Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`இவர்கள் ஸ்பெஷல் கிட்ஸ் அல்ல... சூப்பர் கிட்ஸ்’ - ஏ.டி.ஹெச்.டி... அறிகுறிகள், சிகிச்சைகள்! #ADHDAlert

`வங்க ஸ்பெஷல் கிட்ஸ் இல்லை, சூப்பர் கிட்ஸ்’ - ஏ.டி.ஹெச்.டி பிரச்னையுள்ள குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'ஹைக்கூ' படத்தில் இப்படி ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. இது உண்மையே. `ஏ.டி.ஹெச்.டி ஒரு நோய் அல்ல, மூளை நரம்பில் ஏற்படும் ஒருவகை மாற்றம்’ என்கிறது மருத்துவம். ஒலிம்பிக் போட்டியில் 28 முறை பதக்கம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸ் (Micheal Phelps), நடனத்தில் புகழ்பெற்ற கரீனா ஸ்மிர்ன்ஆஃப் (Karina Smirnoff), வில் ஸ்மித் (Will Smith), ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் (Stephen Hawkings)... எல்லோருமே `ஏ.டி.ஹெச்.டி' எனப்படும் 'அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர்' (Attention deficit hyperactivity disorder) குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே. `ஏ.டி.ஹெச்.டி பற்றிய விழிப்பு உணர்வு இங்கே குறைவு. குழந்தைக்கு இந்தக் குறைபாடு வந்துவிட்டது தெரிந்தால் பயப்படும் பெற்றோரே அதிகம். உண்மையில் இந்தக் குறைபாடு வந்துவிட்டால் பார்த்து பயப்படவேண்டியதில்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள். `இந்தக் குறைபாடு இருப்பதைக் குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சரிசெய்துவிடலாம். இல்லையென்றால், இந்தக் குறைபாட்டோடு குழந்தை வளரவேண்டியிருக்கும். ஏ.டி.ஹெச்.டி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒன்று, இந்தப் பிரச்னையோடு வளர்கிறது’ என்கிறது ஓர் ஆய்வு!

ஏ டி ஹெச் டி

ஏ.டி.ஹெச்.டி-யின் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் மூளை மற்றும் உளவியல் நிபுணர் கௌதம் தாஸ்...மருத்துவர் கௌதம் தாஸ்

``ஏ.டி.ஹெச்.டி பாதிப்புள்ள குழந்தைகள் மிகவும் சுட்டித்தனமாக, அதே நேரத்தில் கவனக்குறைவோடு இருப்பார்கள். இவர்களால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. வெகுநேரத்துக்கு ஒரே இடத்தில் இருக்க முடியாது. எங்கேயாவது சத்தம் கேட்டால் அங்கே ஓடிவிடும் இவர்கள், விளைவைப் பற்றி யோசிக்காமல் செயல்படுவார்கள். எதற்காகவும் காத்திருக்கும் பொறுமை இவர்களுக்கு இருக்காது. எதையும் நினைத்தவுடன் முடித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.

இந்தக் குறைபாடுள்ள குழந்தைகள், பள்ளியிலும் வீட்டிலும் நிதானமில்லாமல் பரபரவென்று வேலைகளைச் செய்வார்கள். `மூட் ஸ்விங்' (Mood Swing), உணர்ச்சிக் கட்டுப்பாடின்மை போன்ற பிரச்னைகளும் இவர்களுக்கு இருக்கும். ஏ.டி.ஹெச்.டி குறைபாடுள்ள பெரியவர்கள், பெரும்பாலும் ஞாபகமறதிக்காரர்களாக இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சிறுசிறு பொருள்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். எதிலும் ஒட்டாமல் தனி உலகில் வாழ்வார்கள். பணம் தொடர்பான விவரம், முடிக்கப்பட வேண்டிய அலுவல் வேலைகள், மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய தேதிகள் இவற்றையெல்லாம்கூட மறந்துவிடுவார்கள். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை... என `மூட் ஸ்விங்' (Mood Swing) இவர்களுக்கு ஏற்படும்.

இன்றையச் சூழல் மாற்றங்கள்தான் ஏ.டி.ஹெச்.டி போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் என நினைப்பது தவறு. ஒவ்வொரு காலத்திலும் ஹைபர் ஆக்டிவிட்டி பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். மூளையிலுள்ள நரம்புக்கடத்திகளின் (Neurotransmitters) செயல்பாடு குறைவாக இருப்பதுதான் ஏ.டி.ஹெச்.டி எனக் கண்டறியப்பட்டாலும், எந்தக் காரணத்தால் நரம்புக்கடத்திகள் மெதுவாகச் செயல்படுகின்றன என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை. `இந்தக் குறைபாட்டுக்கு மரபியல் காரணமாக இருக்கலாம்’ என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஏ.டி.ஹெச்.டி

தீர்வுகள்...

