 சரத்பிரபு

மருத்துவக் கல்லூரிகளில், அறுவைசிகிச்சையில் முதுகலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு அதிகமான நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. தொடர்ந்து முப்பத்தாறு மணி நேரம் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனாலும் பலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதெல்லாம் சரி செய்யப்பட வேண்டும். பல கல்லூரிகளில், முதுகலை படிப்பவர்களில் ஒருவரை மற்றவருடன் ஒப்பிட்டு அவமானப்படுத்துவதும் நடக்கிறது. இதனாலும் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

அதேபோல் சாதியரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அரங்கேறிவருகின்றன. இவற்றில் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளும் அடக்கம் . அதிலும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதைத் தடுக்க, விசாரிக்க ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் யாராவது சாதியரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளானால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக விசாரித்து தவறு செய்தவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும். ஆசிரியர்களாக இருந்தால், பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மாரிராஜ்

தமிழ்நாட்டிலும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. இதைத் தடுக்க, பயிற்றுவிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். விடுதி வசதிகளை மேம்படுத்த வேண்டும். தமிழ்வழியில் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு முதலாமாண்டு மருத்துவம் படிக்கும்போது சற்று சிரமம் இருக்கும். அதைத் தடுக்க, ஒவ்வொரு பேராசிரியரின் கீழும் குறிப்பிட்ட மாணவர்களைச் சேர்த்து அவர்களுக்கான உதவிகளைச் செய்யச் சொல்ல வேண்டும்.

முதலாமாண்டு மாணவர்கள்,சீனியர் மருத்துவ மாணவர்களுடன் கலந்துரையாட அனுமதிக்க வேண்டும். ராக்கிங் தடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில், ராக்கிங்கைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்தமாக மாணவர்களுக்கிடையே உள்ள உறவைப் பிரிக்க நினைக்கக் கூடாது. சீனியர் மாணவர்களின் ஆலோசனைகள் , ஆறுதல் வார்த்தைகள் முதலாமாண்டு மாணவர்களுக்கு அவசியம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டிருக்கிறது. இது போன்ற பொருளாதாரக் காரணங்களினாலும் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு உடனடியாகக் கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து மருத்துவ மாணவர்களின் அனைத்துப் பிரச்னைகளையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கையெடுத்தால் இதுபோன்ற மரணங்களைத் தடுத்துவிடலாம்’’ என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement