``ஃபிட்டாக இருக்க மூணு விஷயம் முக்கியம்!’’ - நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பரிந்துரைக்கும் ஹெல்த் டிப்ஸ்! #HealthTips

கணேஷ் வெங்கட்ராம்... `சிக்’கென்ற உடல்வாகு, கம்பீரமான தோற்றம் காட்டும் ஜென்டில்மேன்.  2008-ம் வருடம் ராதா மோகன் இயக்கத்தில் உருவான 'அபியும் நானும்' மூலம் தமிழில் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர், 'பிக் பாஸ்' மூலம் சின்னத்திரையிலும் கால்பதித்தார். வெள்ளித்திரையில் 'உன்னைப்போல் ஒருவன்', 'தனி ஒருவன்', 'இவன் வேற மாதிரி'... என போலிஸ் அதிகாரியாக, விறைப்பான மனிதராக மட்டுமே மனதில் பதிந்திருந்தார். `பிக் பாஸு’-க்குப் பிறகு, 'இவருக்கு என்னப்பா கோவமே வர மாட்டேங்குது?' என எல்லோரையும் கேட்கவைத்த 'யோகா' நாயகனாகிவிட்டார். அவரிடம், "உங்க ஃபிட்னெஸ் ரகசியம்தான் என்ன பாஸ்... கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்..." என்றோம். இந்த ஒரு கேள்விக்கு நிறுத்தாமல், கொஞ்சம்கூடச் சோர்வடையாமல் மளமளவென்று பதில் சொல்கிறார் மனுஷர்..!

கணேஷ் வெங்கட்ராம் ஃபிட்னெஸ்

``உடம்பைப் பொறுத்தவரைக்கும் ஃப்ளெக்ஸிபிளிட்டி (Flexibility), ஸ்ட்ரெந்த் (Strength), எண்ட்யூரன்ஸ் (Endurance Exercise) - இந்த மூணு விஷயத்துலயும் கவனமா இருந்தாத்தான் ஃபிட்டா இருக்க முடியும். இந்த மூணு விஷயத்துக்கும், தனித்தனி உடற்பயிற்சிகள் தேவைப்படும். உதாரணமா - யோகா வகைப் பயிற்சிகள் செய்யறது மூலமா உடம்புக்கு ஃப்ளெக்ஸிபிளிட்டி கிடைக்கும்; வொர்க்அவுட்ஸ் செய்யறது மூலமா தசைகளுக்கு ஸ்ட்ரெந்த் கிடைக்கும்; நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, ரன்னிங் போன்ற கார்டியோ ஹெல்த்துக்கு உதவும் பயிற்சிகளெல்லாம் எண்ட்யூரன்ஸ் வகையைச் சேர்ந்தவை. கடைசி வகை, மனம் தொடர்பானது... அதுதான் என்னோட பொறுமைக்குக் காரணம்.
இப்படியான வெவ்வேறு பயிற்சிமுறைகளை என் வேலைக்கு இடையில, தினமும் செய்யறது சிரமம். அதனால, ஒருநாள் விட்டு ஒருநாள் பண்ணுவேன். மூணு வகை உடற்பயிற்சி முறைகளையும், ஆறு நாள்கள் செய்வேன். இந்த மூணும், அடிப்படைகள்தான். இதுக்கு இந்த உடற்பயிற்சியைத்தான் செய்யணும்னு வரைமுறைப்படுத்தி என்னை நானே சின்ன வட்டத்துக்குள்ள சுருக்கிக்கிட மாட்டேன். 'எந்தப்  பயிற்சியாக இருந்தாலும் செய்யலாம், எந்தப் பயிற்சியை வேணும்னாலும் ட்ரை பண்ணலாம். நம்ம கோல், ஃபிட் அண்ட் ஹெல்த்தி பெர்சனாலிட்டி!'னு முடிவு பண்ணி ஒவ்வொரு மூணு மாசத்துக்கும் என்னோட பயிற்சி முறைகளை மாத்திக்கிட்டே இருப்பேன். ஒரு மூணு மாசம் நீச்சல் பயிற்சி செஞ்சிருந்தா, அடுத்த மூணு மாசம் ட்ரெட்மில், அடுத்தடுத்த மாதங்கள்ல டான்ஸ், ஜூம்பான்னு (Zumba Dance) புதுசு புதுசா ட்ரை பண்ணுவேன்... கத்துக்குவேன். இது மாதிரி மூணு மாசத்துக்கு ஒருமுறை ஒருவிஷயத்தைச் செய்யும்போது உடம்பு, முதல் சில நாள்களுக்கு கன்ஃப்யூஸ் ஆகும். ஆனா, என் உடம்புக்குப் புது விஷயத்தைக் கத்துக்கொடுத்ததா நினைச்சு என்னை நானே பாராட்டிக்குவேன். என் மனசு சொல்றதை உடம்பும், உடம்பு செய்யறதை மனசும் ஈஸியா ஏத்துக்குதுங்கிற சந்தோஷம் ஒரு வகையில, எனக்கு தன்னம்பிக்கை கொடுக்கும்.