குழந்தை வளர்ப்பில் சில விஷயங்களில் கவனம் எடுத்துக்கொண்டு, அக்கறையுடன் செயல்பட்டால் இவர்களைவிடச் சிறப்பான குழந்தைகள் இல்லை. இந்தக் குழந்தைகளை எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பயணம் இருக்கிறது. `என் குழந்தை ரொம்ப சேட்டை பண்ணுறான். ஒரு இடத்துல உட்காரவே மாட்டேங்கிறான்; வீட்டுல தனியா இருந்தா எல்லாத்தையும் உடைச்சுடுறான்...' இப்படிப் புகார் கடிதம் வாசிக்கும் நிறைய பெற்றோர்கள் என்னிடம் வருகிறார்கள். ஹைபர்ஆக்டிவிட்டி குழந்தைகளுக்கும், சாதாரணக் குழந்தைகளுக்கும் இருக்கும் வித்தியாசங்களை உணர முடியாததால், சில பெற்றோர் திணறுவதைப் பார்க்க முடிகிறது. பொதுவான குழந்தைகளைப் பார்த்து, பிள்ளைக்குப் பிரச்னையோ என வருபவர்களும் உண்டு. அதே நேரத்தில், ஹைபர்ஆக்டிவிட்டி குழந்தையை 'அவன் அவங்க அப்பா மாதிரி' என்று சொல்லி மருத்துவமனைக்கே அழைத்து வராதவர்களும் இருக்கிறார்கள்’’ என்கிறார் கௌதம் தாஸ்.

பெற்றோர் - குழந்தை

தொடர்ந்து, ``ஏ.டி.ஹெச்.டி' இருப்பவர்களின் மிகப் பெரிய பலம், அவர்களுடைய ஐ.க்யூ லெவல்! சராசரியாக ஒருவருக்கு 100-110 வரைதான் ஐ.க்யூ இருக்கும்; ஆனால், ஏ.டி.ஹெச்.டி குறைபாடு உள்ளவர்களுக்கு அது 130-ஐத் தாண்டும். இவர்களுடைய பலவீனம், கவனச்சிதறல். அந்த கவனச்சிதறலை சரிசெய்து, சீரான நிலைமைக்கு அவர்களைக் கொண்டுவருவதுதான் சவால்’’ என்றவர், அதற்கான தீர்வாக பேரன்டிங் முறையில் மாற்றம் வேண்டும் என்பதை முன்வைக்கிறார். 

``இவர்கள், வேகமாக ஓடும் குதிரையைப் போன்றவர்கள். மேடு, பள்ளம் வலம், புறம் என எல்லாத் திசைகளிலும் ஓட வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். அப்போது அவர்களது கவனம் சிதறாமல், சரியான திசையில் எப்படிப் பயணிப்பது என்பதை பெற்றோரால் மட்டுமே சொல்லித்தர முடியும்.

சுட்டி குழந்தைகள்

சிகிச்சைகள்...

* ஏ.டி.ஹெச்.டி இருந்தால் மூளையில் ரசாயன மாற்றங்கள் நிகழும். அதைச் சரிசெய்வதற்கான மருந்து, மாத்திரைகள் தரப்படும். இந்த மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையுடன் கொடுக்கப்படவேண்டியது அவசியம்.

* இந்தக் குறைபாடுள்ளவர்கள் மூளையை அதிகம் தூண்டும் திறன் கொண்ட இனிப்புப் பொருள்கள், நிறமூட்டப்பட்ட பொருள்கள், ஜங்க்ஃபுட்ஸை குறைவான அளவில் சாப்பிட வேண்டும்.

* மிகச்சிறிய வேலைகள், பயிற்சிகளைக் கொடுத்து அவற்றுக்கு அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயலையும் பாராட்டவேண்டியது அவசியம். ஒழுங்குமுறைகளை அவர்களுக்குப் போதிக்கவேண்டியதும் அவசியம்.

* முன்னர் சொன்னதுபோல அவர்களது கவனச்சிதறலை ஒழுங்குபடுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்துவதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

* மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைபெற்று, நடத்தைவழி சிகிச்சை (Behaviour Therapy) மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் கௌதம் தாஸ்.

குழந்தை

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸின் (Micheal Phelps) அம்மா ஒரு பேட்டியில், ``என்னுடைய மகனுக்கு ஒன்பது வயது இருக்கும்போது, ஒருமுறை அவனுடைய டீச்சர் என்னைக் கூப்பிட்டுவிட்டாங்க. அவனால எதுலயும் கவனம் செலுத்த முடியலைனு சொல்லி கோபமாப் பேசினாங்க. என்னால அதைத் தாங்கிக்க முடியலை. அவனை நான் புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். அவனோட உலகத்துக்குள்ள போறதுக்காக, `பேரன்டிங்' முறையில் சில மாற்றங்களைச் செஞ்சேன். அவன் எப்போல்லாம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாம இருக்கானோ, அப்போல்லாம் `C' என்ற ஆங்கில எழுத்தோட வடிவத்தை கைகளால் செய்து காட்டுவேன். `Compose Yourself' என்பதுதான் அதன் உள்ளர்த்தம். ஒருமுறை நான் ரொம்பச் சோர்வா இருந்தப்போ, மைக்கேல் அதையே எனக்குச் செய்தான். அவனோட மாற்றம், அங்கேதான் ஆரம்பிச்சுது’’ என்றார். ஆக, நம்பிக்கை தரும் பெற்றோரும் சுற்றமும் மட்டுமே ஏ.டி.ஹெச்.டி குழந்தைகளுக்குத் தேவை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement