பார்வையைப் பாதிக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்... காரணங்கள், எளிய தீர்வுகள்! #ComputerVisionSyndrome

பார்வையைப் பாதிக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்... காரணங்கள், எளிய தீர்வுகள்! #ComputerVisionSyndrome

`ந்த ஆபிஸ்ல கண்ணாடி போட்ட ஒருத்தர் இருப்பார்' - முன்பெல்லாம் ஒருவரை அடையாளம் காட்ட இப்படிக் குறிப்பிடுவார்கள். சில  வருடங்களுக்கு முன்னர்கூட கண்ணாடி அணிந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருந்தது. இப்போது 10 பேருக்கு நான்கு பேர் கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில்  ஒருவரை அடையாளம் காட்ட, `அந்த ஆபிஸ்ல கண்ணாடி போடாதவர் ஒருத்தர் இருப்பார்’ என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

அலுவலகம்

இன்றைக்கு, பார்வைக்குறைபாட்டுக்கு டி.வி., மொபைல்போனுக்கு அடுத்தபடியாக கம்ப்யூட்டர்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. பல வீடுகளில் சாதாரண வீட்டு உபயோகப் பொருள்களுக்கு இணையாக கம்ப்யூட்டரும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. 
சதா கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறவர்கள்கூட ஓய்வு நேரத்திலும் வீடியோ, ஃபேஸ்புக், ட்விட்டர்... போன்றவற்றைப் பார்த்தல் என கண்களுக்கு வேலை கொடுத்தபடிதான் இருக்கிறார்கள். இப்படி எந்நேரமும் கம்ப்யூட்டர் வேலையில் மூழ்கிக்கிடப்பவர்கள் எதிர்கொள்ளும் கண் பாதிப்புகளில் முக்கியமானது 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்.' (Computer Vision Syndrome) ``சாதாரணமாக கண்களில் எரிச்சல், கண்கள் வறண்டு போவது இப்படித்தான் இந்தப் பிரச்னை ஆரம்பிக்கும். பிறகு, கண்ணில் கட்டி ஏற்படுத்துவதுவரை கொண்டுபோய் விட்டுவிடும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். 

கண்களைப் பாதிக்கும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்

இன்றைக்கு ஹோட்டலிலிருந்து ஐ.டி கம்பெனி வரை அனைத்து துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு அவசியமாகிவிட்டது. பலருக்கும்  கம்ப்யூட்டரோடுதான் வேலை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இப்படிப்பட்டச் சூழலில் 'எனக்கு கம்ப்யூட்டர் வேண்டாம்' என்று ஒதுங்கவும் முடியாது. சரி... இதற்கு என்னதான் தீர்வு?

கண் மருத்துவர் திரிவேணி வெங்கடேஷிடம் பேசினோம்...கண் மருத்துவர் திரிவேணி

``கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இப்போது கண் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. அந்தப் பிரச்னைகளில் முக்கியமான ஒன்றுதான் 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' அல்லது 'டிரை ஐ சிண்ட்ரோம்' (Dry Eye Syndrome) என்கிறோம். இது ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமானவை... கண் இமைகளை இமைக்காமல் இருப்பதும், கண் தசைகளில் ஏற்படும் அழுத்தமும்தான்.

உடலில் ரத்த ஓட்டம் செல்லாத ஒரே உறுப்பு கண் கருவிழி. உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் ரத்தத்தின் மூலம்தான் கடத்தப்படுகிறது. ஆனால், ரத்த ஓட்டம் இல்லாததால் கருவிழிக்கு ரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. கண்ணீர் மூலம்தான் கருவிழி நேரடியாக ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது. போதிய ஆக்ஸிஜன் கிடைக்காத நேரத்தில், கண்ணில் நீர் வற்றிவிடும். அடிக்கடி கண்ணைச் சிமிட்டுவதன் மூலம் கண்ணீரைப் பெருக்கி, ஆக்ஸிஜனைப் பெறுகிறது கருவிழி.

கம்ப்யூட்டர் மானிட்டரை கூர்ந்து பார்க்கும்போது கண் சிமிட்டுவது இயல்பாகவே குறைந்துவிடும். வழக்கமாக ஒரு நிமிடத்துக்கு 14-16 முறை கண் சிமிட்டுகிறோம். கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது ஐந்து அல்லது ஆறு முறைதான் சிமிட்டுகிறோம். 
இது கண்களில் அரிப்பு, கண் எரிச்சல், உறுத்தல், கண்கள் உலர்ந்து போதல் போன்றவற்றை ஏற்படுத்தும். சில நேரங்களில், கண்களில் மணல் விழுந்து  உறுத்துவதுபோல ஓர் உணர்வையும் ஏற்படுத்தும். இந்தப் பிரச்னைகள் இருந்தால், கண் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

கண்களில் செய்யப்படும் பரிசோதனையில் அடிப்படையாக ஒன்று உண்டு. சொட்டு மருந்தை (Lubricant drops) கண்களில் ஊற்றிக்கொள்ளச் சொல்வார்கள். பிரச்னைக்கேற்ப குறிப்பிட்ட நேர இடைவெளியில் இதைக் கண்களில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இப்போது, டிராப்ஸுக்கு பதிலாக, ஜெல் (Gel) வகை மருந்தும் வந்துவிட்டது.

மானிட்டரை கவனியுங்கள்!

இந்தப் பிரச்னை வராமல் தடுக்க, முதலில் கம்ப்யூட்டர் மானிட்டரை நம் பார்வைக்குக் கீழே இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, நேருக்கு நேராகப் பார்க்கும்படி மானிட்டர் இருக்கக் கூடாது. மானிட்டரின் வெளிச்சம் (Brightness) கண்களை உறுத்தும் வகையில் இருக்கக் கூடாது. சாதாரணமாக உங்களால் பார்க்க இயலும் சிறிய எழுத்தைவிட மூன்று மடங்கு பெரிதாக வைத்து மானிட்டரைப் பயன்படுத்தலாம். கண்களுக்கும் மானிட்டருக்கும் 35 செ.மீ இடைவெளியும், ஏற்கெனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள் 80 செ.மீ வரை இடைவெளியும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

கண்கள்

இமைக்க மறக்காதீர்கள்!

அடிக்கடி கண்களை மூடி, திறக்க வேண்டும். இதை வழக்கப்படுத்திக்கொள்ள கீபோர்டில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் என்டர் (Enter), ஸ்பேஸ் (Space), ஷிஃப்ட் ( Shift)... போன்ற ஏதாவது ஒன்றை அழுத்தும்போதெல்லாம் `ஒருமுறை கண் இமைக்க வேண்டும்’ எனப் பழக்கப்படுத்திகொள்ளலாம்.  

20-20-20 ஃபார்முலா!

தூரமாக இருக்கும் பொருள்களைப் பார்க்கும்போது கண்களின் தசைகள் தளர்வடைந்து (ரிலாக்ஸாக) இருக்கும். அருகில் இருக்கும் பொருளைப் பார்க்கும்போதுதான் கண்களின் தசைகள் வேகமாக இயங்கி, இறுக்கமடையும். எனவே, 20- 20- 20 என்ற விதியைப் பின்பற்ற வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கொருமுறை, 20 அடி தொலைவில் உள்ள ஏதோ ஒரு பொருளை 20 விநாடிகள் பார்க்க வேண்டும்.

கம்ப்யூட்டர் கண்ணாடி பயன்படுத்துங்கள்!

மானிட்டர் மூலம் வெளிப்படும் ஒளியைக் கட்டுப்படுத்தும் 'ஆன்டி ரெஃப்ளெக்டிவ் கோட்டிங் ' (Anti-reflective coating) வகைக் கண்ணாடிகளை கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது அணிய வேண்டும். இந்த வகைக் கண்ணாடிகளை,  பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் அவர்கள் அணியும்  லென்ஸுடன் இணைத்துப் பயன்படுத்தலாம்.

கண் பிரச்னை

ஏ.சி அறை... கவனம்!

ஏ.சி அறையில், காற்றில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். அதனால், விரைவில் கண் வறட்சி ஏற்பட்டுவிடும்.  கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது கண்களைச் சிமிட்டுவது சில சமயங்களில் சிரமமாகிவிடும். அவ்வப்போது, சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகளைச் சுழற்ற வேண்டும். 

எழுந்து நடைபோடுங்கள்!

கண் இமைகளைத் தேவையான அளவுக்கு அசைக்காதபோது கண்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்துவிடும். அதனால் கண்களில் வலி ஏற்படும். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும்விதமாக, கம்ப்யூட்டரைவிட்டு எழுந்து சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம். 

வெளிச்சத்தில் கவனம்!

தலைக்கு மேல் இருந்து வரும் ஒளியோ, ஜன்னலில் இருந்து வரும் ஒளியோ உங்கள் கண்களில் நேரடியாகப்படக் கூடாது. அப்படி ஒருவேளை பட்டால் அதை உடனே மறைக்க வேண்டும். உங்களுக்குத் தொல்லை தரும் மின் விளக்குகளை அணைத்துவிடலாம். அறை இருட்டாக இருந்து மானிட்டர் மட்டும் வெளிச்சமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை இருக்கும்’’ என்கிறார் திரிவேணி வெங்கடேஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!