கணேஷ்

பொதுவாகவே எனக்கு ட்ராவல் ரொம்ப பிடிக்கும். அதனால, பல புதிய இடங்களுக்குப் போவேன். அந்தந்த இடத்தோட பாரம்பர்ய உணவு முறை என்னென்ன, எப்படி இருக்கும், அவங்களுக்குனு பிரத்தியேகமா ஏதாச்சும் ஃபிட்னெஸ் முறைகள் இருக்கானு பார்ப்பேன். புதுசா நிறைய தெரிஞ்சுக்க இது ரொம்பவே உதவும். ஹெல்த் பத்திப் பேசும்போது டயட், வொர்க்அவுட், ரெஸ்ட்னு கவனிக்க வேண்டிய விஷயங்கள் மூணு இருக்கு. சிலபேர் வொர்க்அவுட், ரெஸ்ட் ரெண்டையும் சரியான அளவுக்கு செஞ்சுட்டு, டயட்ல கவனம் செலுத்தாம விட்டுடுவாங்க. அது ரொம்பத் தப்பு.

என்னோட டயட் முறை கொஞ்சம் வித்யாசமானது. நான் பேஸிக்கா பயங்கரமான ஃபுட்டீ (Foodie). நிறையச் சாப்பிடுவேன். ஆனா, எவ்வளவு சாப்பிடறேன்கிறதுல கவனமா இருப்பேன். புது இடங்களுக்குப் போகும்போது புதிய உணவுகளை முயற்சி பண்ணும்போது, மூணு நேரம் சாப்பிடற உணவைப் பிரிச்சு அஞ்சு, ஆறு தடவை சாப்பிடுவேன். அதேபோல தட்டோட ஒரு பாதியில அசிடிக் உணவும், மறு பாதியில அல்கலைன் உணவும் இருக்கற மாதிரி பார்த்துக்குவேன். வறுத்த உணவுகள் எனக்குப் பிடிக்காது. காய்கறி, பழங்கள், சாதம், சப்பாத்தினு ஹெல்த்தியான உணவுகளையெல்லாம் `நோ’ சொல்லாமச் சாப்பிட்டிடுவேன். அதேநேரம், ஞாயித்துக்கிழமை என்னோட 'சீட் மீல் டே' (Cheat Meal Day). அந்த ஒருநாள் மட்டும், எனக்குப் பிடிச்ச உணவுகளை, பிடிச்ச அளவுக்குச் சாப்பிடுவேன். மத்த ஆறு நாளும், உணவு விஷயத்துல ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் நான்.

ஃபிட்னெஸ்

வொர்க்அவுட், என்னோட ஃபேவரைட். தினமும் உடற்பயிற்சி செய்யறதால, உடம்பு புத்துணர்ச்சியாகும், மனசு தெளிவாகும். தினமும் எக்சர்சைஸ் பண்ணாதவங்க, மதியத்துக்கு மேல தாக்குப் பிடிக்க முடியாம சாஞ்சிடுவாங்க. தினமும் எக்சர்சைஸ் பண்றதால, நிறைய நன்மைகள் இருக்கு. முக்கியமா, எந்த நோயும் நம்மை நெருங்காது; செம எனர்ஜெட்டிக்கா இருக்கும். தினமும் எக்சர்சைஸ் செய்யறவங்களால, இதைப் புரிஞ்சுக்கவும் உணர்ந்துக்கவும் முடியும். அவங்கவங்களுக்குப் பிடிச்ச அல்லது பழக்கப்பட்ட எக்சர்சைஸைச் செய்யணும். என்னோட ஃபேவரைட், நீச்சல், யோகா. தினமும் நீச்சல் பயிற்சி செய்யும்போது, ரொம்ப எனர்ஜெட்டிகாவும், ரிலாக்ஸாவும் உணர்வேன். யோகா தொடர்பாகவும் நான் படிச்சிருக்கேன் . ஆக, ரொம்ப புரொஃபஷனலா செய்வேன். என்னைப் பொறுத்தவரைக்கும், யோகா மூலமாகக் கிடைக்கிற நன்மைகள், வேற எதுலயும் கிடைக்காது. `பிராணயாமாம்’னு (Pranayama) சொல்லப்படுற மூச்சுப்பயிற்சியை தினமும் செஞ்சாலே, நம்ம உறுப்புகள் ஆரோக்கியமா இருக்கும். `வொர்க்அவுட்னா என்ன?’னு கேட்கிறவங்க, குறைஞ்சபட்சம் இந்தப் பயிற்சியையாவது செய்யணும்" என்கிறார் கணேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!