60% படுக்கைகள் இலவசம், 40% பேருக்கு இலவச சிகிச்சை... - வைரவிழா கொண்டாடும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம்!

வைரவிழா கொண்டாடிய அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைப் பற்றி தெரிந்துகொள்ள...

60% படுக்கைகள் இலவசம், 40% பேருக்கு இலவச சிகிச்சை... - வைரவிழா கொண்டாடும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம்!

`புற்றுநோயா... அவ்வளவுதான்... அதைக் குணப்படுத்தவே முடியாது' என்றிருந்த எண்ணத்தை மாற்றி, அதுவும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய்தான் என்ற நம்பிக்கையை விதைத்தது அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம். அதன் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கட்டப்பட்ட வைரவிழா கட்டடத்தை இன்று (12.4.2018) திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப்பணிக்குத் தமிழக அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் நிதிஉதவி வழங்கப்பட்டது. 

வைரவிழா

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை உருவாக்கியவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. புண்ணியகோடி முதலியார் என்பவர் தானமாக அளித்த நிலத்தில், இந்தியப் பெண்கள் சங்கத்திடமிருந்து பெற்ற ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியைக் கொண்டு இந்த மருத்துவமனையை உருவாக்கினார் அவர்.  

1952 -ம் ஆண்டு, அக்டோபர்  10- ம் தேதி அப்போதைய பிரதமர் நேரு இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 12 படுக்கைகளுடன்,  அடையாறு கெனால் பேங்க் சாலையில் 1954- ம் ஆண்டு ஜூன் 18 - ம் தேதி முதல் இந்த மருத்துவமனை செயல்படத் தொடங்கியது.  தற்போது சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் இயங்கிவரும் ஆராய்ச்சிமையம் 1982 - ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது 535 படுக்கைகளுடனும், பல்வேறு நவீன வசதிகளுடனும் செயல்பட்டு வருகிறது. வருடத்துக்குச் சராசரியாக 1.41 லட்சம் நோயாளிகள் இங்கு சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர். ஆண்டுதோறும் 15 ஆயிரம் புதிய நோயாளிகள் இந்த மையத்துக்குச் சிகிச்சை பெற வருகிறார்கள். 1974 - ம் ஆண்டு, இந்த மருத்துவமனையைப் புற்றுநோய் ஆய்வு மற்றும் சிகிச்சைக்கான மண்டல மையமாக மத்திய அரசு அறிவித்தது. 

மொத்தமுள்ள 535 படுக்கைகளில், அறுபது சதவிகிதம் இலவச சிகிச்சைக்காகவும், நாற்பது சதவிகிதம் கட்டண சிகிச்சைக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிகிச்சையைப் பொறுத்தவரை 100 பேரில் நாற்பது பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுபது பேருக்கு சாதாரணக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.  

சிகிச்சை

கீமோதெரபி, கதிர்வீச்சு, அறுவை சிகிச்சை எனப் புற்றுநோய்க்குப் பல்வேறு சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவும் (Pediatri oncology) தனியாக இயங்குகிறது. இவைதவிர, நோயாளிகளை மன ரீதியாக வலிமைப்படுத்த தனிப்பிரிவும் (pshycho onclogy), புற்றுநோய் தடுப்புத் தொடர்பான ஆராய்ச்சித் துறையும் (Molecular oncology) செயல்பட்டு வருகிறது.

தெற்காசியாவின் முதல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் இதுதான். கதிரியக்கப் புற்றுநோய் மருத்துவத் துறையும் (Radiation oncology department) , குழந்தைகளுக்கான புற்றுநோய்த்துறையும் (Pediatri oncology department) இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் ஏற்படுத்தப்பட்டது. 

அதிநவீன எக்ஸ்ரே மெஷின்கள், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின்கள், 3D, 4D வசதி கொண்ட அல்ட்ராசோனிக் மெஷின்கள், எனப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான நவீன வசதிகள் அனைத்தும் இங்குள்ளன. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய, `டிஜிட்டல் மெமேகிராபி' ( Digital Mammography ) வசதியும் இருக்கின்றன. புற்றுநோய் பற்றிய உயர் மருத்துவப் படிப்புகளான Doctorate of Medicine in Medical Oncology, M.Ch. (Surgical Oncology), Master of Chirurgiae in Surgical Oncolog ஆகிய படிப்புகள் தெற்காசியாவிலேயே இங்குதான் முதன்முதலில் கொண்டுவரப்பட்டன. 80 மாணவர்கள் இங்கு ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். 

விழிப்பு உணர்வு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையாகவும், தமிழகத்தின் மருத்துவப் பெருமிதங்களில் ஒன்றாகவும் செயல்பட்டு வரும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், நூற்றாண்டு கொண்டாட வாழ்த்துவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!