வெளியிடப்பட்ட நேரம்: 16:48 (26/03/2018)

கடைசி தொடர்பு:11:47 (28/03/2018)

பெண்களைப் பார்த்தாலோ யோசித்தாலோ பயம் வருகிறதா..? `கைனோஃபோபியா'வாக இருக்கலாம்! #Gynophobia

பெண்களைப் பார்த்தாலோ, அவர்களைப் பற்றி யோசித்தாலோ சிலர் பயந்து நடுங்குகிறார்கள். பொதுவிடத்தில் பெண்களைப் பார்த்தால் பதற்றமடைந்து தள்ளி நிற்பார்கள். இது மனரீதியான ஒரு பாதிப்பு என்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவமொழியில் இதற்குப் பெயர், கைனோஃபோபியா (Gynophobia) அல்லது ஃபெமினோஃபோபியா (Feminophobia). இது பெண்களையும் பாதிக்கும் என்றாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது ஆண்களே. இந்த ஃபோபியாவால் பாதிக்கப்படும் ஆண், தன் தாய், சகோதரியிடம்கூட பயப்படுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், அவ்வளவு மோசமான பாதிப்பு இது.

கைனோஃபோபியா

இந்த கைனோஃபோபியா குறித்து விரிவாக விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. 

பெண்களால் அவமதிக்கப்பட்ட, கேலி, கிண்டல்கள் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ஆண்களே பெரும்பாலும் இந்தப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எதிர்மறையான பெண் கதாபாத்திரங்களின் கதைகளைச் சின்ன வயதில் கேட்பதும் இந்த பாதிப்பு ஏற்படக் காரணமாகலாம். உளவியல் பிரச்னைகளான மனச்சோர்வு (Bipolar disorder), மனச்சிதைவு ( Schizophrenia) பிரச்னைகளைத் தொடர்ந்தும்  கைனோஃபோபியா ஏற்படலாம். சிறு வயதில் ஏற்பட்ட புறக்கணிப்பு, மனம், உடல் ரீதியிலான தாக்குதல், மரபு வழியாகவும் இது ஏற்படலாம். சில மோசமான அனுபவங்கள் மூளையில் பதிந்துவிட்டால் பெண்களைப் பார்க்கும்போது, பழைய நினைவுகளுடன் தொடர்புபடுத்தி பயப்படுவார்கள். இவற்றில் பயத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும், கைனோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் ஆழமான தாக்கம் இருக்கும். 

பயம்

கைனோஃபோபியாவிற்கான அறிகுறிகள் 10 வயது முதலே வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும். சிலருக்கு இது குழந்தைப் பருவத்திலேயே சரியாகிவிடும். சிலருக்குப் பெரியவரான பிறகும் தொடரும். இந்தப் பயம் தேவையற்றது, மிகைப்படுத்தப்பட்டது என்பது தெரிந்தும்கூட, கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களைப்  பார்க்கக்கூட விரும்பமாட்டார்கள், பெண்கள் அதிகமாகக் கூடுகிற நிகழ்ச்சிகள், விழாக்களுக்குச் செல்வதையும் தவிர்ப்பார்கள். குறிஞ்சி மனநலமருத்துவர்

இந்தப் பாதிப்பு இருப்பதை வெளிக்காட்டிகொள்ளாமல் இருக்க பிறரிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். எனவே, இவர்களால் சாதாரண வாழ்க்கையைக்கூட சுதந்திரத்துடன் அணுக முடிவதில்லை. சிலருக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு ஏற்படலாம். எளிதில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகலாம். இதனால் தற்கொலை எண்ணங்களும் ஏற்படலாம்.

இதயத்துடிப்பு சீராக இருக்காது, சிரமப்பட்டு சுவாசிப்பார்கள், மார்புப் பகுதியில் தசைஇறுக்கம், தலைவலி, மயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கு கைனோஃபோபியா இருந்தால், ஒரு பெண் தூக்கும்போது வீறிட்டுச் சத்தமாக அழத் தொடங்கிவிடும். தந்தையை விட்டுவிலகாது.

சிகிச்சைகள்

கைனோஃபோபியாவை எதிர்கொள்ள உளவியல் சிகிச்சையே சிறந்தது. மனநல மருத்துவரிடம் மெதுவாக பயத்தைப்  போக்குதல் (Exposure therapy), நடத்தை சிகிச்சை (Behavioural therapy),  பேச்சு சிகிச்சை (Talk therapy) எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சிகிச்சைகளால் ஓரளவு குணமான பின்னர், பயத்தின் உண்மையான நிலையை ஆராய்ந்து, சரியான உளவியல் சிகிச்சைக்குத் தயார் செய்வார்கள். பெண்கள் பேசிய குரல் ஒலிப்பதிவைக் கேட்க வைப்பது, பெண்களின் புகைப்படங்களைத்   திரையிடுவது, பெண்களுடனான சிறு உரையாடல் எனப் படிப்படியான சிகிச்சைகளை மருத்துவர் செய்வார். இந்தக் கோளாறை அலட்சியப்படுத்தினால் பாதிக்கப்பட்டவரை மீட்பது கடினம்..." என்றார்.

 

 


டிரெண்டிங் @ விகடன்