``அந்தப் பையன் சின்சானாவே மாறிட்டான்!'' வைரல் ஆடியோவுக்கு மருத்துவரின் விளக்கம்

``அந்தப் பையன் சின்சானாவே மாறிட்டான்'' - யோகா ஆசிரியை ஒருவரின் வருத்தமான வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றுதான் தற்போதைய வைரல்.

 ``அந்தச் சிறுவனுக்கு ஐந்து வயது. கொழுகொழுவென்று இருந்தான். அவனுடைய அம்மா, யோகா கற்றுக்கொள்ள என்னிடம் அழைத்து வந்தார். `வாட் இஸ் யுவர் நேம்?' என்று கேட்டால், `மை நேம் இஸ் சின்சான்' என்றான். அவன் கழுத்து ஒரு பக்கமாகச் சாய்ந்து, திருப்ப முடியாமல் இருந்தது. காரணம் கேட்டதற்கு, `டி.வியைப் பார்த்துப் பார்த்து கழுத்துத் திருப்ப முடியாமல் நின்றுவிட்டது'' என்று அழுதார் அவன் அம்மா. அவன் பெயரே அவனுக்கு மறந்துவிட்டது என்பதை நம்பவே முடியவில்லை. அந்தச் சிறுவனை மனநல மருத்துவரிடம் அழைத்துச்சென்றிருக்கிறார்கள். அவரோ, `இதற்கு  சிகிச்சை செய்ய முடியாது' என்று சொல்லிவிட்டாராம். தவிர, யோகா ஆசிரியரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னதால், என்னிடம் அழைத்து வந்திருந்தார்கள்'' - இப்படிச் செல்கிறது அந்த வாட்ஸ்அப் ஆடியோ. 

ஆடியோ

`நேனே சந்திரமுகி' என்று ஜோதிகா, படத்தில் சொல்வதுபோல இப்படியும் நடக்குமா? இதுபோன்ற பிரச்னைக்கு என்ன சிகிச்சை அளிப்பது? 

சிறுவன்

குழந்தைகள் மனநல மருத்துவரான ஜெயந்தினி, ``ஆண் குழந்தைகள் எப்போதும் ஆக்‌ஷன் ஓரியன்ட் கார்ட்டூன்களை விரும்பிப் பார்ப்பார்கள். சக்திமான், பவர் ரேஞ்சர், சோட்டா பீம் என்று பித்துப் பிடித்துக் கிடந்த குழந்தைகள், இப்போது சின்சானிடம் பிரியமாக இருக்கிறார்கள். அந்தப் பிரியம்தான், `நான்தான் சின்சான்' என்று அந்தச் சிறுவனை சொல்ல வைத்திருக்கிறது. சின்சான் பார்க்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் அந்தச் சிறுவன் இயல்பாக ஆடுகிறான், பாடுகிறான், விளையாடுகிறான் என்றால் நோ பிராப்ளம். அடுத்து, வேறு ஏதாவது கார்ட்டூன் கேரக்டர் பிடித்துவிட்டால், சின் சானை மறந்துவிடுவான். பொதுவாக குழந்தைகளுக்கு வளர வளர கார்ட்டூன் தவிர, வேறு விஷயங்களில் கவனம் சென்றுவிடும். ஆனால், பல மாதங்களுக்குப் பிறகும், `நான்தான் சின் சான்' என்று அந்தச் சிறுவன் சொல்லிக்கொண்டிருந்தால், விஷயத்தை சீரியஸாகப் பார்க்க வேண்டும். ஆடியோவில் சொல்லப்பட்டிருப்பதுபோல, இந்தப் பிரச்னைக்குச் சிகிச்சையே இல்லை என்பது உண்மையல்ல. நிச்சயமாக அந்தச் சிறுவனைச் சரிப்படுத்திவிடலாம்'' என்கிறார். 

கார்ட்டூன்

கழுத்து ஒரு பக்கமாகவே திரும்பியிருக்கிறது என்று சொல்கிறாரே... 

``டி.வி.யை டிஸ்கனெக்ட் செய்யச் சொல்லுங்கள். கழுத்து தானாகவே சரியாகிவிடும். இதில், குழந்தையை மட்டுமே குறை சொல்வதில் நியாயம் இல்லை. வீட்டில் டி.வி வாங்கி வைப்பது நாம்தான். கேபிள் டி.வி கனெக்‌ஷன் தருவது நாம்தான். குழந்தைகள் டி.வியைப் பார்க்க அனுமதித்ததும் நாம்தான். பெற்றோர் இருவருமே வேலைக்குப் போவது; தாத்தாவாலோ, பாட்டியாலோ குழந்தைகளை ஒரு அளவுக்கு மேல் கன்ட்ரோல் பண்ண முடியாதது, இதெல்லாம்தான் இந்தப் பிரச்னைக்கு காரணம். இதற்கான தீர்வு, குழந்தைகளை மியூசிக் கிளாஸ், செஸ் கிளாஸ் என்று மற்ற விஷயங்களில்  கவனம் செலுத்த வைப்பதுதான். அவர்கள் மியூசிக் கிளாஸ் போவதால் இளையராஜாவாகவோ, செஸ் கிளாஸ் போவதால் விஸ்வநாதன் ஆனந்தாகவோ வரவேண்டும் என்ற அவசியமில்லை.  சின் சான் போன்ற கார்ட்டூன் கேரக்டர்களின் பிடியிலிருந்து திசை திருப்ப இந்த வகுப்புகள் உதவும். இந்த சின் சான் சிறுவனுக்கு இதுதான் தீர்வு'' என்கிறார் ஜெயந்தினி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!