Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகப் பார்க்கும் மனநிலை தருவது எது தெரியுமா?’’ - லிங்குசாமி #LetsRelieveStress

யக்குநர் லிங்குசாமி, `ஆனந்தம்' தொடங்கி `ரன்’, `பையா’, `சண்டக்கோழி’… எனத் தொடர் வெற்றிப் படங்களைத் தந்தவர் . தயாரிப்பாளராக களமிறங்கி `மஞ்சள் பை’, `சதுரங்க வேட்டை’ எனப் பல அசத்தல் படங்களைத் தமிழுக்குத் தந்தவர். 'லிங்கு' எனும் ஹைக்கூ கவிதைத் தொகுப்பின் வாயிலாகக் கவிஞராகவும் அறிமுகமானவர். அவர் தனக்கு ஏற்படும் நெருக்கடிகளில் இருந்தும் மன அழுத்தத்தில் இருந்தும் எப்படி மீண்டு வருகிறார் என்பது குறித்து இங்கே விவரிக்கிறார்...

லிங்குசாமி

``லைஃப்ல மனஅழுத்தத்தை நான் ஸ்கூல் டயத்திலயோ காலேஜ் டயத்திலயோ அனுபவிச்சதில்லை. நாங்க அண்ணன் தம்பிகள் நான்கு பேர். அப்பா ரொம்ப ஜாலியான டைப். நானும் என் தம்பி போஸும்தான் வயசுல சின்னவங்க. அதனால எங்களுக்கு எந்தக் கஷ்டமும் தெரியாது. பணக் கஷ்டம்னா என்னன்னு தெரியவே தெரியாது. 

ஆனா, எங்க வீட்டுக்குப் பெரிய அளவுல பணக் கஷ்டம் வந்திருக்கு. அதையெல்லாம் எங்க பெரிய அண்ணன் வளர்ந்ததுக்கப்புறம் அவரே சமாளிச்சிட்டார். எனக்கும் என் தம்பி போஸுக்கும் ஒரு கவலை, ஒரு பிரச்னை ஒரு நெருக்கடினு எதுவும் வந்தது இல்லை. மெட்ராஸுக்கு சினிமாவுக்குனு வந்த பிறகு, இங்கே கொஞ்சம் இளமையில் வறுமைதான். காலைச் சாப்பாடுங்கிறதே ஒரு கனவுதான். ஒரு நாளைக்கு ஒரு வேளை, இரண்டு வேளைதான் சாப்பிடுவோம். ஆனாலும், சினிமாவுல அடுத்தகட்டத்துக்குப் போய்ப் படம் பண்ணப் போறோங்கிற நம்பிக்கை. இங்கே கிடைச்ச நண்பர்களைவெச்சு ஓரளவு சமாளிச்சிட்டோம். 

என் வாழ்க்கையில ரொம்ப பிளைண்டா எனக்கு என்ன நடந்ததுன்னே தெரியாத அளவுக்கு ஒரு சம்பவம்... என்னை ரொம்பக் கஷ்டப்படுத்திடுச்சு. அதிலிருந்து நான் மீள்வதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டுப்போயிட்டேன். 

லிங்குசாமி

நான் முதன்முதலா படம் பண்ணப்போற தயாரிப்பாளர்... அவர்கிட்ட என் படத்தின் கதையைச் சொல்லி ஓகே பண்ணிவெச்சிருக்கேன். அவர் திடீர்னு ஒருநாள் போன் பண்ணி `ஒரு பார்ட்டிக்குப் போகணும். கிளம்பி வா...'னு சொன்னார். எனக்கு என்னைப் பத்தி ஓரளவுக்கு தெரியுங்கிறதால, `சார், நீங்க போயிட்டு வந்திடுங்க'னு சொல்லித் தவிர்த்தேன். ஆனால், அவர் வலுக்கட்டாயப்படுத்தி என்னைக் கூட்டிக்கிட்டுப் போனார். அங்கே பார்ட்டியில என்ன நடந்ததுன்னே இன்னிக்கிவரைக்கும் எனக்குத் தெரியாது. எனக்கு அது துளியும் ஞாபகம் இல்லை. 

மறுநாள் காலையில எப்பவும்போல போன் பண்ணினேன். அவர் போனையே எடுக்கலை. எடுத்தாலும், போனை `கட்’ பண்றார். அப்புறம் அவர் சத்தமா திட்டிப் பேசிட்டுப் போனைவெச்சிட்டார். `ஆஹா, இவருகிட்டத்தானே `ஆனந்தம்' படத்து கதையைச் சொல்லி படம் பண்ணுவதாக இருக்கோம். இப்படி ஆயிடுச்சே... இதோட நம்ம லைஃப் தொலைஞ்சுது. அவ்வளவுதான்’னு நினைக்க நினைக்க மனசுக்கு ரொம்பக் கஷ்டமாகவும் மன உளைச்சலாகவும் இருந்துச்சு. `என்ன சார் நடந்துச்சு?'னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறார். 

என்னோட ரூம் மேட் பிருந்தாசாரதி... அவர்தான் என் படங்களுக்கு டயலாக் ரைட்டர். அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிப் புலம்பிட்டேன். `அந்தத் தயாரிப்பாளர் என்னமோ ஒரு தப்பான வார்த்தையைச் சொல்லி என்னைத் திட்டி போனைவெச்சிட்டார். போச்சுய்யா. மொத்தமும் போச்சுய்யா. என் டிரீம் மொத்தத்தையும் நானே போட்டு உடைச்சிட்டேன். என்ன பண்றதுனே தெரியலை. பெரிய மன உளைச்சலா இருக்கு’னு சொன்னேன். 

லிங்குசாமி

கேமராமேன் சரவணன்தான் என்னை அந்தத் தயாரிப்பாளர்கிட்ட அழைச்சிக்கிட்டுப் போனவர். அதனால அவர்கிட்டயும் சொன்னேன். அவர் `நான் அவர்கிட்ட பேசுறேன்’னு சொன்னார். ஆனாலும், எனக்கு மனசே ஆறுதல் அடையலை. என் நிம்மதி, தூக்கம் எல்லாமே போயிடுச்சு. அந்தச் சமயத்துல என் ஃப்ரெண்ட் பிருந்தாசாரதி மட்டும் இல்லைனா நான் என்ன ஆகியிருப்பேன்னே எனக்குத் தெரியலை. 

அவர்தான் என்னை மயிலாப்பூர்ல இருக்கிற ராமகிருஷ்ணா மடத்துக்கு அழைச்சிக்கிட்டுப் போனார். அங்கே இருக்குற தியான மண்டபத்துல உட்கார்ந்து 20 நிமிஷம் தியானம் பண்ணினேன். அதன் பிறகு என் மனசுல ஒரு வைராக்கியம் பிறந்துச்சு. படம் பண்ணுகிறவரை டிரிங்ஸ், ஸ்மோக், எதையும் தொடுறதில்லைனு முடிவு பண்ணினேன். 

அன்னிக்கி நைட் 11:30 மணிக்கு எங்க அம்மாவுக்குப் போன் பண்ணி `எனக்குக் கல்யாணம் பண்ணணும்... சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கம்மா'னு சொன்னேன். கேமராமேன் சரவணன்னு சொன்னேன் இல்லையா... அவர் அந்தத் தயாரிப்பாளர்கிட்ட என்னைப் பத்தி எடுத்துச் சொல்லிப் பேசியிருக்கார். அந்தத் தயாரிப்பாளரும் சரி சொல்லிட்டார். அப்போ நான் அவர்கிட்ட கேட்டேன். `சார், இந்தப் புராஜெக்ட்டைப் பண்றோம், பண்ணலை. அது வேற விஷயம். அன்னிக்கு என்ன சார் நடந்துச்சு, அதை மட்டும் எனக்குச் சொல்லுங்க போதும்'னேன். அவர் கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை. பட வேலைகள், ஸ்கிரிப்ட் ஒர்க் இதெல்லாம் வேகமா நடந்துக்கிட்டிருக்கு. ஒரு பக்கம் கல்யாண ஏற்பாடும் நடந்துக்கிட்டு இருக்கு. வீட்டுல உள்ளவங்களும் உடனே எனக்கு நல்ல இடத்துல பெண் பார்த்துட்டாங்க. 
திருமணத்தன்னிக்குத் தாலிகட்டப் போறேன். அப்போதான் எனக்குத் தெரியும்... என் தயாரிப்பாளர் அந்தப் படத்தைத் தயாரிக்கலைங்கிற விஷயம். அப்படியே ஷாக்காயிட்டேன். 

