Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`2023-ம் ஆண்டுக்குள் 100 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு...' சாத்தியம்தானா?

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7, `உலக சுகாதார தினம்’ என்று அறிவிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டு, 61 நாடுகள் பங்கேற்ற முதல் கூட்டம், இதே நாளில்தான் 1948-ம் ஆண்டு ஆரம்பித்தது. உலக மக்கள் அனைவருக்கும் உயர்தரமான சுகாதார வசதிகளை ஏற்படுத்தித்தருவதுதான் இதன் நோக்கம். இந்த ஆண்டுக்கான உலக சுகாதார தின விழா இலங்கையில் நடைபெறுகிறது. பின்னர், உலகின் பல்வேறு நாடுகளில், பல நிகழ்ச்சிகளும் உரையாடல்களும் நடைபெறவிருக்கின்றன. 

உலக சுகாதார தினம்

ஒவ்வோர் ஆண்டும், உலக சுகாதார தினத்துக்கான கருப்பொருளையும் முழக்கத்தையும்  உலக சுகாதார அமைப்பு (World Health Organization) அறிவிக்கும்.  2018-ம் ஆண்டுக்கான கருப்பொருள்,  `உலகளாவிய சுகாதார பாதுகாப்பு'  (Universal health coverage), முழக்கம், `அனைவருக்கும் சுகாதாரம்’ (Health for all). உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உலக சுகாதார தினத்துக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க இருக்கின்றன. `உலகிலுள்ள எல்லா மக்களையும் சுகாதாரமாக வைத்திருக்க உதவிசெய்து, நோய்களிலிருந்து பாதுகாப்பது மட்டும் இதன் நோக்கமல்ல. தொற்றுநோய்கள், வறுமை, பசிக்கொடுமையைப் போக்கி, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தி, மக்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்துவதற்கும், பாலின சமத்துவத்தை மக்களுக்கு கற்றுக்கொடுக்கவும் இந்த தினத்துக்காக நடைபெறும் நிகழ்ச்சிகள் உதவும்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். 

ஆரம்ப சுகாதார நிலையம்

பல நாடுகள் ஏற்கெனவே சுகாதாரப் பாதுகாப்பில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கின்றன. ஆனால், உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு கிடைக்காமலேயே இருக்கிறது. `உலக நாடுகளின் ஒத்துழைப்பு இருந்தால், 2023-ம் ஆண்டுக்குள் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழங்கிவிடலாம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
உலகில், வளர்ந்த நாடுகள் சுகாதாரத்தில் மேம்பட்டிருக்கின்றன. ஆனால் வளர்ந்துவரும், வறுமையிலிருக்கும் நாடுகளில், சுகாதாரப் பணியாளர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள். இதனால் சுகாதாரம் சீர்கெட்டு, பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆப்பிரிக்காவிலுள்ள பெரும்பாலான நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாள், பர்மா, மியான்மர் , சில கிழக்கு ஆசிய நாடுகள், தென் அமெரிக்காவின் சில நாடுகள் ஆகியவற்றில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொற்றுநோய்கள் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 

குறைந்த சுகாதாரமுள்ள நாடுகளில் வாழும் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு அதன் அவசியத்தை எடுத்துச்சொல்லி, அவர்களையும் இந்த முயற்சியில் பங்கெடுக்கவைத்து ஊக்குவிக்க வேண்டும். ஏற்கெனவே, சுகாதாரப் பாதுகாப்பு இருக்கும் நாடுகளை உதாரணமாகக் காட்டி, அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். அவர்களை வழிநடத்துவதன்மூலம், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை வெற்றிகரமாக அடையலாம். 2018-ம் ஆண்டில், இந்தப் பயணத்தைத் தனது வேலைத்திட்டமாகக் கொண்டிருக்கிறது, உலக சுகாதார நிறுவனம்.

`பணமா, மரணமா? இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை யாருக்கும் இருக்கக் கூடாது’. `உணவா, மருந்தா? எதைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை யாருக்கும் வரக் கூடாது’ என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கேப்ரியீசஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus). உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக, எந்தவிதத் தடையுமில்லாமல் சுகாதாரப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதை டெட்ராஸ் வலியுறுத்துகிறார்.மருத்துவர் புகழேந்தி

உலக சுகாதார தினம், அதன் கருப்பொருளான `சுகாதாரப் பாதுகாப்பு’குறித்து பொதுநல மருத்துவர் புகழேந்தியில் கேட்டோம். 

``உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பது, அனைத்து மக்களுக்கும் மருத்துவத்தையும் சுகாதார உரிமையையும் இலவசமாக வழங்குவதுதான். இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு எங்கே இருக்கிறது? `இங்கே  மருத்துவமனைகளுக்கு வெளிநோயாளிகளாக வருபவர்களில், 75 முதல் 80 சதவிகிதம் பேர் தங்கள் சொந்தப் பணத்தைத்தான் செலவுசெய்கிறார்கள். உள்நோயாளிகளில் 60  சதவிகிதம் பேர் தங்கள் சொந்தப் பணத்தையே செலவுசெய்கிறார்கள். இந்தியாவில், ஆண்டுக்கு 6 கோடியே 50 லட்சம் பேர் மருத்துவத்துக்காகப் பணத்தைச் செலவுசெய்து,  வறுமைக்கோட்டுக் கீழே தள்ளப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இந்திய அரசு மருத்துவத் திட்டங்களில், மருத்துவம் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை  உரிமை என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அதை நடைமுறைப்படுத்தத் தயங்குகிறது. இதில் எங்கே சுகாதாரப் பாதுகாப்பு இருக்கிறது? நாள்தோறும் நாம் உண்ணும் உணவில் 100 பிளாஸ்டிக் துகள்கள் (Micro plastics) இருப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவருகின்றன. நாம் உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர்,  சுவாசிக்கும் காற்று என அனைத்தும் நாளுக்கு நாள் நஞ்சாகிக்கொண்டேவருகின்றன. இதில், சுகாதாரம் எப்படி கிடைக்கும்? இவற்றிலெல்லாம் அரசுக்குப் பொறுப்பு இல்லையா?  சுகாதாரக் கேடுகளை மத்திய, மாநில அரசுகள்தான் சரிசெய்ய வேண்டும். இங்கே எப்படி நடக்கிறதென்றால், பணம் இருப்பவர் மருத்துவம் செய்து பிழைத்துக்கொள்கிறார்;  வறுமையில் இருப்பவர் மருத்துவம் பார்க்க முடியாமல் இறந்துபோகிறார்.

தமிழ்நாட்டிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 16 சதவிகித நிலையங்கள், ஒரே ஒரு மருத்துவரைக்கொண்டே இயங்குவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. சுகாதாரத்  துறைக்காக ஒதுக்கப்படும் நிதியில் 10 சதவிகிதம் மட்டுமே கிராமங்களுக்கு ஒதுக்கப்படுகிறது, மற்றவற்றை நகர்ப்புறங்களுக்கே ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த நிதி எப்படிப்  போதுமானதாக இருக்கும்? டி.பி நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மாத்திரைகள், அரசால் இலவசமாக வழங்கப்படுபவை. ஆனால், 65 சதவிகித காச நோயாளிகள் தனியார்  மருத்துவமனைக்கே செல்கிறார்கள்.

சுகாதாரப் பாதுகாப்பு

ஏனென்றால், `அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் சரியாக இருப்பதில்லை’ என்று வேலூரில் நடத்தப்பட்ட ஆய்வுமுடிவு ஒன்றில்  குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும், ஏழ்மையான நிலையிலிருக்கும் ஒரு காச நோயாளி, மருத்துவமனைக்குச் செல்வதா அல்லது வேலைக்குச் செல்வதா என்று யோசிக்கும்போது, வருமானத்துக்காக  வேலைக்குச் செல்லும் முடிவையே எடுக்கிறார். அதனால்தான், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மாலை நேரங்களிலும் இயங்கினால், வேலைக்குச் செல்லும் நோயாளிகள்  மருத்துவம் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று பல மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். ஆனாலும், அதை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. வறுமையில் இருப்பவர்,  தன் நோயைப் பற்றி கவலைப்பட மாட்டார்; வேலைக்குத்தான் செல்வார். 

இங்கே பல இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், மருத்துவர்கள் இருப்பதில்லை. என்னதான் உலக சுகாதார நிறுவனம்,  `உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு’ என்று கருப்பொருள் வைத்தாலும், நம் நாட்டின் நிலை இப்படித்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள்தான்  செய்ய வேண்டும். வெறும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement