வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (04/04/2018)

கடைசி தொடர்பு:12:57 (04/04/2018)

உங்கள் குழந்தை எப்போதும் எனர்ஜியுடன் இருக்க வேண்டுமா? #VitaminCDay

பொதுவாகப் பிறந்த குழந்தை எப்போதும் எனர்ஜியுடன் இருக்க, அவர்கள் உடலில் `வைட்டமின் சி' 15 மில்லி கிராம் இருப்பது அவசியம்.

உங்கள் குழந்தை எப்போதும் எனர்ஜியுடன் இருக்க வேண்டுமா? #VitaminCDay

வைட்டமின் - சி...  குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கு உதவி அவர்களை எப்போதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும், நோய் எதிர்ப்புச் சக்தியுடனும் இருக்க உதவுகிறது. மேலும், பெரியவர்களோ, குழந்தைகளோ... உடலில் எங்காவது அடிபட்டுவிட்டால், அந்த இடத்தில் மீண்டும் தோல், தசை நார்கள், ரத்த நாளங்கள் இயல்பாக வளரவும் உதவுகிறது. `வைட்டமின் சி' யின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விளக்கும் விதத்தில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் - 4ம் `வைட்டமின் சி' தினமாகக் கொண்டாடப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு `வைட்டமின் - சி'யை எப்படிப் பெற்று தரலாம் என்பது தொடர்பான தகவல்களைத் தருகிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரேம் குமார்.

குழந்தை

``சில சத்துகள் நம் உடலிலேயே தங்கி, தேவையான போது மட்டும் செயல்படும். ஆனால் `வைட்டமின் சி' நீரில் கரையக்கூடிய நுண் ஊட்டச்சத்து என்பதால், உடலால் தேக்கி வைக்க முடியாது. எனவே, உங்கள் குழந்தைக்கு வைட்டமின் சி சத்து வேண்டுமென்றால், அது நிறைந்த உணவுப் பொருள்களை தினமும் அவர்களுக்குச் சாப்பிட கொடுப்பது அவசியம்.

குழந்தைப் பருவத்திலேயே எலும்புகளின் வளர்ச்சியும், அவை உறுதியாக இருக்கும் தன்மையும்  ஓரளவு நிறைவடைந்து விடுகிறது. எலும்புகளின் உறுதித்தன்மைக்குக் காரணமான கொலாஜென்( Collagen) இணைத்திசு உருவாக்கத்திற்கு வைட்டமின் சி முக்கியப் பங்காற்றுவதால், குழந்தைப் பருவத்திலிருந்தே அது தொடர்பான உணவுகளை நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டியது அவசியம்'' என்ற மருத்துவர் எந்தெந்த காய், கனிகளில் `வைட்டமின் சி' நிறைந்திருக்கிறது என்பதை பற்றிச் சொன்னார்.டாக்டர்.பிரேம் குமார்

வைட்டமின் சி நிறைந்த காய் வகைகள் :

காலிஃபிளவர், குடமிளகாய், புரோக்கோலி, தக்காளி , கீரை வகைகள். நெல்லிக்காய்

.வைட்டமின் சி நிறைந்த பழ வகைகள்:

கொய்யா, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, கிவி.

பொதுவாகப் பிறந்த குழந்தை எப்போதும் எனர்ஜியுடன் இருக்க, அவர்கள் உடலில் `வைட்டமின் சி' 15 மில்லி கிராம் இருப்பது அவசியம். தாய்ப்பாலில் அச்சத்துகள் அதிகம் நிரம்பியிருப்பதால், குழந்தை பிறந்த ஒரு வருடம் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். இது அவர்களின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

குழந்தை

சில குழந்தைகள் உடல் சோர்வு காரணமாகப் படிப்பு மற்றும் இன்ன பிற நிகழ்வுகளில் நாட்டமில்லாமல் இருப்பார்கள். சிலரோ கீழே விழுந்தாலே எழும்பு உடைதல் போன்ற பிரச்னைக்கு ஆளாவார்கள். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவே காரணம். வைட்டமின் சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இருப்பதால் அவை நிறைந்த உணவைத் தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். மிக முக்கியமாகக் கீரையை தினமும் பொரியலாகவோ, கடைசலாகவோ, சாதமாகவோ அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

ஜூஸ்

குழந்தைகளுக்குச் சில சமயம் பற்களிலிருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும். இதைப் பல் விழுவதற்கான அறிகுறி என்று பெற்றோர்கள் தவறாக நினைக்கலாம். ஸ்கர்வி நோயின் அறிகுறி இது. ஆரம்பகட்டத்திலே இதைப் கவனித்து விட்டால் உணவுப் பழக்கம் மூலமே சரி செய்து விட முடியும். ஆரஞ்சு, கொய்யா போன்ற பழங்களில் ஏதேனும் ஒரு பழத்தை குழந்தையின் விருப்பத்துக்கேற்ப துண்டுகளாகவோ, ஜூஸாகவோ கொடுக்கலாம். 

உணவு

தினமும் ஒரு நெல்லிக்காய், ஸ்நாக்ஸ் நேரத்தில் ஒரு பழம், மதிய சாப்பாட்டில் கீரை... இது போதும் உங்கள் குழந்தைக்கான `சி' சத்தைப் பெற்றுத் தந்துவிடலாம். அதற்காக அவர்களை நச்சரிக்காமல் அவர்கள் விரும்பும் விதத்தில் நாள் ஒன்றுக்கு 100 கிராமிலிருந்து 200 கிராம் வரையிலான பழங்கள் அல்லது காய்கறிகளைக் கொடுத்தால் போதுமானது.

இப்படிச் செய்தாலே நோய்க்கு நோ நோ சொல்லலாம்.


டிரெண்டிங் @ விகடன்