லிங்குசாமி

மேரேஜ் முடிஞ்சு சென்னைக்கு வந்துட்டேன். இப்போ திரும்ப முதல்லேர்ந்து ஆரம்பிக்கணும். புதுசா தயாரிப்பாளர் பிடிக்கணும். மனைவியை ஊர்லேர்ந்து அழைச்சிக்கிட்டு வரணும். திரும்பத் தலையெல்லாம் கனக்க ஆரம்பிச்சிடுச்சு. 

நேரா ரூமுக்குப் போனேன். ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து எழுத ஆரம்பிச்சேன். எனக்கு முன்னே இருக்கக்கூடிய பிரச்னைகளை ஒண்ணு ஒண்ணா எழுத ஆரம்பிச்சேன். 

மனைவியை ஊர்லேருந்து அழைச்சிக்கிட்டு வரணும். அவங்களை எப்போ அழைச்சிக்கிட்டு வரணும்? சினிமா படம் இயக்கணும். இது மூணையும் தாண்டி எதுவும் இல்லை. ஆனா, எழுதிப் பார்க்கிறதுக்கு முன்னாடி ஏதோ பல நூறு பிரச்னைகள் இருக்கிற மாதிரி இருந்துச்சு. இப்போ மூணே மூணுதான். 

சரி. மனைவியைக் கூட்டிக்கிட்டு வந்துடலாம்னு முடிவு பண்ணி அழைச்சிக்கிட்டு வந்து வீடு பார்த்துவெச்சிட்டேன். அதுக்கப்புறம் சௌத்ரி சார்கிட்டே கதையைச் சொல்லி `ஆனந்தம்' படம் ஓகே பண்ணியாச்சு. இதுக்கு இடையில முக்கியமான விஷயம், அன்னிக்கு ராமகிருஷ்ணா மடத்தில் நான் செய்த மெடிடேஷனின் தொடர்ச்சியா எனக்குள்ள ஒரு சிஸ்டம் உருவாகிடுச்சு.

`ராமச்சந்திரா மிஷன்’னு ஒரு குருகுலம் ராமாவரத்தில் இருக்கு. அங்கே என் குருநாதர் பார்த்தசாரதி ராஜகோபாலாசார்யார் கிடைச்சார். 19 ஆண்டுகளாக அங்கே போய் மெடிடேஷன் பண்ணுவேன். என் வாழ்க்கையில் எவ்வளவு நெருக்கடியிலும் எனக்குத் தெம்பும் தைரியமும் தர்றது இந்த மெடிடேஷன்தான். `உத்தம வில்லன்' பட ரிலீஸின்போதுகூட எனக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். அதையெல்லாம் ஓவர் கம் பண்ணி என்னால் வர முடிஞ்சுதுன்னா அதுக்குக் காரணம் அந்த மெடிடேஷன்தான். 

எனக்கு எத்தனைப் பிரச்னை இருந்தாலும், அந்த விநாடியே உட்கார்ந்து வேலை பார்க்கவும் கதை கேட்கவும், படம் டைரக்ட் பண்ணவும் பின்புலமா நின்னு உதவுது. வெற்றி, தோல்வி இரண்டையுமே சரிசமமா பார்க்கிற மனநிலையைக் கொடுக்குது. 

பொதுவாக நல்ல குரு கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம்னு சொல்லுவாங்க எனக்குத் தொடக்கத்துலயே கிடைச்சது என்னுடைய பாக்கியம்னுதான் சொல்வேன். எனக்கு ஏற்படுற ஸ்ட்ரெஸ், மன அழுத்தம், மன இறுக்கம் இதெல்லாம் என்னை அணுகாம என்னைச் சுத்தி ஒரு பாதுகாப்பு வளையமா இருந்து காப்பத்துது.

எல்லாருடைய இதயத்துலயும் `டிவைன் லைட்' இருக்குனு நம்புறேன். இன்னிக்கு நானே இன்னொருத்தருக்கு தியானம் பண்ண கற்றுத்தரும் அளவுக்கு அது என்னை வளர்த்திருக்கு’’ சிரித்தபடியே சொல்கிறார் லிங்குசாமி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement