அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை... அப்படியென்ன சிறப்பு?

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இறந்தவர்களின் உடலை இலவசமாகக் கொண்டு செல்ல உதவும் தமிழ்நாடு அரசின் இலவச அமரர் ஊர்திகள்

அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை... அப்படியென்ன சிறப்பு?

ரணம்... துயரங்களின் உச்சம்! உலகின் எந்தத் திசையிலிருந்து கேட்டிருந்தாலும், நம்மைச் சிறிதளவாவது சலனப்படவைப்பவை மரணச் செய்திகளே! இரவு நேரம்... நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது... `ஐயோ... ஏதாவது மரணச் செய்தியாக இருக்குமோ?’ என்கிற அச்சத்தோடுதான் அழைப்பையே எடுப்போம். அந்தளவுக்கு மரணத்தை எளிதாகக் கடந்துவிட முடியாத நிலையில்தான், நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கிறோம். ஒருவேளை மரணமடைந்தவர் நமக்கு நெருக்கமானவராக இருந்தால், நம் வீட்டில் ஒருவராக இருந்தால் நிச்சயமாக அந்த நேரத்தில் நம்மால் இயல்பான மனநிலையில் இருக்க முடியாது.

அமரர் ஊர்தி

மரணத்தின் துயரம் இப்படியிருக்க, நமக்கு நெருக்கமானவர்கள் இறந்தநிலையில் பணக்கஷ்டமும் சேர்ந்துகொண்டால்?ரூபன் சந்தோஷ்

இறந்தவரின் உடலை அவரின் சொந்த இருப்பிடத்துக்கோ, வீட்டுக்கோ, நெருக்கமானவர்களிருக்கும் ஊருக்கோ தூக்கிச் செல்லக்கூட பணம் இல்லை என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் அவர்கள் படும் துயரம் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

அப்படிப்பட்ட நிலையிலிருப்பவர்களின் துன்பத்தைப் போக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் `இலவச அமரர் ஊர்தி சேவை.’ அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்ல இந்த ஊர்தி பயன்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்த இலவச அமரர் ஊர்தி சேவை செயல்பட்டுவருகிறது. வெகு சிலரே இந்த இலவச சேவையைப் பற்றி அறிந்திருக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு வசதி இருப்பதே தெரிவதில்லை. `108 ஆம்புலன்ஸ் சேவை’ வசதியைப்போல் இதுவும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.

இந்தச் சேவை குறித்து, இலவச அமரர் ஊர்தி மாநில திட்ட மேலாளர் ரூபன் சந்தோஷ் விரிவாக விளக்குகிறார்.

``2011-ம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 160 இலவச அமரர் ஊர்திகள் இருக்கின்றன. சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஊர்திகள் இருக்கின்றன. மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் மட்டுமே இந்த இலவச அமரர் ஊர்திகள் இருக்கும். ஆனால், அந்த மருத்துவமனைகளில் மட்டுமல்ல, எந்த அரசு மருத்துவமனையில் ஒருவர் இறந்தாலும், இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். '155377' என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற தகவலைத் தெரிவித்தால் போதும். ஊர்திகள் இருக்கிற மருத்துவனை என்றால், உடனடியாக வண்டி ஏற்பாடு செய்து தரப்படும். ஊர்தி இல்லாத மருத்துவமனையென்றால், அருகில் ஊர்திகள் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து வரவழைக்கப்பட்டு உடனடியாக அனுப்பிவைக்கப்படும்.

அமரர் ஊர்தி

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டில் ஒருவர் இறந்துவிட்டாலும்கூட, விமான நிலையத்திலிருந்து, உயிரிழந்தவரின் உடலை அவரின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கு உதவுகிறோம். அஸ்ஸாம், ஒரிசா, கொல்கத்தா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்து இறப்பவர்களையும், இந்தச் சேவையின் மூலமாக அவர்களின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்கிறோம். அவ்வளவு தூரம் வாகனங்களில் கொண்டு செல்ல முடியாது என்பதற்காக ரயிலில் கொண்டு செல்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். உடன் ஒருவர் இலவசமாக பயணிக்கவும் பயணச்சீட்டு எடுத்துக் கொடுக்கிறோம். பக்கத்து மாநிலங்களாக இருந்து, போகவேண்டிய ஊர் நூறு கிலோமீட்டருக்கு உள்ளே இருந்தால், வாகனங்களிலேயே கொண்டு செல்கிறோம். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இது, முழுக்க முழுக்க ஓர் இலவச சேவை.

உயிரிழந்தவர்களை ரயிலில் கொண்டு செல்லும் வசதியை தமிழ்நாட்டுக்குள்ளும் ஏற்படுத்தித் தருகிறோம். உதாரணமாக, சென்னையில் இறந்த ஒருவரை ராமநாதபுரத்துக்குக் கொண்டு செல்லவேண்டுமென்றால், இங்கிருந்து மதுரைக்கு ரயிலில் கொண்டு செல்ல உதவுவோம். ரயில், மதுரையை அடைவதற்கு முன்னதாகவே அங்கே இலவச ஊர்தி தயாராக இருக்கும். அங்கிருந்து அவர்களின் சொந்த ஊருக்கு வாகனத்தில் கொண்டு செல்வோம்.

வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த இலவச சேவையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 300 இறந்தவர்களின் உடல்களை இந்தச் சேவை வழியாக சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்ல உதவுகிறோம்.

ஊழியர்கள்

இன்னும் பெரும்பாலான மக்களுக்கு அரசின் இந்த இலவச சேவையைப் பற்றித் தெரியவில்லை. அனைவருமே தெரிந்துகொண்டு இயலாதவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் ரூபன் சந்தோஷ்.மருத்துவர் புகழேந்தி

இந்த இலவச சேவை குறித்து பொதுநல மருத்துவர் புகழேந்தி சில வேண்டுகோள்களை முன்வைக்கிறார்...

``இது வரவேற்கக்கூடிய ஒரு திட்டம். இதைச் செய்யவேண்டியது அரசின் கடமையும்கூட. அதே நேரத்தில், அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளில் இறப்பவர்களின் உடலையும் அவர்களின் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல உதவி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்காவது இந்த சேவையை உறுதிப்படுத்த வேண்டும்.

சில இடங்களில் ஊர்தியின் ஓட்டுநர்கள் பணம் கேட்டு, நெருக்கடி கொடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அது போன்ற செயல்கள் இந்தத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும். இதை மட்டும் சரி செய்துவிட்டால் இது மிகவும் சிறப்பான, அவசியமான ஒரு சேவை’’ என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

அமரர் ஊர்தி

(இலவச அமரர் ஊர்திக்கு தொடர்புகொள்ளவேண்டிய எண்கள்: 155377 மற்றும் 28888180. மேலும், அந்தந்த மருத்துவமனைகளின், மருத்துவமனை நிலைய அதிகாரிகளையும் (Resident medical officer) தொடர்புகொள்ளலாம்.)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!