சீசன் ஆரம்பம்... சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? - மருத்துவர்கள் சொல்வது என்ன? #Mango

மாம்பழம் நல்லதா, கெட்டதா?

சீசன் ஆரம்பம்... சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? - மருத்துவர்கள் சொல்வது என்ன? #Mango

`பழங்களின் அரசன்’ மாம்பழம் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. `ஆனாலும் இந்த வருடம் கொஞ்சம் லேட்’ என்கிறார்கள் தமிழகத்திலிருக்கும் மாம்பழப் பிரியர்கள். `இது மார்ச் மாத இறுதிக்குள் சந்தைக்கு வந்துவிடும்... இந்த முறை வருவதற்கு ஏப்ரல் முதல் வாரமாகிவிட்டது’ என்கிறார்கள் பெங்களூரிலிருக்கும் இதன் ரசிகர்கள். `எத்தனை பழங்கள் வந்தாலும் இதற்கு ஈடு இணையில்லை’, `நறுக்கிச் சாப்பிடக் கூடாது; கடித்துச் சாறு வழிய வழிய அப்படியே சாப்பிட வேண்டும்’, `இதிலிருக்கும் சத்துகள் அபாரமானவை’... என மாம்பழம் குறித்து நாம் கேட்டறியும் `ருசி’கர தகவல்கள் ஏராளம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை கொண்டாடும் இந்தப் பழத்தின் அருமையை உணர்ந்துதான் தமிழர்கள் `முக்கனிகளில்’ முதன்மையான ஒன்றாக வைத்திருக்கிறார்கள். 

`பங்கனப்பள்ளி’, `நீலம்’ `அல்போன்சா’, `செந்தூரா’, `மல்கோவா’... ஏ யப்பா! இதில்தான் எத்தனை வகைகள்! வகைகள் இருக்கட்டும்... மாம்பழம் நமக்கு அள்ளித்தரும் ஆரோக்கியப் பலன்கள் அபாரம்! `ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது; ஏராளமான சத்துகளைக் கொண்டது. இதைச் சாப்பிடுவதால் இதய நோய், விரைவில் முதுமை அடைதல், புற்றுநோய் போன்றவை பாதிக்காமல் காத்துக்கொள்ளலாம்’ என்று இதன் அருமை பெருமைகளை அடுக்குகிறார்கள் மருத்துவர்கள்.

மாம்பழத்தை ஜூஸ், ஸ்மூத்தி என நமக்குப் பிடித்த சுவையில், வடிவில் தயார் செய்து சாப்பிடுகிறோம். `இப்படிச் சாப்பிடுவது டாக்டர் ஷைலஜாநல்லதுதானா... மாம்பழத்தில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன... சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?’ போன்ற கேள்விகளை சித்த மருத்துவர் ஷைலஜாவிடம் கேட்டோம். 

``மாம்பழ சீசன் ஆரம்பமாகிவிட்டது. இது உடலுக்கு ஆரோக்கியமானது.  நார்ச்சத்து நிறைந்திருப்பதால் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடலாம். இது மலச்சிக்கலைப் போக்கும்; குடல் நோய்களைக் குணப்படுத்தும். இந்த சீசன் முழுக்கத் தொடர்ந்து சாப்பிட்டால்,  குடல் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

மாம்பழம் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஃபோலிக் ஆசிட் இதில் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மாங்காய், மாம்பழத்தின் மீது ஆசை அதிகமிருக்கும். அதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடக் கூடாது. `இதை அதிகமாகச் சாப்பிடும் கர்ப்பிணியின் வயிற்றிலுள்ள குழந்தைக்குக் கண் நோய் வர வாய்ப்புள்ளது’ என்று அகத்தியர் கூறியிருக்கிறார். எனவே, அளவுடன் சாப்பிட்டால் நலம் பெறலாம்.

உடல் மெலிந்தவர்கள், ரத்தச்சோகை உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு மாம்பழங்கள் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். அதே நேரத்தில், சாப்பிடச் சுவையாக இருக்கிறது, விரைவில் செழிப்பான உடல்வாகு பெற வேண்டும் என்பதற்காக அதிகமாகச் சாப்பிட்டுவிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து உடலில் நமைச்சல், புண், கண் நோய் போன்றவை ஏற்படலாம்.

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா... சாப்பிடக்கூடாதா? என்று பல ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும், அவற்றின் முடிவுகள் தெளிவாக இல்லை. சர்க்கரைநோய் உள்ளவர்கள் இதை உணவுடன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 160, 170மி.கி./டெ.லி என்ற அளவுக்கும் குறைவாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் காலை நேரத்தில் இட்லிக்குப் பதிலாகவோ, மதிய உணவுக்குப் பதிலாகவோ மாம்பழம் சாப்பிடலாம். 100 கிராம் வரை மட்டும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது.

மாம்பழம் என்றில்லை. எந்தப் பழத்தையும் பால், தயிருடன் சேர்த்துச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பால், தயிருடன் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடும்போது சுவையாக இருக்கும். ஆனால், பழங்களிலுள்ள சத்துகள் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். எனவே, பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. அப்படிச் சாப்பிடுவதால் நார்ச்சத்து உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் நம் உடலுக்குக் கிடைக்கும்''  என்கிறார் ஷைலஜா.

``மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?’’ - பொது மருத்துவர் ஆர்.சுந்தரராமனிடம் கேட்டோம். டாக்டர் சுந்தரராமன்
``மாம்பழத்தை `பழங்களின் அரசன்’ (King of Fruits) என்பார்கள். அந்த அளவுக்குச் சிறந்தது. இதில் ரத்தத்தில் குளூகோஸின் அளவை பாதிக்கும் கிளைசெமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) இருப்பதால்தான் சர்க்கரை நோயாளிகள் இதை அதிகம் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுகிறது. 

நம் ஊரைப்போலவே தாய்லாந்திலும் அதிகமாகக் கிடைக்கிறது மாம்பழம். அங்கிருக்கும் சில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். அந்த ஆய்வில், மாம்பழத்தில் குறைந்த அளவிலேயே கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், இதுபோன்ற ஆராய்ச்சிகள்  இந்தியாவில் மேற்கொள்ளப்படாததால், சர்க்கரை நோயாளிகளை மாம்பழத்தைச் சாப்பிடுங்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

சில பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட சர்க்கரை நோயாளிகள் மாம்பழமே சாப்பிடக் கூடாது என்றுதான் சொன்னார்கள். மற்ற பழங்களையும் உணவுகளையும் குறைத்துக்கொண்டு மாம்பழத்தைச் சாப்பிடலாம். ஆனால், மாம்பழத்தில் கலோரியும், சுக்ரோஸும் (Sucrose) அதிகம். இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு குறைவாகச் சாப்பிடலாம். மாம்பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், வைட்டமின்கள், நார்ச்சத்துகள், தாது உப்புகள் என ஏராளமான சத்துகளும் தாதுக்களும் இருக்கின்றன.

 

ஒரு கப் மாம்பழத்தில் 100 கலோரி இருக்கிறது. இது அதிக நார்ச்சத்து கொண்டது என்பதால், மலச்சிக்கலைப் போக்கும். இதிலிருக்கும் பீட்டா கரோட்டின் புற்றுநோயைத் தடுக்கும். இப்படி மாம்பழத்தின் எண்ணற்ற நன்மைகளை அடுக்க முடிந்தாலும், நமது தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் (National Institute of Nutrition) மாம்பழம் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் இதன் எண்ணற்ற சத்துகளை நாம் அறிந்துகொள்ளலாம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!