வெளியிடப்பட்ட நேரம்: 17:09 (21/03/2018)

கடைசி தொடர்பு:19:20 (26/03/2018)

வாக்கர் பயன்படுத்துவதால் இவ்வளவு தீமைகளா? #walker #GoodParenting

செல்லக் குழந்தை தத்தித் தத்தி நடந்துவருவதை எந்தப் பெற்றோர்தான் ரசிக்க மாட்டார்கள்? கைத்தட்டி ஆரவாரம் செய்வதோடு, `குழந்தையை ஊக்கப்படுத்துகிறேன்' என்ற பெயரில் ஒரு பேபி வாக்கர் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அந்தக் குழந்தையும் வாக்கரின் வளையத்துக்குள் புகுந்துகொண்டு, ஸ்கேடிங் செய்வதுபோல வீடு முழுக்க வலம்வருவதைப் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். ஆனால், ``பெற்றோர்களின் இந்த அதீத ஆர்வத்தினால், குழந்தைகள் பிற்காலத்தில் சில பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்'' என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜ். 

வாக்கர்

ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து வளர்ச்சியின் ஒவ்வொரு பருவத்திலும் எதை எப்போது செய்ய வேண்டும் என்பது, உடலியல் ரீதியாக முன்பே தீர்மானிக்கப்படும். இந்த இயற்கை உடலியக்கங்கள், மனித உடலில் சீராக நடந்துகொண்டே இருக்கும். குப்புறப் படுத்தல், தலையைத் தூக்கிப் பார்த்தல், தவழ்ந்து வருதல், முட்டிப் போடுதல், ஒரு பொருளை பிடித்து எழுந்து நிற்றல் என இந்த வளர்ச்சி நிலையை இயற்கையாகக் கடந்தால் மட்டுமே ஒரு குழந்தை தானாக நடக்க முடியும். அதற்கு முன்னதாக, நாம் வலுக்கட்டாயமாக வாக்கர் மூலம் நடக்கப் பழக்கப்படுத்துவது இயற்கைக்கு முரணானது. 

மனித உடலில் மூளையும் உடல் இயக்கங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தானே நடக்கப் பழகும்போதுதான் அவர்களின் மூளை அதற்கு ஏற்ப வளர்ச்சியடையும். வாக்கரைப் பயன்படுத்தும்போது உடலுக்கும் தசைகளுக்கும் ஒருங்கிணைப்பு கிடைக்காது. இதனால், மூளை தன் கட்டுப்பாட்டை இழக்கும். இதனால், குழந்தைகள் வேகமாக நடக்க ஆரம்பித்துச் சிறு சிறு விபத்துகளைச் சந்திப்பர். சாதாரணமாக குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்போது, ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து நடக்கப் பழகுவர். இதுவே, வாக்கரில் உட்கார வைக்கும்போது அந்தக் குழந்தை ஒரு நொடிக்கு மூன்று முறை அடியெடுத்து வைக்கும். இதனால், மூளை கட்டுப்பாடு மீறிச் செயல்படுகிறது. 

வாக்கர்

பொதுவாக, வாக்கரின் அடிப்பகுதியில் சக்கரத்தைச் சுற்றி வட்டம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். இதனால், குழந்தைக்கு அடிபடாது எனப் பெற்றோர் கருதுகின்றனர். ஆனால், இந்த வட்ட அமைப்பினால் குழந்தையின் கை, கால்களில் அடிபடாமல் இருக்குமே தவிர, தலையில் அடிபடும். அதிக வேகத்துடன் குழந்தை வாக்கரை இழுத்துக்கொண்டு வரும்போது, படிகளில் உருண்டு விழுவது, வாக்கருடன் சேர்ந்து குப்புற விழுவது போன்ற விபத்துகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது. 

வாக்கரில் நடக்கும்போது, குழந்தைகள் முழு பாதத்தையும் தரையில் ஊன்றி நடப்பதில்லை. கால் விரல்களை மட்டுமே தரையில் பதிக்கின்றனர். இதனால், கால்களில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. வாக்கரை எடுத்த பிறகும் இதே பழக்கத்தில் குழந்தைகள் நடக்க முயற்சி செய்யும்போது பிரச்னையைச் சந்திக்கிறார்கள். 

ஆரம்பத்தில், குழந்தைகளை நடக்கப் பழகுவதற்காக என வாக்கரில் அமரவைக்கும் பெற்றோர், நாளடைவில் தங்களுக்கு வேலை இருக்கும்போதெல்லாம், வாக்கரில் உட்கார வைத்துவிட்டு வேலைகளைப் பார்க்கிறார்கள். இதனால், குழந்தையின் இயல்புகளில் பாதிப்பு ஏற்படுவதுடன் எனர்ஜி அளவும் குறைகிறது. 

வாக்கர்

குழந்தைகள் நடக்கும் பருவம் என்பது, அவர்களின் உடலியல் அமைப்புக்கு ஏற்ப பிறந்த 11-ம் மாதத்திலிருந்து 18 மாதத்துக்குள் நிச்சயமாக ஆரம்பிக்கும். இதில் 11 மாதத்தில் நடக்கும் குழந்தையானது, நல்ல திறன் படைத்த குழந்தை என்றும், 18-ம் மாதத்தில் நடக்கும் குழந்தையானதும், திறன் குறைந்தது என்றோ அர்த்தம் கிடையாது. உங்கள் குழந்தையை எக்காரணத்துக்காகவும் மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு கலக்கமடையாதீர்கள். இது, குழந்தைக்கு இளம் வயதிலேயே தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்திவிடும். 

குழந்தைகள் தானாக நடக்கத் தொடங்கினால்தான், ஒவ்வொரு முறை கீழே விழும்போதும், மீண்டும் எழுந்து நடக்க முயல்வார்கள். வாக்கரைப் பயன்படுத்தும்போது இதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. வாக்கரில் பழகிய குழந்தையானது, தானாக நடக்க ஆரம்பிக்கும்போது, பயம், தடுமாற்றம் போன்றவற்றைச் சந்திக்கிறது. 

உங்கள் குழந்தை நடக்க ஆரம்பிக்க முயற்சி செய்யும் தருவாயில், இரு கைகளை பிடித்துக்கொண்டு நடக்க ஊக்கப்படுத்துங்கள். ஆரம்பத்தில், அதிகபட்சம் 5 நிமிடங்கள் நடக்கப் பழக்குங்கள். அதன்பின், சிறிது சிறிதாக நேரத்தை அதிகரிக்கலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், இணையதளத்தைப் பார்த்து நீங்களாக எந்தச் செயலிலும் இறங்க வேண்டாம். உங்கள் செல்லத்தின் வருங்காலம், சீரிய நடை உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்பதை மறவாதீர்


டிரெண்டிங் @ விகடன்