Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`தாய்ப்பால் கொடுத்தால், ஆண்டுக்கு 8 லட்சம் குழந்தைகளின் இறப்பைத் தடுக்கலாம்!’ #BreastFeeding

பிறந்த குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக தாய்ப்பால் கொடுத்தாலே, உலக அளவில் ஆண்டுக்கு 8.2 லட்சம் குழந்தைகளின் இறப்பைத் தடுத்துவிடலாம்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதோடு, தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக தாய்மார்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் 10 அம்சங்களைக்கொண்ட வழிமுறைகளையும் அறிவுறுத்தியிருக்கிறது.

தாய்ப்பால்

குழந்தைகள் இறப்பு என்பது மிகச் சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய விஷயமல்ல. உலகளவில் நாளொன்றுக்கு பதினைந்தாயிரம் குழந்தைகள் வீதம் ஆண்டுக்கு 56 லட்சம் பச்சிளம் குழந்தைகள் இறந்துபோகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, ஐந்து வயதுக்குட்பட்ட ஆயிரம் குழந்தைகளில் 41 குழந்தைகள் இறந்துபோகிறார்கள்.

1,000 குழந்தைகளில், பிறந்து ஒரு மாதத்துக்குள் 25 குழந்தைகளும், ஒருவயதுக்குள் 35 குழந்தைகளும், ஐந்து வயதுக்குள் 43 குழந்தைகளும் இறந்துபோகிறார்கள். பிறக்கும்போது இறக்கும் குழந்தைகள் மிகக்குறைவுதான்; பிறந்து ஒரு மாதம் அல்லது ஒரு வருடத்தில்தான் அதிகமான குழந்தைகள் இறக்கிறார்கள்.

இவர்களில் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கும் குழந்தைகளைவிட நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை போன்ற தடுக்கக்கூடிய மிகச் சாதாரணமான பாதிப்புகளால் இறந்துபோகும் குழந்தைகளே அதிகம். `இதேநிலை தொடர்ந்தால், 2030-ம் ஆண்டுக்குள் குழந்தைகளின் இறப்பு ஆண்டுக்கு 6 கோடியாக உயரும்’ என்று உலக சுகாதார நிறுவனம் (World Health Organasation), யுனிசெஃப் (UNICEF), உலக வங்கி (World Bank of Group) ஆகிய அமைப்புகள் இணைந்து 2016-ம் ஆண்டில் எடுத்த ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

குழந்தைகள்

இந்தநிலையில் `தாய்ப்பாலின் மூலமாக ஆண்டுக்கு எட்டு லட்சம் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்’ என்கிற தகவல் சற்று ஆறுதலாக இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை குறித்தும், தமிழ்நாட்டில் தாய்ப்பால் குறித்து இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேசிய சுகாதாரத் திட்ட குழந்தைகள் நல சிறப்பு ஆலோசகர் ஜெ.குமுதா விளக்குகிறார்...

``குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும்; பிறந்த ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்; ஆறு மாதங்களுக்குப் பிறகு மற்ற உணவுகள் கொடுத்தாலும், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடக் கூடாது. குறைந்தது இரண்டு வருடங்களுக்கு தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும்.

இது, உலக சுகாதார நிறுவனத்தால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் விஷயம்தான். அதில் இப்போது சில திருத்தங்களைச் செய்து வெளியிட்டிருக்கிறது. அதன்படி, `குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும்’ என்பதை அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரு கொள்கையாக வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையிலிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் தாய்மார்களிடம் இது குறித்து அவசியம் வலியுறுத்த வேண்டும். கர்ப்பமாக இருக்கும்போது தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், வழிமுறைகள் குறித்தும் மருத்துவமனை ஊழியர்கள் விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை பிறந்தவுடனே, தாயின் மார்பில் குழந்தையைப் படுக்கவைக்க வேண்டும். குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் அவசியம் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னரும் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். மருத்துவமனைகளில், தாயும் சேயும் எப்போதும் அருகருகேதான் இருக்க வேண்டும். தனியாகத் தொட்டிலில் குழந்தைகளைப் படுக்கவைக்கக் கூடாது. (அப்போதுதான் தாய்ப்பால் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும்).

புட்டிப் பால் தவிர்க்கவும்

தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தால், குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். தேவையில்லாத நோய்கள் நெருங்காது. அதற்குக் காரணம், தாய்ப்பாலில்தான் எரிசக்தியும் புரதமும் சரியான அளவில் இருக்கின்றன. அதனால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் உடலில் உருவாகாது.

தாய்ப்பாலுக்குப் பதிலாக மற்ற உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்களின் உடலின் தேவையில்லாத கொழுப்புகள் சேரும். அதுவே உடல் பருமன், ரத்தக்குழாய்களில் கொழுப்பு அடைப்பு, சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். தாய்ப்பால், குழந்தைப் பருவத்தில் மட்டுமல்ல, வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னரும் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்கிறது.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, கொடுக்கும் தாய்மார்களுக்கும் தாய்ப்பால் நல்லது. தாய்ப்பால் கொடுப்பதால்தான் மார்பகத்தின் வளர்ச்சி முழுமையடையும். தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் பெண்களின் உடலில் அது முழுமை அடையாது. செல்கள் சீராக இல்லாமல் இருப்பதால்தான் மார்பகப் புற்றுநோய் உண்டாகிறது. அதுமட்டுமல்ல, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. உடலிலிருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் குறைகிறது.

மார்பகப் புற்றுநோய்

இந்திய அரசின் சார்பாக `மா’ (Mothers’ absolute affection) என்னும் பெயரில் இதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசும் இதனைத் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்திவருகிறது. அதன்படி, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பச்சிளம் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தவிர்த்த மற்ற உணவுகள் கொடுக்கப்படுவது தடுக்க முயற்சிகளும் நடக்கின்றன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு இது குறித்து பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மருத்துவப் படிப்பிலும் தாய்ப்பால் தொடர்பான பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தேர்வுகளிலும் தாய்ப்பால் தொடர்பாக அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

தாய்ப்பால் சுரக்காத, குறைவாக சுரக்கும் பெண்களுக்காக சென்னை மற்றும் மதுரை, தஞ்சாவூர், தேனி போன்ற தமிழ்நாட்டின் பல நகரங்களில் தாய்ப்பால் வங்கிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைக்கு நாளொன்றுக்கு எட்டு முதல் பத்து முறை பால் கொடுக்க வேண்டும். இரண்டு முதல் மூன்று மணி நேர இடைவெளியில் பால் கொடுக்க வேண்டும்.

வங்கி

தாய்ப்பால் கிடைக்கவேண்டியது குழந்தையின் உரிமை; அதனைக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு (மற்ற உணவுகளைக் கொடுக்க ஆரம்பித்தவுடன் ) பலர் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். அது தவறு. மற்ற உணவுகள் கொடுத்தாலும், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

`தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறைந்துவிடும்’ என்ற தவறான கருத்து நிலவிவருகிறது. கர்ப்பகாலத்தில் உடலில் தங்கும் கொழுப்புகள் தாய்ப்பால் கொடுத்தால் வேகமாகக் கரையும். கர்ப்பகாலத்துக்கு முன்னதாக இருந்த பழைய உடலமைப்பைப் பெறுவதற்கு வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டாம். தாய்ப்பால் கொடுத்தாலே போதும்’’ என்கிறார் குமுதா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement